இயக்குநர் வசந்த்துக்கு பாராட்டு விழா.. அதை சொன்னதும் சார் கூச்சப்பட்டாரு.. இயக்குநர் வெற்றிச்செல்வன் ஷேரிங்ஸ்
சென்னை: இயக்குநர் சிகரம் பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்து கேளடி கண்மணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வசந்த்; கோலிவுட்டின் லெஜண்ட்ரி இயக்குநர்களில் ஒருவர். அவரது ஒவ்வொரு படமும் காலங்கடந்து கொண்டாடப்படுகிறது. சூழல் இப்படி இருக்க கேளடி கண்மணி திரைப்படம் வெளியாகி நேற்றோடு 35 ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி அவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றி; இப்போது இயக்குநர்களாக மாறியிருப்பவர்கள் சேர்ந்து பாராட்டு விழா நடத்தினார்கள்.
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி வைத்தவர்களில் கே.பாலசந்தர் முக்கியமானவர். அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வசந்த். பாலசந்தரின் முக்கியமான் உதவி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருந்த வசந்த் கேளடி கண்மணி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்து அவரை அனைவராலும் கவனிக்கப்படும் இயக்குநராக மாற்றியது.

லெஜண்ட்ரி இயக்குநர்: கேளடி கண்மணி படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆசை (அஜித்துக்கு அமைந்த முதல் பெரிய ஹிட் படம்), நேருக்கு நேர் (சூர்யா அறிமுகமான படம்), பூவெல்லாம் கேட்டுப்பார் (ஜோதிகா அறிமுகமான படம்), அப்பு (பிரகாஷ் ராஜின் தைரியமான நடிப்பு), ரிதம் (காலத்துக்கும் அழியாத ஃபீல் குட் படம்) என அவரை லெஜண்ட்ரி இயக்குநர்கள் வரிசையில் சேர்த்தது.
வசந்த்துக்கு பாராட்டு விழா: அவர் கடைசியாக இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படமும் தேசிய விருதை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேளடி கண்மணி திரைப்படம் வெளியாகி நேற்றோடு 35 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி '35 Years of The Iconic Film கேளடி கண்மணி' என்ற பெயரில் பாராட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் என்.ஜே. ஸ்டூடியோஸில் நடைபெற்றது.
முன்னெடுத்தது யார்? யார்?: இந்தப் பாராட்டு விழாவை வசந்த்திடம் சத்தம் போடாதே உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இப்போது இயக்குநராக இருக்கும் எஸ்.கே.வெற்றிச்செல்வன், பூ படத்தின் இயக்குநர் சசி என வசந்த்திடம் இயக்கத்தை கற்றுக்கொண்ட 30பேர் வரை முன்னெடுத்தார்கள். இதில் சின்னி ஜெயந்த், எஸ்பிபி சரண், பூ சசி, ரத்னசிவா, டாக்டர் முருகேஷ், விருமாண்டி என பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

வெற்றிச்செல்வனின் பேட்டி: இந்நிலையில் இந்த பாராட்டு விழா குறித்து இயக்குநர் வெற்றிச்செல்வன் ஃபில்மிபீட் தமிழுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் அவர், "சமீபத்தில் திடீரென கே.பாலசந்தர் படங்களை பார்க்க வேண்டுமென தோன்றியது. அதனால் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு அப்படியே மனம் வசந்த் சார் பக்கம் சென்றது. எனது அக்கா பொற்கொடியும் (பொதிகை சேனலில் செய்தி வாசிப்பாளர்), எனது அப்பாவும் பாலசந்தரின் தீவிரமான ரசிகர்கள். அவர்களுக்கு வசந்த் சாரையும் பிடிக்கும்.
மிட் நைட்டில் செய்த ஃபோன் கால்: அந்த சமயத்தில் கேளடி கண்மணி திரைப்படத்தையும் பார்த்தேன். அந்தப் படம் ரிலீஸானபோது நான் சிறு வயது பருவம். அந்தப் படத்தை அப்போது பார்த்திருந்தாலும் மண்ணில் இந்த காதல் பாடலை தவிர்த்து எதுவும் நியாபகம் இல்லை. பிறகு காலப்போக்கில் ரிதம் படம் பார்த்து அட்மைர் ஆகித்தான் அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்த பிறகும் அந்தப் படத்தை பார்த்திருக்கிறேன். இப்போது நான் இயக்குநராகிவிட்டேன். இயக்குநரான பிறகு அந்தப் படத்தை பார்த்தபோது எனக்குள் எழுந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதிகாலை 3 மணி போல் அவருக்கு ஃபோன் செய்து படம் பற்றி நிறைய பேசினேன்.
