20 அடி ஆட்கள்.. படத்தை மிரட்டி வாங்கிய டிவி நிறுவனம்.. மிஷ்கின் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரா?
சென்னை: 'சித்திரம் பேசுதடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது தடத்தை பதித்தார் மிஷ்கின். அந்த படத்தை தொடர்ந்து, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த மிஷ்கின், 'நத்தலால' படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அதில் நடித்தும் இருந்தார். மிஷ்கின் படத்தில் தனித்துவம் இருக்கும் என்பதால், இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. 'சைக்கோ' படத்துக்கு பிறகு கடந்த 5 வருடங்களாக மிஷ்கின் இயக்கத்தில் எந்த படமும் வெளியாக வில்லை.
பிசாசு 2, டிரைன் படத்தை இயக்கி வருகிறார். ஆனால், அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநராக இருந்த மிஷ்கின் சவரக்கத்தி, மாவீரன், லியோ, டிராகன் போன்ற படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேடை பேச்சு என வந்துவிட்டால், உணர்வுகளை கொட்டி தீர்க்கும் மனம் கொண்ட மிஷ்கின், ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனம் தன்னை மிரட்டியதையும், நண்பர் நம்ப வைத்து ஏமாற்றியதையும் மனம் நொந்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மிரட்டினார்கள்: என்னுடைய திரைப்படமான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது என்று சொல்வதை விட, வெளிவர விடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த நாள் இரவு தான் படம் வெளியானது. படம் வெளியாகி 10 நாள் கழித்து, சாட்டிலைட் உரிமையை வாங்குவதற்காக வந்தார்கள். அப்போது எனக்கு நெருக்கமான நண்பர் பெரிய இயக்குனர், எதைப்பற்றியும் கவலைப்படாதே, இந்த படத்தை நல்ல விலைக்கு விற்று விடலாம் என சொல்லி என்னை அழைத்து சென்றார். நானும் அந்த தொலைக்காட்சியின் அலுவலகத்தில் இருக்கும் ஒரு அறைக்கு சென்றேன். அந்த அறையில் இருவது பேர் இருந்தார்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தை 75 லட்சம் ரூபாய் கேட்டார்கள். அப்போது நான், இந்த படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்து இருக்கிறேன், படம் மிகவும் நல்ல படம் ரெண்டு கோடியாவது தாங்க என்று கேட்டேன். ஆனால் அவர்கள் தராமல் என்னுடன் ஆர்கியுமென்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
பல துரோகங்கள்: அப்போது நான் சுற்றி பார்த்தேன், அறையில் 20 தடியர்கள் இருந்தார்கள் என்னை மிரட்டி, கையெழுத்து போட வைத்தார்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்திற்கு வெறும் 75 லட்சம் ரூபாய்க்கு கையெழுத்து போட்டு கொடுத்தேன். அந்த படம் அந்த டிவியில் 80 முறை போடப்பட்டது. அந்தச் செக்கை எடுத்து சென்று, அவர்கள் முன்னால் கிழித்துப் போட்டு விட்டு, நான், சென்னைக்கு வரும் போது ஒரு வெள்ளை பேப்பரும், ஒரு பென்சிலுடன் வந்தேன். இவ்வளவு வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். கஷ்டப்பட்டு மீண்டும் இதே இடத்திற்கு வருவேன் என்று சொன்னேன் இன்றும் நான் இதே மேடையில் தான் நின்று கொண்டு இருக்கிறேன். அதில், நான்கு பேர் இறந்து விட்டார்கள், எனக்கு துரோகம் செய்த அந்த இயக்குனர் இன்றும் இருக்கிறார். ஒவ்வொரு தருணமும் நான் துரோகத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன் என்று மிஷ்கின் வேதனையோடு பேசி இருந்தார்


Click it and Unblock the Notifications











