சாலை விபத்தில் உயிரிழந்த ஆர்.பி.சௌத்ரியின் நிறைவேறாத ஆசை.. என்ன தெரியுமா?
சென்னை: தென்னிந்திய சினிமாவின் தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரி ராஜஸ்தானில் நடந்த கார் விபத்தில் அவர் உயிரிழந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகைகள், நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் கண்கலங்கியபடி வந்த மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்து இருக்கும் பேட்டியில் அவர் குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக தனக்கென தனி முத்திரையை பதித்தவர் ஆர்.பி.சௌத்ரி. இதுவரை 99 திரைப்படங்களை தயாரித்துள்ள இவர், எந்த படம் வெற்றி பெறும் என்பதை முன்கூட்டியே கணிக்கக்கூடிய சினிமா அறிவை கொண்டவர். அவரிடம் கதை சொல்ல சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதே இல்லை. ஒரு கதை அவருக்கு பிடித்து விட்டால், "ஒரு மாதத்திற்குள் படப்பிடிப்பை தொடங்கலாம்" என்று உடனே நம்பிக்கை அளித்து விடுவார்.

பயில்வான் பேட்டி: பல திறமையான இயக்குனர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கு உண்டு. விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார்.எழில், சசி,பேரரசு உள்ளிட்ட பல இயக்குனர்கள் என புது புது இயக்குநர்களை அறிமுகம் செய்துள்ளார். அதேபோல் நடிகர் சரத்குமார் அவர்களின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் ஆர்.பி. சவுத்ரி தான். சரத்குமாரை வைத்து பல வெற்றி திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார்.
நல்ல மனிதர்: ஆர்.பி. சவுத்ரி மிகவும் வித்தியாசமானவர் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும்போது திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். அங்கு எந்த உதவி இயக்குனர் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் என்பதை அமைதியாக கவனிப்பார். மறுநாளும் மீண்டும் வந்து அதே உதவி இயக்குனர் உற்சாகத்துடன் வேலை செய்கிறாரா என்பதை பார்த்து உறுதி செய்துவிட்டு அவரை தனியாக அழைத்து உன்னிடம் ஏதாவது கதை இருக்கிறதா? என்று கேட்பார். திறமையை கண்டறிந்து வாய்ப்பு கொடுக்கும் அவரது இந்த குணமே அவரை மற்ற தயாரிப்பாளர்களிலிருந்து வேறுபடுத்தியது.
மனம் விட்டு பேசுவார்: எனக்கு அவர் மிகவும் நெருங்கிய நண்பர். அவருடன் பல திரைப்படங்களில் நான் இணைந்து பயணித்திருக்கிறேன். நான் ஒரு பத்திரிக்கையாளர் என்பதால், ஒவ்வொரு படமும் திரையிடப்படும் போது கூட அவரது உதவியாளரிடம் 'பயில்வான் வந்துவிட்டாரா?' என்று கேட்பார். படம் முடிந்து வெளியே வரும் நேரத்திலும் அழைத்து, 'படம் எப்படி இருக்கிறது? உண்மையை சொல்லுங்கள்' என்று கேட்கும் நல்ல மனம் கொண்டவர். எப்போதும் புன்னகையுடன் அனைவரின் கேள்விக்கும் பதில் சொல்லக்கூடிய மனிதர்.
நிறைவேறாத ஆசை: ஆர்.பி. சவுத்ரி தற்போது விஷால் இயக்கி நடித்து வரும் 'மகுடம்' படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தான் தயாரித்து வருகிறது அது அந்த நிறுவனத்தின் 99 வது படம். 100வது படத்தை மிகவும் பிரம்மாண்டமாக விஜயை வைத்து தயாரிக்க ஆசைப்பட்டார். ஆனால், அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என பயில்வான் வருத்தத்தோடு பேசி உள்ளார். ஆர்.பி. சௌத்ரி மறைந்தாலும், அவர் தயாரித்த படங்கள் அவரின் பெயரை என்றுமே சொல்லிக் கொண்டே இருக்கும். சினிமா இருக்கும் வரை ஆர்.பி. சௌத்ரியின் பெயரும் நிலைத்து நிற்கும்.


Click it and Unblock the Notifications