நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் அடல்ட் படத்தில் நடிக்க தயார்...அறிவுக்கு நிறம் கிடையாது என்று சொன்ன நடிகை
சென்னை: பல விருதுகளை பெற்றிருக்கும் "மாடத்தி" திரைப்படத்திற்கு தமிழகத்தில் அங்கீகாரம் கொஞ்சம் குறைவு தான் என்று நடிகை செம்மலர் அன்னம் தெரிவித்தார்.
பெண்களின் உணர்வுகளை சொல்வதற்கு சினிமாத்துறையில் ஆட்கள் நிறைய இல்லை என்றும்,, அறிவுக்கு நிறம் கிடையாது என்றும் தெரிவித்தார்.
எஸ்.ஜே.சூர்யா தான் நான் இயக்குனராவது காரணம் என்றும், நம்பிக்கையை கொடுக்கக்கூடிய கதைகள் என்னை விட்டு கைநழுவும் போது மனம் உடைந்து போனதாகவும் தெரிவித்தார். பல விருதுகளை கைப்பற்றி கொண்டிருக்கும் மாடத்தி, செந்நாய் போன்ற படங்களில் உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களில் நடித்த செம்மலர் அன்னம், நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி:

புரோமோஷன் செய்யவில்லை
கேள்வி: பல விருதுகளும், நீங்கள் நடித்துள்ள "மாடத்தி" படத்தின் விமர்சனம் எப்படியிருக்கிறது?
பதில்: 2018ம் ஆண்டு மாடத்தி திரைப்படத்தில் நடித்தேன். இத்தனை வருடங்கள் கழித்து பல தடைகளை கடந்து இப்படம் வெற்றி பெற்றுள்ளது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை அனைவரும் பாராட்டினர். மேலும் அழுகையாக நடிக்காதீர்கள், வித்தியாசமாக நடியுங்கள் என்றும் கூறினர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த படத்திற்கு நாங்கள் எந்தவித புரோமோஷனும் செய்யவில்லை. ரசிகர்கள் ரிவியூ எழுதினார்கள். பல விருதுகள் எங்களுக்கு சொந்தமானது. நல்ல திரைபடத்திற்கு விருதுகள் கிடைப்பது மிகப்பெரிய சந்தோஷம். ஆனால் ஒரே ஒரு வருத்தம் மட்டும் தான். தமிழ்நாட்டில் மாடத்திக்கு அங்கீகாரம் கொஞ்சம் குறைவு தான். ஆனால் சினிமா இன்ட்ஸ்டரியலில் உள்ளவர்கள் படத்தை பார்த்து விட்டு நன்றாக உள்ளது என்கின்றனர்.

10 விருதுகள்
கேள்வி: செந்நாய் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: இந்த படத்தில் நான் காசநோய் நோயாளியாக நடித்துள்ளேன். இருமிக்கொண்டே வசனம் பேசினேன். நமது நடிப்பு திறமையை காட்டுவதற்கு ஒரு தளம் என்றே கூறுவேன். செந்நாய் படத்தில் 10 விருதுகள் கிடைத்துள்ளது என்பது ரொம்ப சந்தோஷம்.
கேள்வி: "என்உடம்பு" குறும்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?
பதில்: இந்த குறும்படத்தை எர்த்திலிங் கவுசல்யா இயக்கியிருப்பார். அவர் என்னுடைய ஷார்ட் பிலிம்ஸ் நிறைய பார்த்திருக்கிறார். நான் பல Festivals Artist ஆக சென்றதையும் பார்த்திருக்கிறார். என்னுடன் பணிபுரிய வேண்டும் என்று நோக்கில் என்னை அணுகிய விதம் எனக்கு பிடித்திருந்தது. இந்த குறும்படத்தின் கதை ரொம்ப அழுத்தமானது. இந்த குறும்படத்தை பயத்துடனும், பொறுப்புணர்வுடனும் செய்து கொடுத்தேன்.

