கெளதம் மேனனை இப்படித்தான் லாக் பண்ணாராம் சந்தானம்.. டிடி நெக்ஸ்ட் லெவல்.. கெளதம் மேனன் ஓபன் டாக்!
சென்னை: இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக இருவரும் இணைந்து டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை உருவாக்கியுள்ளனர். அந்த படத்தில் கெளதம் மேனன் நடித்த நடிப்பை டிரைலரில் பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர். மேலும், ஏகப்பட்ட மீம்களும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் தான் நடிக்க என்ன காரணம் என்பது குறித்து கெளதம் மேனன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இயக்குநராக மாதவனை வைத்து மின்னலே படத்தை இயக்கி அறிமுகமானவர் தான் கெளதம் மேனன். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், அச்சம் என்பது மடமையடா, நீதானே என் பொன் வசந்தம், வெந்து தணிந்தது காடு என பல படங்களை இயக்கியுள்ளார் கெளதம் மேனன்.

அவரது படங்களை தாண்டி அவர் நடிக்கும் படங்களும் சமீப காலமாக சக்கைப் போடு போட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கெளதம் மேனன் நடித்த நடிப்பை பார்த்த ரசிகர்கள் டிராகன் படம் வரை பல படங்களில் அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
இன்னும் எவ்ளோ சார் கடனிருக்கு: ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து சில படங்களை தயாரித்த நிலையில், கெளதம் மேனன் கடனில் சிக்கிக் கொண்டார் என தகவல்கள் வெளியாகின. அந்த கடன்களை அடைக்கத்தான் அவர் படங்களில் நடித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், இன்று வெளியான சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் இன்னும் உங்களுக்கு எவ்ளோ சார் கடனிருக்கு என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
சொந்த படங்களையே ஸ்பூஃப்: தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குநர்கள் மட்டும் தங்கள் முந்தைய படங்களை ஸ்பூஃப் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் அந்த விஷயத்தை சிறப்பாகவே செய்வார். இந்நிலையில், கெளதம் மேனன் தனது வேட்டையாடு விளையாடு, காக்க காக்க படங்களை டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ஸ்பூஃப் செய்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதுதொடர்பான கேள்விக்கு கெளதம் மேனனே செம ஸ்போர்ட்டிவாக பதில் அளித்துள்ளார்.
சந்தானம் லாக் பண்ணிட்டாரு: நீதானே என் பொன்வசந்தம் படம் பண்ணும் போது கால்ஷீட் இல்லாத நிலையில் கூட உங்களுக்காக படம் பண்ணிக் கொடுத்தேன் சார். இந்த முறை எனக்காக நீங்க இந்த படம் பண்ணனும் என சந்தானம் என்னை லாக் பண்ணிட்டாரு. டைரக்டர் பிரேமும் கதை சொன்ன விதம் மற்றும் என்னோட படங்களையே ஸ்பூஃப் செய்து எடுத்ததை எல்லாம் நானும் என்ஜாய் பண்ணி பண்ணேன் என வெளிப்படையாக டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடிக்க காரணத்தை சொல்லியுள்ளார்.
உயிரின் உயிரே செம ஹைலைட்: ஆர்யா தயாரிப்பில் சந்தானம், யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்தர், கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடித்தாலும் படத்தின் டிரைலரை பார்த்த அனைத்து ரசிகர்களும் இந்த படம் கெளதம் மேனன் படம் என்றே கொண்டாடி வருகின்றனர். அதிலும், காக்க காக்க படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா நடனமாடும் "உயிரின் உயிரே" பாடலுக்கு யாஷிகா ஆனந்த் உடன் கெளதம் மேனன் பீச்சில் ஓடும் காட்சிகள் தான் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. வரும் மே 16ம் தேதி தியேட்டர்களில் ரசிகர்களின் சிரிப்புச் சத்தம் ஒலிக்கும் என்பது கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











