சிஎம் விஜய் Vs ரஜினி சர்ச்சை.. தலைவரே இந்த நிலைமை.. பயமா இருக்கு.. விஷ்ணு விஷால் பேட்டி!
சென்னை: வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் 'கட்டா குஸ்தி'. ஆண் ஆதிக்கம் பேசும் கணவனுக்கும், குஸ்தி வீராங்கனையான மனைவிக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான மோதலை நகைச்சுவையுடன் சொல்லியிருந்த அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான 'கட்டா குஸ்தி 2' வெளியாகத் தயாராகியுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவு தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் சண்டைகள், ஈகோ மற்றும் தற்காலக் குடும்பச் சூழல்களை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் தீவிரமாகப் பங்கேற்று வரும் வேளையில், விஷ்ணு விஷால் தற்போதைய சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் நெகட்டிவிட்டி குறித்து பேட்டி அளித்துள்ளார்.
விஷ்ணு விஷால்: அதில், இன்றைக்கு சோசியல் மீடியாக்களின் பயன்பாடு மிக மிக அதிகமாகவும், சில நேரங்களில் ஆபத்தானதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. தலைவரே மைக்கைப் பிடித்துக்கொண்டு நான் விஜய்க்கு எதிரானவன் அல்ல என்று விளக்கம் சொல்லும் நிலைமை இன்றைக்கு வந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான சூழ்நிலையில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். தலைவரே நாலு நாட்கள் எந்தப் பதிவும் போடாமல் அமைதியாக இருந்தால் கூட, அவரைப் பற்றி ஏதோ ஒரு தவறான விஷயத்தைக் கிளப்பி அதைச் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து விடுகின்றனர். இதனால் அவரே வேறு வழியில்லாமல், நான் ஏன் இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துட்டு இருக்கணும் என்று நொந்துபோய் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இதையெல்லாம் பார்க்கவே நமக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றார்.

கட்டா குஸ்தி சாதனை: கட்டா குஸ்தி முதல் பாகம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. கிளைமாக்ஸில் மனைவியின் சண்டையைப் பார்த்து அவளைப் பெருமையாக ஏற்பதும் எனப் பெண்களைக் கொண்டாடிய படமாக அது அமைந்தது. விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் எதார்த்தமான நடிப்பு, முனிஷ்காந்த் காமெடி மற்றும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை ஆகியவை படத்திற்குப் பெரிய பலமாக அமைந்தன.

மாஸ் கூட்டாளி: ஜூலை 3-ல் வெளியாகவிருக்கும் 'கட்டா குஸ்தி 2' படத்திலும் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஜோடி மீண்டும் கணவன்-மனைவியாகக் களம் இறங்கியுள்ளனர். இவர்களுடன் முதல் பாகத்தில் கலக்கிய ரம்யா கிருஷ்ணன்,யோகி பாபு, முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டப் பல முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்கள் இந்த இரண்டாம் பாகத்திலும் இணைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications