நான் பணக்காரன் இல்லை.. நிறைய கடன் இருக்கு.. என்னப்பா ஜெய் இப்படி சொல்றாரு!
சென்னை: அவினி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, நடிகைகள் மாளவிகா சர்மா, அமிர்தா, ரைசா, டி.டி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காபி வித் காதல்.
இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நவம்பர் 4ஆம் தேதி வெளியிடுகிறது. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஜெய் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

மக்களுடைய பணம்
கேள்வி: உங்களிடம் கஷ்டம் என்று வருபவர்களுக்கு உதவும் எண்ணம் எப்படி வந்தது?
பதில்: சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்தபோது, என்னிடம் கஷ்டம் என்று வருபவர்களுக்கு சிறுஉதவிகளை செய்து வந்தேன். அப்பொழுதெல்லாம் இவை வெளியே தெரியவில்லை. இப்பொழுது சோஷியல் மீடியாக்கள் மூலம் வெளி வருகிறது. என்னை பொறுத்தவரை சினிமாவில் நாம் வாங்கக்கூடிய பணம் என்பது மக்களுடையது. அவர்கள் கஷ்டப்படும்பொழுது, நாம் வாங்கக்கூடிய பணத்தில் சிறிதளவு உதவி செய்வதே நலம். எனவே நான் நடிப்பதற்கு வாங்கக்கூடிய பணத்தை உதவி செய்வதற்காகவே ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை தனியே எடுத்து வைத்து விடுவேன் என்றார்.

சின்னவயது ஞாபகம்
கேள்வி: படப்பிடிப்பின்போது அனைவருக்கும் ஸ்னாக்ஸ் கொடுத்து வருகிறீர்கள். அது பற்றி உங்கள் கருத்து...
பதில்: 2008ம் ஆண்டு சுப்பிரமணியபுரம் படத்தின் வெளியான அன்று பியர்ஸ்ட்ரோ கார் வாங்கினேன். அப்பொழுது எனது காரில் சாக்லேட் நிறைய வைத்திருப்பேன். இயக்குநர் வெங்கட்பிரபு, எனது காருக்கு வந்தால் பெட்டிக்கடைக்குள் வருவது போல் தோன்றுகிறது என்று கூறுவார். நடிகர் விஜயகாந்த் அளவுக்கு என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை, என்னால் முடிந்த வரை தன்னுடன் பணிபுரிபவர்களை ஸ்னாக்ஸ், சாக்லேட் சாப்பிட வைத்து பார்ப்பதில் எனக்கு சந்தோஷம். எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்தாலும், கேண்டீசை பார்த்தால் சின்னவயது ஞாபகம் வரும் என்றார்.

எனது இரண்டு கண்கள்
கேள்வி: நீங்கள் எதை மறக்க விரும்புகிறீர்கள்? எதை மறக்காமல் இருப்பீர்கள்?
பதில்: ஒரு படத்தில் நாம் நடித்து, அந்த படம் சரியாக ஓடவில்லை என்றால் எதனால் அந்த படம் ஓடவில்லை என்று ஆராய்ந்து விட்டு, அதன் தவறை சரி செய்து கொள்ள வேண்டும். பின்பு படம் சரியாக ஓடவில்லை என்பதை மறந்து விட வேண்டும். அப்பொழுது தான் அடுத்தபடத்தில் நாம் சிறப்பாக நடிக்க முடியும் . என்னால் மறக்க முடியாத நபர்கள் இருவர். ஒருவர் சமுத்திரக்கனி, மற்றொருவர் வெங்கட்பிரபு. இருவருமே எனது இரண்டு கண்கள். அடுத்தபடியாக எனக்கு பகவதி படத்தில் வாய்ப்பு கொடுத்த வெங்கடேஷ் என்றார்.

