twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பசங்க 2.. சூர்யா, அமலா பால், பிந்து மாதவி...- இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி

    By Shankar
    |

    தமிழ் சினிமாவின் பிஸியான இயக்குநராகிவிட்டார் ஆர் பாண்டிராஜ். பசங்க படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் தொடர்ந்து, வம்சம், மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைத் தந்தவர், இப்போது இது நம்ம ஆளு, பசங்க 2, கதகளி என மூன்று படங்களை முடித்துவிட்டு, ரிலீசுக்குக் காத்திருக்கிறார்.

    இவற்றில் பசங்க 2 டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகிறது.

    இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் அளித்த பேட்டி:

    பசங்க படத்தில் நான், என் நண்பர்கள், என்னுடைய ஆசிரியர்கள், நாங்கள் ரசித்த உலகை படமாக ரசிகர்களுக்கு அளித்திருந்தேன்.

    ஆனால் பசங்க 2 முற்றிலும் மாறுபட்ட ஒன்று. பசங்க 1 ல் நடித்த எந்த கதாபாத்திரங்களும் இதில் இடம் பெறவில்லை. முதலில் கூறியது போல் பசங்க 2 முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    குழந்தைகள் கல்வி

    குழந்தைகள் கல்வி

    பசங்க 2 படத்தில் எடுத்துக் கொண்ட மையக் கதை என்னவென்று பார்த்தால் நம்ம குழந்தைகள், இங்கு நகரத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் நம் குழந்தைகளைப் பற்றியது. இந்த நகரத்து குழந்தைகளின் உலகத்தையும் அவர்கள் பயிலும் கல்வி முறையைப் பற்றியும், அதில் எந்த மாதிரியான கல்வி முறை சிறந்தது என்றும் காட்டியுள்ளோம்.

    ஆய்வு

    ஆய்வு

    இந்தப் படத்திற்கான கதை 'வம்சம்' திரைப்படம் முடிந்த பொழுதே கிடைத்து விட்டது. ஆனால் இந்த மாதிரியான கதையை உடனே எடுத்து மக்களுக்கு சொல்ல முடியாது. அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு இருக்க வேண்டும். அதே சமயத்தில் படத்தில் சொல்லிய கருத்துகளின் நம்பகத் தன்மை குறையாமல் இருக்க வேண்டும். அதனால் சுமார் இரண்டு வருடம் ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாக இருந்தது.

    அதிபுத்திசாலி குழந்தைகள்

    அதிபுத்திசாலி குழந்தைகள்

    அவ்வளவு நாள் சும்மாவும் இருக்க முடியாது என்பதால் மற்றொரு பக்கம் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தையும் இயக்கினேன். படத்திற்கு ஆய்வு என்பது சின்ன சின்ன விஷயங்கள் மட்டுமே யாரும் இது அறிவியல் ரீதியாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். "அட்டன்சிவ் டைபர் ஹைபர் டிஆக்டிவ்" என்பது இன்றைய காலகட்டத்தில் வளரும் குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைளைப் பற்றிய ஆய்வுகள் அதிகமாக கதைக்கு தேவைப்பட்டது. இப்படி பட்ட குழந்தைகள் நோயினால் பாதிக்கப் பட்ட குழந்தைகள் கிடையாது. இவர்கள் "சூப்பர் கிட்ஸ்". அதீத புத்திசாலிகள் என்றும் சொல்லலாம்.

    இரண்டு உதவி இயக்குநர்கள்

    இரண்டு உதவி இயக்குநர்கள்

    ஏன் என்றால் சாதாரணமாக மனிதனின் ஐக்யூ 110 என்றால் அந்த குழந்தைகளுக்கு ஐக்யு 120, 130 இருக்கும். அவர்களை நாம் சாதாரணமாகப் பார்த்தால் எப்போதும் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு துறுத்துறு வென்று இருப்பார்கள். அவர்களைப் பற்றிய படம் என்பதால் ஆய்வில் ஏதாவது இதுபோன்ற படம் வந்திருக்கிறதா என்று பார்த்தோம் அப்படி எதுவும் இதுவரை வரவில்லை. மாதிரிப் படங்கள் இல்லாத காரணத்தால் அதே போல் இருக்கும் குழந்தைகளை சந்தித்து அவர்களை பற்றிய விவரங்களை ஆய்வில் சேகரித்தோம். அதற்காக இரண்டு உதவி இயக்குனர்களை பிரத்யேகமாக வைத்து அதிகமாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் குழந்தைகளை பார்த்து அவர்களுடன் கலந்துரையாடி விவரங்களை சேகரித்தோம். அதன் பின்னே படத்தை எடுக்க ஆரம்பித்தோம்.

