சிக்கந்தர் தோல்விக்கு காரணம் இதுதான்.. மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்!
சென்னை: தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் நிச்சயமாக ஏ.ஆர்.முருகதாசிற்கு கம்பேக் கொடுக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனங்களை பெறவில்லை. இதுகுறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ்,ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் என வெற்றிப்படத்தை கொடுத்து இருக்கிறார். ஹிந்தியில் இவர் இயக்கிய 'கஜினி' படம் ஹிந்தித் திரையுலகத்தில் 100 கோடியை வசூலித்தது. அதன்பின் அவர் இயக்கிய 'ஹாலிடே' படம் சுமாரான வெற்றிப் படமாகவும், 'அகிரா' தோல்விப் படமாகவும் அமைந்தது. தெலுங்கில் அவர் இயக்கிய 'ஸ்டாலின்' வெற்றிப் படமாகவும், மகேஷ் பாபுவை வைத்து இவர் இயக்கிய 'ஸ்பைடர்' தோல்விப் படமாகவும் அமைந்தது.

ஏ.ஆர்.முருகதாஸ்: இவர் கடைசியாக சல்மான் கானை வைத்து இயக்கிய சிக்கந்தர் படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. ஏ.ஆர். முருகதாஸின் படமா இது என்று கேட்கும் அளவிற்கு இருந்தது. இப்படியொரு திரைப்படத்தை கண்டிப்பாக முருகதாஸ் பண்ணியிருக்க மாட்டார் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அண்மையில் சிக்கந்தர் படம் படுதோல்வி அடைந்தது குறித்து பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், தாய் மொழியில் படத்தை எடுக்கும் போது ஒரு பலம் கிடைக்கும். அது மிகப்பெரிய யுக்தியாக இருக்கும். ஏன் என்றால், இங்கு என்ன நடக்கிறது... இப்போதைக்கு எது டிரெண்டாகிறது என்பது நன்றாக தெரியும். அந்த டிரெண்டை படத்தில் வைக்கும் போது, அது ரசிகர்களுடன் நன்றாக கனெக்ட் ஆகும்.
தாய் மொழி தான் பலம்: இதே மற்ற மொழிகளில் படம் எடுக்கும் போது அதில் இருக்கும் நுணுக்கங்கள், அங்கு இருக்கும் இளம் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. வெறும் ஸ்கிரிப்ட், ஸ்கிரின் ப்ளையை மட்டும் நம்ப வேண்டி இருக்கிறது. அப்படி பார்க்கும்போது தமிழ் படத்தை இயக்கும் போது தான் நம்மளுடைய முழு யுக்தியை காட்ட முடியும். தெலுங்கு ஓரளவிற்கு ஓகே கிட்டத்தட்ட நம்மைப் போல் தான் அவர்களும் இருப்பார்கள். ஆனால், ஹிந்தி சுத்தமாக எதுவுமே புரியாது. நாம் ஒரு டயலாக்கை எழுதிய பிறகு அதை இங்கிலீஷில் டிரான்ஸ்லேட் செய்வார்கள் பின் அதை ஹிந்தியில் டிரான்ஸ்லேட் செய்து அதன் பிறகு தான் படத்தை எடுப்பார்கள்.
இதனால், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நம்மால் கெஸ் தான் செய்ய முடியுமே தவிர, இதைத்தான் பேசுகிறார்கள் என்பது உறுதியாக சொல்ல முடியாது. மொழி தெரியாத ஊரில் திரைப்படத்தை இயக்குவது என்பது, ஒரு கையில்லாத, ஊனமுற்றவர் போல் இருக்கும். தாய் மொழியில் படத்தை எடுப்பது போல முழு பலத்துடன் படத்தை இயக்க முடியாது என்று ஏ.ஆர்.முருகதாஸ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