நான் ரசிப்பேன்
கேள்வி: மேடைப்பேச்சை யாரிடம் இருந்து கற்றுக்கொண்டீர்கள்?
பதில்: நாம் நாமாக இருக்க வேண்டும். நமக்கு என்ன வருமோ அதை செய்து கொண்டு சென்று விட வேண்டும். எப்பொழுதும் உண்மையாக இருப்பது நல்லது. அதனால் தான் நான் எந்த பிரச்னையிலும் சிக்குவதில்லை. நடிகர் விஜய் அவரது படங்களின் ஆடியோ வெளியீட்டின்போது பேசுவதை நான் ரசிப்பேன். அவரிடம் இருந்து மேடையில் எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன் என்றார்.

டிக்கெட் கிடைக்கவில்லை
கேள்வி: பொன்னியின் செல்வன், காந்தாரா படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: விக்ரம் படம் வெற்றிக்கு பிறகு, பெரிய ஹிட் படம் வருமா? என்று தோன்றியது. அந்தளவுக்கு பொன்னியின் செல்வன் படம் வெற்றியும், வசூலிலும் சாதனை படைத்துள்ளது. டிக்கெட் கிடைக்காததால் என்னால் படம் பார்க்க முடியவில்லை. மேலும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் பார்க்க முடியவில்லை என்றார்.

காலம் விரைவில் வரும்
கேள்வி: பான் இந்தியா படங்களில் எப்பொழுது நடிப்பீர்கள்?
பதில்: நான் ஏற்கனவே மலையாளம், தமிழ் படங்களில் நடித்துள்ளேன். தற்போது தெலுங்கு, தமிழ் படங்களில் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு பிறகு பான் இந்தியா படங்களில் நடிப்பேன். இந்த படங்களில் நடிப்பதற்கு முன் நமக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்க வேண்டும். அதற்கான காலம் விரைவில் வரும் என்று நம்புகிறேன் என்றார்.

அர்த்தமற்றது
கேள்வி: கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
பதில்: கண்டிப்பாக கடவுள் இருக்கிறார். நம் நாட்டில் நிறைய பள்ளிக்கூடங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பள்ளிக்கூடம் பிடிக்கும். பள்ளிக்கூடங்கள் முக்கியமில்லை. அங்கு நல்ல பழக்கங்களை படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பது தான் முக்கியம். அது போலத்தான் கடவுளும். கடல் என்பது பொதுவானது. இந்த பகுதியில் உள்ள கடல் தான் பிடிக்கும் என்று கூறுவது அர்த்தமற்றது என்றார்.
நிறைய கடன்கள் இருக்கிறது
கேள்வி: நீங்கள் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு?
பதில்: நான் முதல் படத்தில் சம்பளம் இல்லாமல் நடித்தேன்.அவர்கள் கொடுத்தார்கள். நான் வேண்டாம் என்றேன். ஏனென்றால் வாய்ப்பு கொடுப்பதே பெரிய விஷயம். அதற்கு ஊதியமா என்று கருதினேன். அப்படி அமைந்தது தான் லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்த பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்த கதாபாத்திரம். இரண்டாவது படமான சென்னை28ல் ரூ.12000 சம்பளம் பேசினார்கள். ஏனென்றால் நடிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால்... பின்னர் படம் நன்றாக ஓடியபோது, ஊதிய உயர்வு 8000த்துடன் ரூ.20000 சம்பளமாக பெற்றேன். நான் இப்படத்திற்கு முதலில் வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.1000 மட்டுமே. இப்பொழுதும் நான் நடிக்கும் படங்களுக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. படம் ஓடினால் எனக்கு கொடுங்கள் என்று மட்டுமே கூறுவேன். 100 கோடி, 200 கோடி பட்ஜெட் படம் என்றால் நமது சம்பளத்தை கேட்கலாம். படத்தின் பட்ஜெட் பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன் என்றால் நான் பணக்காரன் என்று அர்த்தமில்லை. எனக்கு நிறைய கடன்கள் இருக்கிறது என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=m5gGgXSFvX0 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications