ஆடை படத்துல நான் பண்ண பெரிய தப்பு.. அனுராக் காஷ்யப்பே திட்டினாரு.. டைரக்டர் ரத்னகுமார் ஓபன் டாக்!
சென்னை: வைபவ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தான் ரத்னகுமார். அவர் எடுத்த முதல் படம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்த படம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகை அமலா பாலை முழு நிர்வாணமாக ஆடையின்றி நடிக்க வைத்து அந்த படத்துக்கு 'ஆடை' என டைட்டில் வைத்திருந்தார் ரத்னகுமார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நண்பரான ரத்னகுமார் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் லியோ படங்களுக்கு லோகியுடன் இணைந்து ஸ்க்ரிப்ட் மற்றும் வசனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். லியோ படத்தின் வெற்றி விழாவில் ரத்னகுமார் என்னதான் பருந்து உயர பறந்தாலும் பசிச்சா இரையைத் தேடி கீழத்தானே வரணும் என ரஜினிகாந்த் பேச்சுக்கு கவுன்ட்டர் பேச்சாக பேசி ரஜினிகாந்த் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் கூலி படத்தில் ரத்னகுமார் வொர்க் பண்ண முடியாமல் போக அதுவும் ஒரு காரணம் என பேசிக் கொள்கின்றனர். அடுத்ததாக ஜெயம் ரவி மற்றும் சூர்யா படங்களில் பணியாற்றி வருவதாகவும் ரத்னகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேயாத மான் சரியா பண்ணல: தனது முதல் படமான மேயாத மான் படம் ரசிகர்களை கவர்ந்தாலும் அந்த படத்தில் நிதானமே இருக்காது என்றும் ஆடை படத்தில் தான் அந்த நிதானம் எனக்கு செட்டானது என்றும் கூறியுள்ளார். பல இடங்களில் ப்ரீத்தே இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பது போலத்தான் எடிட்டிங் அமைந்தது என்றும் இப்போது அந்த படத்தை பார்க்கும் போது பல குறைகள் தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.

ஆடை படத்தில் பண்ண தப்பு: ஆடை படத்தை சர்வைவல் டிராமாவாகத்தான் எடுத்திருந்தேன். ஆனால், அதன் போஸ்டர்களை எல்லாம் பார்த்த ரசிகர்கள் அது ஒரு ரிவெஞ்ச் டிராமாவாக இருக்கும் என நம்பி வந்து ஏமாந்துவிட்டார்கள். முதல் நாள் நிர்வாணமாக அமலா பாலை வைத்து எடுக்கும் போதே எந்த இடத்திலும் ஆபாசமாக தெரிந்துவிடக் கூடாது என்றும் ஒரு குழந்தையை பார்ப்பது போன்ற உணர்வு தான் வரவேண்டும் என்று ஒளிப்பதிவாளரிடம் சொன்னேன். அதன் பின்னர், அதுதான் படம் முழுக்க இருந்தது என்றார். கடைசியில் இடம்பெற்ற அந்த பிராங்க் போர்ஷன் மற்றும் கற்பு தொடர்பான வசனங்களை தவிர்த்து இருந்தால் நல்ல படமாக வந்திருக்கும். அந்த இடத்தில் சில தவறுகளை செய்துவிட்டேன் என வெளிப்படையாக தனது தவறுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.

அனுராக் காஷ்யப் திட்டினார்: ஆடை படத்தை பார்த்துவிட்டு ஜோக்கர் படத்தின் ஒளிப்பதிவாளர் செழியன் சார் ரொம்பவே பாராட்டினார். அதன் காட்சிகளை தனது வெப்சைட் பக்கத்திலும் அவர் பதிவு செய்துள்ளார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் படத்தை பார்த்து விட்டு போன் செய்து திட்டினார். எப்படிடா இந்த படத்தை பண்ண, சவுத்ல இதையெல்லாம் அனுமதிக்கவே மாட்டாங்களேன்னு சொல்லிவிட்டு அதன் பின்னர் பாராட்டினார் என்றார். நான் பண்ண மேயாத மான், ஆடை மற்றும் குளு குளு படங்களில் எனக்கு ரொம்ப பிடித்த படம் ஆடை தான் என்றும் இப்போ அந்த படத்தை பண்ணியிருந்தால் வேற கிளைமேக்ஸ் வைத்திருப்பேன். அட்வைஸ் பண்ணி போர் அடிக்க வைத்திருக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். மேலும், ஆடை படத்திற்கு முதலில் பர்த்டே டிரெஸ் என்கிற டைட்டில் தான் வைத்திருந்தேன் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