    டாக்டர் சூர்யா

    டாக்டர் சூர்யா

    குழந்தைகள் மிகவும் ஜாலியாக வந்து லூட்டி அடித்து ரசிகர்களை ரசனையில் ஆழ்த்துவார்கள் ஆனால் இந்த படத்தில் எந்த விதமான காதல் காட்சிகளும் இடம் பெறாது. இதில் சூர்யாவும் ஒரு குழந்தைகள் மருத்துவராக வந்து குழந்தைகளைப் பற்றியும் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் நாம் அவர்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு விரிவாக எடுத்துரைப்பார். அதுவும் அறிவுரை சொல்வது போல் இல்லாமல் ரசிக்கும் படியாக தான் இருக்கும். எடுத்துக்காட்டாக குழந்தைகள் சேட்டைகள் செய்யும் அதை நாம் நம் சிறுவயதில் நம் அப்பா, அம்மாவிடம் செய்த தருணங்களை நினைவுபடுத்தும் விதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு நாம் ஏன் கோபப்பட வேண்டும் என்பதை எடுத்துரைப்பது தான் சூர்யாவின் கதாபாத்திரம்.

    சூர்யாவுக்காக மாற்றம் செய்யவில்லை

    சூர்யாவுக்காக மாற்றம் செய்யவில்லை

    அதை தவிர்த்து இந்த படத்தில் சூர்யாவிற்காக எந்த மாற்றமும் கதையில் இல்லை இது முழுக்க முழுக்க பசங்களுக்கான திரைப்படம். சூர்யா,அமலாபால் போன்றவர்கள் சில முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் இதுபோன்ற கதைகளில் சூர்யா போன்ற நாயகர்கள் நடிப்பது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகமாக இருக்கும். அவர்களின் ஆதரவு படத்துக்கு மிகவும் முக்கியம்.

    சூர்யா நேரடி தெலுங்குப் படம் பண்ண வேண்டும்

    சூர்யா நேரடி தெலுங்குப் படம் பண்ண வேண்டும்

    இந்த முறை தெலுங்கு இசை வெளியிட்டு விழாவிற்க்கு போனபோது சூர்யாவிற்கு தமிழுக்கு இணையாக தெலுங்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது பெயரை மேடையில் உச்சரிக்கும் போதே அவ்வளவு கைத்தட்டல், ஆரவாரங்கள் என்று அரங்கமே அதிர்ந்தது. நான் பயணத்தில் சூர்யாவிடம் கூறினேன், சீக்கிரமாக நேரடி தெலுங்கில் நடித்து உங்களுடைய ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்றேன். அப்படிப்பட்ட நடிகர் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருப்பது பெருமைக்குரியது.

    சூர்யாவும் நானும்..

    சூர்யாவும் நானும்..

    இந்தப் படத்தை எனது தயாரிப்பு நிறுவனத்தில் முதலில் துவங்கினாலும் நாம் சொல்வது ஒரு நல்ல கருத்து, நல்ல படம் இதை பணத்துக்காக இல்லாமல் ஒரு நல்ல விழிப்புணர்வுக்காக இருக்க வேண்டும் என்பதால் இதை சூர்யாவின் வாயிலாக கொண்டு செல்லும் போது இன்னும் அதிக மக்களை சென்றடையும் என்ற நல்ல எண்ணத்தில் தான் நானும் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றினோம்.

    இந்தப் படத்தைப் பார்த்து விட்டு வெளியே செல்லும் ஒவ்வொருவரும் இரண்டு மணி நேரம் நல்ல ஒரு கருத்தை கொடுத்துள்ளனர், நாமும் நம் குழந்தையை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் ஏற்படும்.

    குழந்தையை எப்படி வளர்ப்பது மற்றும் குழந்தை இல்லாதவர்கள் எப்படி குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிந்து கொள்வார்கள்.

    அதுமட்டுமின்றி இந்த படத்தை மற்றவர்களையும் பார்க்குமாறு சொல்வார்கள். அதுதான் எங்களின் வெற்றியாக அமையும்.

    ஏன் அமலா பால்?

    ஏன் அமலா பால்?

    சூர்யாவிற்கு ஒரு ஜோடி கதைக்கு தேவைப்பட்ட நேரத்தில் சூர்யா - ஜோதிகா என்று முடிவு செய்தோம். அவர்களும் சரி என்று சொன்னார்கள். பின்னர் ஜோதிகா அவர்கள் 36 வயதினிலே படத்தில் நடித்துக் கொண்டு இருந்ததால், இதில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சூர்யாவுக்கு ஜோடி யார் என்று யோசிக்கையில் அமலாபால் இருந்தால் சரியாக இருக்கும் என்பதால் இயக்குநர் விஜயிடம் பேசினேன். அவர் திருமணத்திற்க்கு பிறகு நடிக்க மாட்டார் என்றார். இருந்தாலும் குழந்தைகள் படம் என்பதால் கேட்டுப் பார்க்கிறேன் என்று அம்லாபாலிடம் பேசினார். அமலாவும் நடிக்க ஒப்புக்கொண்டார்.

