கமல்ஹாசன், மணிரத்னம் இருந்தும் தக் லைஃப் படம் தோல்வியடைய என்ன காரணம்?.. எழுத்தாளர் தீபா பேட்டி!
சென்னை: மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோ ஜூ ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியான தக் லைப் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. விமர்சகர்களும் அந்த படத்தை முடிந்த அளவுக்கு கழுவி ஊற்றியுள்ளனர். அனைவரது கவலையும் வியப்பும் என்னவென்றால் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் போன்ற தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகள் எப்படி இணைந்து இப்படி ஒரு மோசமான படத்தை கொடுத்தார்கள் என்பதுதான்.
கடந்த வாரம் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் விமர்சகர்களை விளாசித் தள்ளிய எழுத்தாளர் J. தீபா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தக் லைஃப் படத்தின் தோல்விக்கு காரணமாக தான் கருதுவது குறித்த தகவல்களை பேசி உள்ளார்.

கமல்ஹாசனின் விருமாண்டி, குணா, தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் எல்லாம் திரைக்கதை எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்றும் திரைக்கதை ஆசிரியர்களின் பங்கு எந்த அளவுக்கு இருந்தது என்பது குறித்தும் விரிவாக பேசியுள்ளார்.
அதிகமாக எடுத்து கட் செய்துள்ளனர்: மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நாயகன் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து பணியாற்றியுள்ள தக் லைஃப் திரைப்படம் இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய புரட்சியாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டுதான் படத்தை சென்று பார்த்தேன். ஆனால் அந்த படம் எனக்கு கொஞ்சம் கூட ஒர்க் அவுட் ஆகவில்லை. அதற்கு காரணம், சரியான திரைக்கதை திட்டமிடாமல் ஏகப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டு, கடைசி நேரத்தில் எடிட்டிங் டேபிளில் இஷ்டத்துக்கு கட் செய்து வெளியிட்டது தான் காரணம் என தான் கருதுவதாக கூறியுள்ளார்.
பாலகுமாரன் ஒரு ஆச்சர்யம்: எழுத்தாளர்கள் சுஜாதா மற்றும் பாலகுமாரன் இருவரும் ஏகப்பட்ட படங்களுக்கு திரைக்கதை ஆசிரியர்களாக பணியாற்றியுள்ளனர். குணா படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரமே ஒரு சிக்கலான கதாபாத்திரமாக உருவாக்கி இருப்பார் பாலகுமாரன். அந்த கதாபாத்திரத்துக்கு அபிராமி அந்தாதி தெரியும், காதலியாக பார்க்காமல் கடவுளாகவே அபிராமியை அவர் பார்க்கும் காட்சிகளும் கொண்டாடும் காட்சிகளையும் அவ்வளவு நேர்த்தியாக எழுதியிருப்பார் பாலகுமாரன்.

சுஜாதாவின் சுவாரஸ்யம்: சுஜாதாவின் எழுத்தில் எப்போதுமே ஒரு சுவாரஸ்யம் இருந்து கொண்டே இருக்கும். எந்திரன் படத்தில் ஒரு ரோபோ பெண்ணை காதலிப்பது மட்டுமே ஒன்லைனாக உள்ள நிலையில், ஒரு ரோபோ பெண்ணை ஏன் காதலிக்கிறது? எப்படி காதலிக்கும்? காதல் கைகூடவில்லை என்றால் என்ன மாதிரியான நடவடிக்கைகளை வில்லத்தனமாக செய்யும் என பல விஷயங்களை ஒன்றன்பின் ஒன்றாக அடக்கி சுவாரஸ்ய படுத்திய நிலையில் தான் எந்திரன் திரைப்படம் ஓடியது. ஆனால், 2.0 படத்துக்கு அவர் இல்லை, அக்ஷய் குமார் தான் படத்தில் ஹீரோவே, ஆனால் அவரை வில்லனாக காட்டிய நிலையில் நமக்கு கனெக்ட் ஆகவில்லை என்றார்.
எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு இல்லை: இன்றைய காலகட்டத்தில் திரைக்கதை ஆசிரியர்களுக்கு வாய்ப்புகள் இல்லை. நல்ல திரைக்கதை ஆசிரியர்கள் இயக்குனர்களாக மட்டுமே அறிமுகமாக வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளது. அதன் காரணமாகவே ஒரு படம் அல்லது இரண்டு படங்களுக்கு பிறகு பலரும் காணாமல் போய்விடுகின்றனர். கமல்ஹாசன் எழுத்தில் வெளியான விருமாண்டி படமெல்லாம் ஆச்சர்யத்தின் உச்சம். அது போல மணிரத்னமும் நன்றாக திரைக்கதை எழுதக் கூடியவர் தான். இருவரும் ஒன்றாக இணைந்து உருவாக்கிய நிலையில், தக் லைஃப் இந்த அளவுக்கு சுமரான திரைக்கதை கொண்ட படமாக அமைந்தது ஏன் என்பதற்கு உண்மையான விளக்கத்தை அவர்கள் தான் கூற வேண்டும் எனக் கூறி முடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











