குளிர் ஜுரம்.. அந்த ஒரு காட்சியில நடிக்க அவ்வளவு கஷ்டப்பட்டேன்.. கீர்த்தி சுரேஷ் எக்ஸ்க்ளூசிவ்!
சென்னை: பெண்குயின் படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க ஈஷ்வர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி உள்ள பெண்குயின் திரைப்படம் நாளை மறுநாள் (ஜூன் 19) அமேசான் பிரைமில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தைத் தொடர்ந்து நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இரண்டாவது படம் என்கிற அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.

5 ஆண்டு திட்டம்
2015ம் ஆண்டு இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த 5 ஆண்டுகளில் அவரது வளர்ச்சி வேற லெவலில் விஸ்வரூபம் எடுத்தது எப்படி என்ற கேள்விக்கு, அப்படியெல்லாம் ஒண்ணும் திட்டம் போடலைங்க, அதுவா அமையுது. கடந்த ஒன்றரை வருஷமா படமே ரிலீஸ் ஆகலை அதுக்கு என்ன பண்றது என்றார்.

தாய் பாசம்
சைக்கோ கொலைகாரன் தனது மகனை கடத்திச் சென்ற நிலையில், மகனை காப்பாற்ற ஒரு தாய் போராடும் வலியை இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் பெண்குயின் படமாக எடுத்துள்ளார். சர்கார் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விரைவில் ரிலீசாக உள்ள இந்த படத்தில் தாய் பாசம் மேலோங்கி இருக்கிறது. இந்த படத்தில் நடித்த சிறுவனின் மொபைல் எண்ணை ‘சன்' என்றே பதிவு செய்துள்ளதாகவும் கீர்த்தி சுரேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.

குளிர் ஜுரமே வந்துடுச்சு
கொடைக்கானல் பேக்ட்ராப்பில் எடுக்கப்பட்டுள்ள பெண்குயின் படத்தின் ஷூட்டிங்கில் முக்கியமான எமோஷனலான ஒரு காட்சியில் நடிக்க தான் ரொம்ப கஷ்டப்பட்டதாகவும், அப்போது தனக்கு குளிர் ஜுரம் ஏற்பட்டு இருந்தது. ஆனாலும், அந்த காட்சியை பற்றிய நினைவுகள் மட்டுமே மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்ததாகவும், நிச்சயம் அது எந்த காட்சி என்பதை ரசிகர்கள் படத்தை பார்த்தாலே தெரிந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு பிடிக்கும்
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் வரும் வசனத்தை போல நம்பி வாங்க சந்தோஷமா போங்க, என்பது போல, பெண்குயின் படம் நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும், என்றும் இது ஒரு வித்தியாசமான முயற்சி நிறைய வலிகளும், சீட் எட்ஜ் த்ரில்லரும் இருக்கும், படத்தை நிச்சயம் என்ஜாய் பண்ணுவீங்க என்று கீர்த்தி சுரேஷ் பேசிவிட்டு தனது செல்ல நாய்க்குட்டி நைக்கையும் வீடியோ காலில் அறிமுகப்படுத்தி உத்தரவு பெற்றுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