Festival Artist
கேள்வி: உங்களுக்கு எப்படி Festival Artist கதாபாத்திரமாகவே அமைகிறது?
பதில்: தெரியவில்லை. நான் தம்பி, பொன்மகள் வந்தாள், அம்மணி போன்ற கமர்ஷியலான படங்களிலும் நடித்துள்ளேன். நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்பதில்லை. Festival படத்திற்கு எதார்த்தமான கதையும், எதார்த்தமான கதாபாத்திரமும் தேவைப்படுகிறது. எதார்த்தமான கதாபாத்திரத்திற்கு நான் சரியாக பொருந்துவதால் என்னவோ என்னை அழைக்கிறார்கள். அதுமட்டுமின்றி 2008ல் நான் டைரக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கோயம்புத்தூரில் Visual Communction படிக்க ஆரம்பித்தேன். ஷார்ட் பிலிம் டைரக்ட் பண்ணுவேன். எனக்கு டெக்னிக்கல் தொடர்பான விஷயங்கள் தெரியாது. அப்போதைய எனது காதலரும், தற்போதைய எனது கணவர் தான் உதவி செய்வார்.

கஷ்டப்படவில்லை
கேள்வி: நீங்கள் எப்பொழுது மிகவும் வருத்தப்பட்டுள்ளீர்கள்?
பதில்: எனக்கு இளம் வயதில் நடிப்பு மீது ஆர்வம் இருந்தது. ஆனால் எனது கலர் கருப்பாக இருந்ததால் நடிப்பின் மீது ஆர்வம் காட்டவில்லை. கருப்பாக இருந்தால் நடிகையாக முடியாது என்ற எண்ணம் மேலோங்கியது. அதனால் இயக்குனராக வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. ஆனால் தனியாக நான் அறைக்கு சென்று நான் நடித்து பார்ப்பேன். நாம் நினைப்பது தான் நடக்கும் என்பது போல நான் நடிகையாகி விட்டேன்.
நான் நினைத்த அளவுக்கு சினிமாத்துறையில் கஷ்டப்படவில்லை. ஏனெனில் சம்பளம் இல்லாமல் அசிஸ்டென்ட் இயக்குனராக வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருந்தேன். ஆனால் தற்போது நடிப்பதற்கு சம்பளம் கொடுக்கிறார்கள். அதனால் நான் எப்பொழுதும் வருத்தப்பட்டதில்லை. நான் யாரையும் தேடி போய் வாய்ப்புகள் கேட்பதில்லை. அவர்களாக வந்து என்னை அணுகினார்கள். அவ்வாறு அணுகி சில முக்கியமான கதாபாத்திரங்கள் நமக்கு அமைந்து, கடைசி நேரத்தில் அது நமது கையை விட்டு போகும்போது மட்டுமே நான் வருத்தப்பட்டுள்ளேன் என்றார்.

ஆட்கள் இல்லை
கேள்வி: நீங்கள் இயக்கிய முதல் படமான First Rain குறித்து...
பதில்: First Rain படத்துக்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. பெண்களின் உணர்வுகளை சொல்லுங்கள். இதை சொல்வதற்கு ஆட்கள் இல்லை என்றனர்.
கேள்வி: நீங்கள் நடிப்பதற்கும், இயக்குனராவதற்கும் யாரெல்லாம் காரணமாக நினைக்கிறீர்கள்?
பதில்: 2014ம் ஆண்டு இயக்குனர் வசந்த் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். சில காரணங்களால் தடைப்பட்டது. எனக்குள் இருக்கும் நடிப்பு திறமையை அருண்மொழி சிவப்பிரகாசம் வெளிக்கொண்டு வந்தார். அப்பொழுது அவர் ஆக்டிங் கிளாஸ் ஆரம்பித்தார். இதில் 5 வருடங்கள் பயணித்தேன். இதிலிருந்து நடிப்பு போன்ற பல விஷயங்களை மெருகேற்றிக் கொண்டேன்.
இன்னும் சொல்லப்போனால் நடிகரும், இயக்குனருமாகிய எஸ்.ஜே. சூர்யா தான் என்னுடைய ரோல் மாடல். அவரை பார்த்து தான் இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. எனக்கு காமெடி ரொம்ப பிடிக்கும். இன்றும் கூட Mr. Bean பார்த்து சிரிப்பேன் என்றார்.

