Exclusive: உலக அரசியலை பேசப்போகும் ஹரா பட இயக்குநர்.. அடுத்து மோகன் படமும் இயக்கப் போறாராம்!
சென்னை: சினிமாவில் ஒவ்வொரு இயக்குநர்களும் தங்களுக்கென ஒரு தனி ஸ்டைலை கடைபிடிப்பது போல இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியும் தனக்கான ஒரு தனி ஃபார்முலாவை ஒவ்வொரு படங்களிலும் கடைபிடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஜய்க்கு வில்லனாக கோட் படத்தில் நடித்த வெள்ளி விழா நாயகன் மோகனை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கம்பேக் செய்ய வைத்ததே இவரது ஹரா படம் தான்.
ஹரா படத்தை முடித்து விட்டு அடுத்தததாக ஹர்ஷ வர்தனின் கம்பேக் படமான மகேஷ்வரா படத்தையும் எடுத்து முடித்துவிட்ட விஜய் ஸ்ரீ ஜி புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்ட புதிய படத்தின் போஸ்டர் ஒன்று சினிமா வட்டாரத்தில் பலரது கவனத்தை ஈர்த்தது.

அது என்ன படம் பாஸ் என அவரிடமே கேட்க, அந்த படம் குறித்தும் மீண்டும் நடிகர் மோகன் உடன் இணையும் படம் குறித்தும் அவர் சொன்ன விஷயங்கள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
கம்பேக் கொடுத்த வெள்ளி விழா நாயகன்: 90களில் தமிழ் சினிமாவையே கலக்கிக் கொண்டிருந்த வெள்ளி விழா நாயகன் மைக் மோகன் பல ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வெளியான ஹரா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அந்த படத்தைத் தொடர்ந்து மிரட்டல் வில்லனாக விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் மிரட்டினார். கூடிய சீக்கிரமே மீண்டும் மோகன் உடன் புதிய படம் ஒன்றை பண்ணப் போகிறேன் என ஹரா படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி பேட்டியளித்துள்ளார்.
விஜய் ஸ்ரீ ஜி ஸ்டைல்: ஒரு சில இயக்குநர்கள் காதல் படங்களை இயக்குவதில் வல்லவர்கள். ஒரு சிலர் போலீஸ் படங்கள், ஒரு சிலர் கேங்ஸ்டர், ஒரு சிலர் சமூக கருத்துக்கள் கொண்ட படங்கள், ஒரு சிலர் காமெடி படங்கள் என இயக்கி வருகின்றனர். விஜய் ஸ்ரீ ஜி இதில் தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து வருகிறார். கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனை தாதா 87 படத்தில் ஹீரோவாக வைத்து படம் இயக்கினார். பிஆர்ஓ நிகில் முருகனை வைத்து பவுடர் படம் பண்ணினார். மீண்டும் மோகனை அழைத்து வந்து ஹரா படத்தை கொடுத்த அவர், அடுத்து ஹர்ஷவர்தனை வைத்து மகேஷ்வரா படத்தையும் கொடுக்க காத்திருக்கிறார்.

உலக அரசியல் படம்: மகேஷ்வரா படம் முடிந்து ரிலீஸுக்கு ரெடியாகி வரும் நிலையில், அடுத்ததாக உலக அரசியலை மையப்படுத்தி 'தளிர்' எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட கேள்விகளையும் உலக அரசியல் பார்வைகளையும் எழுப்பும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்த படத்திலும் ஒரு ஹீரோவை சர்ப்ரைசாக விரைவில் களமிறக்கப் போவதாகவும் நமக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











