அரசன் படத்துக்கு அனிருத் மியூசிக்.. வெற்றிமாறன் மீது கோபமா? கேள்விக்கு பட்டென பதில் சொன்ன GV பிரகாஷ்
சென்னை: தமிழ் சினிமாவில் சரியாக கொண்டாடப்படாத இசையமைப்பாளர்கள் என்று சில பெயர்களை பலரும் பட்டியலிடுவர். அதில் சம காலத்தில் இருக்க கூடிய இசையமைப்பாளர்களில் தற்போது கொண்டாடப்படுவதை காட்டிலும் இன்னும் கூடுதலாக கொண்டாட தகுதியான இசையமைப்பாளர் என்றால் அது ஜிவி பிரகாஷ் குமார் தான்.
இசைஞானி இளையராஜா குறித்து இப்போதும் சொல்லப்படும் ஒரு விஷயம் என்றால் அது, " இளையராஜா முன்னணி நடிகர்களுடன் தான் பணியாற்றுவேன், பெரிய பட்ஜெட் படங்களில் தான் பணியாற்றுவேன் என்று எப்போதும் இருந்ததில்லை. அவரிடத்தில் தேதிகள் இருந்தால், அனைவருக்கும் இசையமைத்துக் கொடுத்துள்ளார். இப்படியான அணுகுமுறையைக் கொண்ட திறமையான இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரது சமீபத்திய பேட்டியில் இயக்குநர் வெற்றி மாறன் அரசன் படத்தில் உங்களுடன் பணியாற்றாமல் அனிருத்தை கமிட் செய்துவிட்டாரா? அதனால் உங்களுக்கு ஏதாவது மனவருத்தம் உள்ளதா என்று கேட்கப்பட்டது.

வெற்றி மாறன் மீது கோபமா? இந்த கேள்விக்கு யாரும் எதிர்பார்க்காத, எதார்த்தமான பதிலை ஜி.வி. பிரகாஷ் குமார் அளித்துள்ளார். அதாவது, " அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் பல இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். அப்படி இருக்கும்போது வெற்றி மாறன் ஏன் வேறு ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற கூடாது? எனது கெரியரின் தொடக்க காலத்தில் இது போல நடந்திருந்தால் நான் கட்டாயம் கோபப்பட்டு இருப்பேன். ஆனால் நான் இப்போது மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நான் புது மற்றும் இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றவும் மிகவும் ஆசைப்படுகிறேன். அதனால் தான் நான் யூத் போன்ற படத்தில் பணியாற்றினேன்" என்று பதில் அளித்தார்.

மெச்சூரிட்டி: ஜி.வி. பிரகாஷ்குமாரின் இந்த பதிலானது மிகவும் எதார்த்தமான மற்றும் முதிர்ச்சியான பதில் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். அரசன் படத்திலும் ஜி.வி. பிரகாஷ் குமாரைத்தான் இசையமைக்க வைக்க வேண்டும் என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பாளர் தாணு மற்றும் நடிகர் சிம்புவும் இணைந்து தான் அனிருத்தை இசையமைக்க வைக்கலாம் என்று பலமுறை எடுத்துக் கூறி, அனிருத்தை கமிட் செய்தனர் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளனர். அதேபோல் வெற்றி மாறன் இதற்கு முன்னர் வட சென்னை படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











