Exclusive: விஜய் சேதுபதியை நான் எப்படி பிராங்க் பண்ணேன் தெரியுமா?.. மனம் திறந்த கண்ணப்பா நடிகர்!
சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு தயாரிப்பில் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்னு மஞ்சு லீடு ரோலில் நடித்துள்ள கண்ணப்பா படம் 150 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கண்ணப்பா படத்தில் சிவனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். மேலும், இந்தியாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால், பிரபாஸ், ஸ்டார் படத்தின் ஹீரோயின் ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அந்த படத்தை முழுவதுமாக நியூசிலாந்தில் படமாக்கிய அனுபவத்தையும் அந்த படத்தில் உடன் நடித்தவர்கள் குறித்தும் பேசிய கண்ணப்பா நடிகர் விஷ்ணு மஞ்சு நடிகர் விஜய் சேதுபதியை ஒருமுறை எப்படி பிராங்க் செய்தேன் என்பது குறித்து பிலிமிபீட் யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியை இங்கே பார்க்கலாம் வாங்க..

மோகன்லால் சொன்ன வார்த்தையை மறக்கவே மாட்டேன்: கண்ணப்பா படத்தில் மோகன்லால் சாருடன் நடித்ததை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். 4 பக்க மோனோலாக் காட்சியை படம் பிடித்துக் கொண்டிருந்த போது அவர் 4 அடி முன்னே வந்து கலக்கிட்டட்டா மோனே என என்னை பாராட்டியதும் கண்கள் குளமாகி விட்டன. அத்தனை பெரிய நடிகர் இப்படியொரு வார்த்தை அவ்வளவு எளிதாகவோ சாதாரணமாகவோ சொல்ல முடியாது என்று உணர்ச்சிவசப்பட்டார் விஷ்ணு மஞ்சு.
விஜய் சேதுபதியை பிராங்க் செய்தேன்: தெலுங்கில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்கிற கேள்விக்கு முதல் பதிலாக தனது அப்பா மோகன் பாபுவின் பெயரை சொன்ன விஷ்ணு மஞ்சு இந்தியளவில் உங்களுக்கு பிடித்த நடிகர் என்கிற கேள்விக்கு அதிரடியாக விஜய் சேதுபதியின் பெயரை சொன்னார். விக்ரம் படத்தில் அவரது அறிமுக காட்சியை எல்லாம் மற்ற நடிகர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்றும் ஒருமுறை விஜய் சேதுபதியை பிராங்க் செய்த அனுபவத்தையும் விஷ்ணு மஞ்சு நம்முடன் பகிர்ந்துள்ளார்.
ரசிகராக சென்றேன்: கண்ணப்பா ஷூட்டிங் நடந்துக் கொண்டிருந்த போது அவரும் ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்காக வந்திருந்தார். நான் என்னுடைய மேக்கப் எல்லாம் இல்லாமல், சாதாரணமாக ஒரு உடையை உடுத்திக் கொண்டு என்னுடைய ஆட்கள் எல்லாம் யாருமின்றி ஒரு ரசிகனாக விஜய் சேதுபதியை சந்திக்க சென்றேன். அப்போது, அங்கே இருந்தவர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. ஒரு நபர் அடையாளம் கண்டுக் கொண்டு தடுத்த ஆட்களை மிரட்ட பார்த்தார். நான் யாருன்னு சொல்லிடாதீங்கன்னு சொன்னதும் அந்த நபர் அமைதியாகிவிட்டார். அதன் பின்னர் விஜய் சேதுபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நான் சொன்ன எதையுமே நம்பல: விஜய் சேதுபதி ரொம்பவே கனிவான மனிதர். நான் உங்கள் ரசிகன், இந்த படத்தில் விஎஃப்எக்ஸ் வேலை செய்கிறேன் என உருட்டியதை எல்லாம் அவர் நம்பவே இல்லை. என்னை யாரென்று அடையாளம் தெரிந்துக் கொள்ளவில்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் சரிங்க சார், சந்தோஷம் சார் என இன்முகத்துடன் பேசி வழியனுப்பினார். எதிர்காலத்தில் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் என சொன்னதை கூட மனுஷன் நம்பினாரா என தெரியவில்லை என விஜய் சேதுபதியை பிராங்க் பண்ண விதத்தையும் அவர்தான் தனக்கு பிடித்த நடிகர் என்பதையும் விஷ்ணு மஞ்சு செம கூலாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