அடல்ட் கதை
கேள்வி: Dusky Skin குறித்து என்ன நினைக்கிறீங்க?
பதில்: ஒரு காலத்தில் இது குறித்து பயந்து இருக்கிறேன். தற்போது சரண்யா ரவி, கேபிரில்லா போன்றவர்களெல்லாம் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். என்னையும், கேபியையும் சகோதரிகளாக எல்லோரும் நினைக்கிறார்கள். சரண்யா ரவி துருதுருப்பானவர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அவர் ரொம்ப வேகமானவர் என்றார். நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் அடல்ட் கதையில் கூட நான் நடிப்பேன் என்றார்.

அப்பத்தாவில் நான்...
கேள்வி: இயக்குனர் பிரியதர்ஷனின் அப்பத்தா படம் குறித்து...
பதில்: நான் இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான், ஒரு சின்ன ரோலுக்கு ஆடியன்ஸ் ஆக அனுப்பினேன். எனது நடிப்பை பார்த்து எனக்கு சீதா எனும் கேரக்டரை கொடுத்தனர். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நடிகை ஊர்வசி அவர்களுடன் நடித்தது நான் செய்த பெரும் பாக்கியம். National School of Drama வில் எனக்கு பிடித்த மெலடி, அப்பத்தா படத்திலும் நடித்துள்ளார். மற்றொரு நபரான ஜானகி பிரெஞ்சு படத்தில் நடித்துள்ளார். தற்போது கூத்துப்பட்டறை நடத்தி வருகிறார்.

பிரமிப்பு
கேள்வி: உங்களால் நம்ப முடியாதது ஏதாவது விஷயம் உண்டா?
பதில்: நான் நடித்த பேடிஎம் விளம்பர படம். நான் எதார்த்தமாக வீட்டிலிருந்து பூ விற்பது போன்று ஆடியன்ஸ் செய்து அனுப்பியிருந்தேன். அவர்களும் வாருங்கள் என்று அழைத்தனர். நான் அங்கு சென்றபோது தான் பெரிய பஸ்ஸ்டாண்டை வாடகை எடுத்திருந்ததும், பஸ்சை வாடகை எடுத்திருந்தும் பிரமிப்பை ஏற்படுத்தியது. சூரரைப்போற்று கேமராமேன் அந்த விளம்பரத்தை ஷூட் செய்தார். அந்த விளம்பரத்தில் நானும் ஒரு கேரக்டர் செய்திருந்தது வித்தியாசமான அனுபவம் என்றார்.
மெருகேற்றுங்கள்
கேள்வி: உங்களுடைய கனவு என்ன?
பதில்: தற்போது நான் ஒரு படத்தை இயக்க உள்ளேன். அந்த படத்தின் கதை எனது தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்தும், எனது தனிப்பட்ட உணர்விலிருந்து உருவாகும். எனது கணவர் இந்த படத்தை நான் தனியாக இயக்குவதற்கு சுதந்திரம் அளித்துள்ளார். நான் இந்த அளவுக்கு வளருவதற்கு காரணம் குறும்பட இயக்குனர்கள் தான். அவர்கள் எனக்கு கொடுத்த வாய்ப்புகள் தான் என்னை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளது. அவர்களுக்கு நன்றி. நிறத்தை பற்றி யாரும் கவலை கொள்ள தேவையில்லை. அறிவுக்கு நிறம் கிடையாது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமைகள் இருக்கின்றன. அவ்வப்போது உங்களது திறமையை மெருகேற்றுங்கள். வாய்ப்பு வரும்பொழுது உங்களது திறமை கண்டிப்பாக வெளிவரும் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/_B0G0P7y4Wo இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகை செம்மலர் அன்னம் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள் .


Click it and Unblock the Notifications