    பிந்து மாதவி

    பிந்து மாதவி

    அதே போல் பிந்து மாதவி அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்கள் அனைவரும் இணைவதற்குக் காரணம் ஒன்றுதான். குழந்தைகளுக்கான படம் என்பதுதான்.

    என் குழந்தைகள்

    என் குழந்தைகள்

    குழந்தைகளுக்கான படம் என்பதில் தீவிரமாக இருக்க காரணம், எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஒருவன் பிளே ஸ்கூல் போகிறான் இன்னொருவன் யு கே ஜி படிக்கிறான். இருவரும் அளவுக்கு அதிகமாக சேட்டைகள் செய்வார்கள். அவர்களுக்கு வேலையே எங்களது வீட்டு சுவரில் பேனா, பென்சில் வைத்து கிறுக்குவதுதான்.

    நாங்கள் அவர்களுக்கு கிறுக்க பென்சில் போன்றவற்றை வாங்கி கொடுப்பதுதான் வேலையே. என் வீட்டிற்கு வந்தாள் புரியும். ஆனால் அதுதான் என் வீட்டிற்கு அழகு. சில சமயங்களில் அவர்கள் வெளியூர் சென்றிருந்தால் அந்த ஓவியங்கள் எங்களிடம் பேசுகின்றன. அதுதான் ஆனந்தம்.

    குழந்தைகள் மீது திணிக்க வேண்டாம்

    குழந்தைகள் மீது திணிக்க வேண்டாம்

    வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி குழந்தைகளிடம் எதையும் திணிப்பது கிடையாது. அவனுக்குப் பிடித்து இருந்தால் மட்டுமே பள்ளிக்கு அனுப்புகிறேன். என்ன தரம் வாங்கினாலும் அவனைப் பாராட்டுகிறேன். அதை அவன் ரசிக்கிறான். இப்பவே அவனுக்கு இசையில் அதிக ஆர்வம் உள்ளது. எனது படத்தின் பாடல்களை அவனுக்குப் போட்டுக் காட்டுவேன். அவன் ஆடினால் பாட்டு ஹிட்டு.. இல்லை என்றால் பாட்டை மாத்து என்று சொல்லிவிடுவான்.

    சோட்டா பீமா

    சோட்டா பீமா

    அவனுக்கு பசங்க 2 வில் உள்ள சோட்டா பீமா பாடல் மிகவும் பிடிக்கும். வீட்டுக்குப் போனால் அந்த பாடலைத்தான் போட்டு ஆடுவான். என் அப்பா எனக்கு இந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்தது கிடையாது.

    அப்பா தராத சுதந்திரம்

    அப்பா தராத சுதந்திரம்

    நான் சுமாராக படித்ததால் என்னை அடி பின்னி எடுத்துவிடுவார். எப்போதும் என்னை என்னுடன் படித்த ஆசிரியர் மகனுடன் ஒப்பிட்டுப் பேசுவார். அவர் பள்ளிக்கு போகாத காரணத்தால் அவருடைய ஆசைகளை என்னிடம் திணித்து நிறைவேற்ற ஆசைப்பட்டார். ஆனால் நான் என் அப்பா போல் கிடையாது. என் அப்பாவிடம் நான் சினிமாவுக்கு போகிறேன் என்றேன். அவர் ஜாதகம் பார்த்து விட்டு உனக்கு இரும்பு கடைதான் சரியாக வரும். நீயும் அண்ணனை போல் கடை வைத்துவிடு என்றார். அப்பாவை எதிர்த்து சினிமாவிற்கு வந்தேன். ஒவ்வொருமுறையும் புதிய படம் இயக்கும் போதும் முதல் படம் இயக்குவது போல்தான் இருக்கிறது.

    விஷால் படத்தைவிட..

    விஷால் படத்தைவிட..

    இன்னும் நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன் .அதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. எனக்கு விஷால் படத்தை விட பசங்க 2 படத்தில் ஊதியம் குறைவுதான். ஆனால் என்னைப் பெறுத்தவரை எத்தனை படம் இயக்கினாலும் குழந்தைகளுக்காக எப்போதும் ஒரு படம் இயக்க வேண்டும் என்பதே என் ஆசையும் மகிழ்ச்சியும்.

    காக்கா முட்டை மாதிரி...

    காக்கா முட்டை மாதிரி...

    சமீபத்தில் காக்கா முட்டை பார்க்கும் போது அதுபோல் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்குள் தோன்றியது. எப்போதும் என் இயக்கத்தில் நல்ல படங்களும் வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். பசங்க 2 குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் வந்து ரசிக்கும் படியாக இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை," என்றார்.

    English summary
    Pasanga 2 director R Pandiraj's exclusive interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X