வசந்த் பகிர்ந்துகொண்டவை: நான் பேசப்பேச அவரும் அந்தப் படத்தின் ஷூட்டிங் கால மெமரிஸை ஷேர் செய்தார். நீ பாதி நான் பாதி பாடலை அவர் எடுத்தபோது பட்ஜெட்டில் சந்தித்த சிக்கல்கள்; அந்த சிக்கல்கள் இருந்தாலும் கிடைத்தவற்றை வைத்து அந்தப் பாடலை எப்படி ஷூட் செய்தேன் என்பது குறித்தெல்லாம் பேசினார். அவர் பேசியதிலிருந்து, 'ஒரு இயக்குநர் என்பவர் ஷூட்டிங்கின்போது கிடைக்காததை நினைத்து தேங்குவதைவிடவும்; கிடைத்ததை வைத்து எப்படி சிறப்பாக எடுக்க வேண்டும்' என கற்றுக்கொண்டேன்.
கூச்சப்பட்ட வசந்த் சார்: அந்த பேச்சோடு பேச்சாக, கேளடி கண்மணி ரிலீஸாகி 35 வருடங்கள் நிறைவடைய போகின்றன. எனவே ஒரு பாராட்டு விழா நடத்தலாம் என்று இருப்பதாக சொன்னேன். அதற்கு அவரோ, 'அட இதுக்கு ஏன் ப்பா பாராட்டு விழா. ஒரு காஃபி ஷாப்புக்கு வா அந்தப் படம் பற்றி நிறைய பேசுவோம்' என சொன்னார். ஆனால் நானோ, 'இல்லை சார் நாம் மட்டும் பேசுவதைவிடவும்; பலருக்கும் இந்தப் படம் பற்றி போக வேண்டும்' என்று கூறினேன். ஏனெனில் அந்தப் படம் அவர் எடுக்கும்போது அவரது வயது 20களில்தான் இருக்கும். அப்போதே அவ்வளவு பக்குவமாக அந்தப் படத்தை எடுத்திருந்தார்.
நான் அப்படி கேட்டதும், 'சரி உன் இஷ்டம்' என்று சொன்னார். பிறகு விழாவுக்கான வேலைகளை நான் உட்பட வசந்த் சாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றி இப்போது இயக்குநர்களாக மாறியிருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து தொடங்கினோம். காஸ்ட்யூம் டிசைனர் சத்யாவின் ஸ்டூடியோவில்தான் நடந்தது.
விழாவுக்கு வசந்த் அவரது மகன்கள் ஆதித்யா, ரூபன், மகள் தீபிகா ஆகியோரும் வந்திருந்தார்கள். அவர் மூன்று தேசிய விருதுகள், மாநில விருதுகள் வாங்கியிருக்கிறார். ஆனாலும் பாராட்டு விழாவில் அவருக்கு போடப்பட்டிருந்த சோஃபாவில் அமருங்கள் என்று சொன்னதற்கு ரொம்பவே கூச்சப்பட்டார். நாங்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்தினால்; அவரும் எங்களுடன் சேர்ந்து வேலைகள் செய்ய தொடங்கிவிட்டார். பிறகு அவரை நாங்கள் அமர வைத்தோம். விழாவுக்கு வந்த அனைவருமே மிகச்சிறப்பாக பேசினார்கள்" என பேசி முடித்தார்.
முன்னதாக கோலிவுட்டை பொறுத்தவரை ஒரு இயக்குநருக்கு உதவி இயக்குநர்கள் எல்லாம் சேர்ந்து பாராட்டு விழா நடத்துவது இதுவரை இல்லாத ஒன்று; அதனை வசந்த்தின் உதவி இயக்குநர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள் என கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இயக்குநர் எஸ்.கே. வெற்றிச்செல்வன் ஜெய், அதுல்யா உள்ளிட்டோரை வைத்து எண்ணித்துணிக என்ற திரைப்படத்தை இயக்கினார். தற்போது அடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











