டிராகன் படத்துல ’மாட்டிக்கினாரு ஒருத்தரு’ பாடல் எப்படி உருவானது தெரியுமா?.. லியோன் ஜேம்ஸ் பேட்டி!
சென்னை: அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கௌதம் மேனன், கே.எஸ். ரவிக்குமார், இவானா, விஜே சித்து மற்றும் அஷ்ரத் கான் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.
ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு தளபதி விஜயின் கோட் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படமாக டிராகன் திரைப்படம் மாறியது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையிலும், தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை டிராகன் படம் பெற்று வருகிறது.

அந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பாடல்களாக மாறி உள்ள நிலையில், தமிழ் பிலிமிபீட்டுக்கு அந்த படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.
யார் இந்த லியோன் ஜேம்ஸ்?: ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 2 படத்திற்கு இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மாறியவர்தான் லியோன் ஜேம்ஸ். கோ 2, கவலை வேண்டாம், வீரா, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், எல்கேஜி, ஓ மை கடவுளே, சபாநாயகன், டிராகன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ஓ மை கடவுளே படத்தை தொடர்ந்து டிராகன் படத்திலும் அவர் பணியாற்ற நிலையில், அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளன.
மாட்டிக்கினாரு ஒருத்தரு: ரிட்டர்ன் ஆப் தி டிராகன் என கடைசி வரை அந்த பாடலை சர்ப்ரைஸ் ஆகவே அஷ்வத் மாரிமுத்து வைத்திருந்த நிலையில், தியேட்டரில் ரசிகர்கள் முதல்முறையாக அந்த பாடலை பார்த்ததுமே ஹேப்பி ஆகிவிட்டனர். சாண்டி மாஸ்டர் கொரியோகிராபியில் அஷ்ரத் கான் மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரதீப் ரங்கநாதனை கலாய்ப்பது போல இடம்பெற்ற அந்த பாடல் மிகப்பெரிய வெற்றிப்பாடலாக மாறியது. சிம்பு பாடிய சூப் சாங் மற்றும் கயாடு லோஹருடன் ட்ரீம் சாங்கான வழித்துணையே பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பாகவே ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் வெளியானதும் இந்த பாடல் ரசிகர்களை உடனடியாக கவர்ந்தது.
யாரோட ஐடியா?: லியோன் ஜேம்ஸ் அளித்த பேட்டியில், டிரெண்டிங்கான வார்த்தைகளை வைத்து சமீப காலமாக பாடல்கள் உருவாகி வருகின்றன. "மாட்டிக்கினாரு ஒருத்தரு" வரிகள் டிரெண்டாகி வரும் நிலையில் அதை வைத்து பாடலாக மாற்ற வேண்டும் என்கிற ஐடியா யாருடையது என்கிற கேள்விக்கு பதில் அளித்தவர், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தான் அந்த ஐடியாவை சொன்னார். இது நல்லா இருக்கே இதை வைத்து ஒரு காலேஜ் கானா பாடலை உருவாக்கலாமே என்று முயற்சித்தது தான் அந்த பாடல் அப்படி உருவாக காரணம் என்றார். மேலும், தனது கல்லூரி வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தப்படுத்திய "கும்தலக்கடி கலகல" வரிகளையும் போட்டு உருவாக்கினோம் என்றார்.
பட வாய்ப்புகள்: லியோன் ஜேம்ஸ் அண்டர் ரேட்டட் இசையமைப்பாளராகவே தமிழ் சினிமாவில் உள்ளார். ஆனால், டிராகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருக்கு பல பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் படங்களுக்கு இவர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











