பாக்யராஜ் எனக்கு துரோகம் செய்த நண்பன்.. மவுண்ட் ரோட்டில் கல்லை தூக்கி.. மனம் விட்டு கொட்டிய R சுந்தர்ராஜன்
சென்னை: தமிழ் சினிமா பல வெள்ளி விழா நாயகர்களைக் கண்டுள்ளது. அவற்றில் ஒரு வெள்ளி விழா நாயகன் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன். இவரது திரைப்பயணம் பயணங்கள் முடிவதில்லை என்ற வெற்றிப் படத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு என பல படங்களைக் கொடுத்துள்ளார். இவரது குழந்தை பருவத்தில் இருந்தே உடன் இருந்த பாக்யராஜ் தனக்கு துரோகம் செய்த நண்பன் என்று மனம் விட்டு சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரது பேட்டியில், " நானும் பாக்யராஜும் ஒன்றாம் வகுப்பில் ஒன்றாக படித்தவர்கள். நாங்கள் இருவரும் மிகவும் உயிருக்கு உயிரான நண்பர்களாக வளர்ந்தோம். கோவையில் நாங்கள் இருவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். கோவையில் பாக்யராஜை யாராவது திரும்பிப் பார்த்தாலே நான் அடிப்பேன் அந்த அளவுக்கு நெருக்கமான நண்பன்.
சினிமா வாய்ப்புக்காக இருவரும் சென்னை வந்தோம். நான் நேரடியாகவே சென்னை வந்துவிட்டேன். பாக்யராஜ் பெங்களூருக்கு எல்லாம் சென்று வாய்ப்பு தேடிவிட்டு, சென்னை வந்தார். எங்கள் இருவரில் பாக்யராஜ் தான் கேமரா ஏங்கிள் குறித்து எல்லாம் பேசுவார். நான் நினைத்துக் கொண்டது என்னவென்றால், நாங்கள் இருவரும் இணைந்தே படத்தை இயக்குவோம் என்பதுதான். ஆனால் அது நடக்கவில்லை. அவர் மனதில் என்ன யோசித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.

நாங்கள் தங்கியிருந்த அறைக்கு தூயவன் வருவார். அவர் பாரதிராஜா என்ற இயக்குநர் வந்துள்ளார். அவருக்கு உதவி இயக்குநர்கள் தேவை என்று கூற, நானோ பாக்யராஜ் போகட்டும். பாக்யராஜ் இயக்குநர் ஆகிவிட்டால் நானும் இயக்குநர் ஆகிவிடலாம் என்று யோசித்தேன். அதேபோல் பாக்யராஜ் சென்றார். புதிய வார்ப்புகள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்த போது, நடிப்பதில் ஆர்வமே இல்லாத பாக்யராஜ் அன்று இரவே சொல்லாமல் கொள்ளாமல் அறையில் இருந்து புறப்பட்டு விட்டார்.
நண்பனின் வெற்றி: அதன் பின்னர் அவர் கதாநாயகன் ஆகிவிட்டார். நான் வழக்கம் போல பசியோடு வாய்ப்புக்காக சென்னையை வலம் வந்து கொண்டு இருக்கிறேன். அப்போது பாக்யராஜிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில். " நீ ஊருக்கு போய், உனது சகோதரிகளின் திருமணத்தை முடித்து வை. நான் இயக்குநர் ஆனதும் சொல்லி அனுப்புகிறேன். அப்போது வந்து என்னுடன் இணைந்து கொள்" என்று இருந்தது. நான் அந்த கடிதத்திற்கு நன்றி என்று பதில் எழுதி அதே கடிதத்தை அனுப்பிவிட்டேன். பாக்யராஜின் மௌன கீதங்கள் படம் பார்க்க போனேன். அந்த படத்தை பார்த்து நான் வியந்துவிட்டேன். நண்பன் வென்று விட்டான் என்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.
கல்லை தூக்கி: படம் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். தியேட்டரின் மேலே இருந்த பாக்யராஜ் எங்கள் இருவருக்கும் பழக்கமான பழனிசாமி மூலம் கூப்பிட்டு விட்டார். நான் போடா என்று சொல்லிவிட்டு நடந்து வெளியே வந்துவிட்டேன். மவுண்ட் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருக்கிறேன். பென்ஸ் காரில் வந்த பாக்யராஜ் என்னை மீண்டும் பழனிச்சாமியை வைத்து அழைக்கிறார். நான் வரமாட்டேன் என்கிறேன். ஒரு கட்டத்தில் அடிக்க கல்லைத் தூக்கி விட்டேன். உடனே பாக்யராஜ் அங்கிருந்து பழனிச்சாமியை நோக்கி, நீ வாடா அவன் சொன்னால் கேட்க மாட்டான் என்று கூறுகிறார்.
வருத்தம்: எனக்குள் இருப்பது ஒன்றுதான், பாக்யராஜ் அழைத்திருந்தால் சென்றிருப்பேன். ஆனால் அந்த பழனிச்சாமியை விட்டு அழைத்து நான் போகும் அளவுக்கு எங்கள் இருவருக்குமான பழக்கம் இல்லை" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











