தமிழ் தெரியாதவங்க கூட நடிச்சி இருக்கேன்.. டயலாக் மிஸ் பண்ண மாட்டாங்க.. அசோக் செல்வன் சுவாரஸ்யம்!
சென்னை: ரா. கார்த்திக் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் நித்தம் ஒரு வானம்.
நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன், நடிகைகள் ரிதுவர்மா, சிவாத்மிகா ஆகியோர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

நடிப்பு சிக்கலான விஷயம்
கேள்வி: அசோக் செல்வன், நித்தம் ஒரு வானம் படத்தில் உங்கள் கதாபாத்திரம் குறித்து...
பதில்: நித்தம் ஒரு வானம் நல்ல கதையம்சம் கொண்ட காதல் திரைப்படம். இப்படத்தை இயக்குநர் ரொம்ப சுவாரஸ்யமாக படமாக்கியுள்ளார். இப்படத்தில் நான் ரொம்பவும் கூச்சு சுபாவம் கொண்ட அமைதியான அர்ஜுன் கதாபாத்திரம், எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வீரா கதாபாத்திரம், கிராமத்து இளைஞனாக பிரபா என மூன்று விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கும் போது உளவியல் ரீதியாக ஒரு தொடர்பு இருந்தது. இந்த மூன்று கதாபாத்திரம் மாதிரி வாழ வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்த பிறகும் பாத்திரத்தின் தாக்கம் என்னுள் இருந்தது. பல சமயங்களில் அதிலிருந்து வெளிவருவது கொஞ்சம் சிரமமாக இருந்தது என்றார். மேலும் அவர் கூறுகையில், நடிப்பு என்பது ஒரு சிக்கலான விஷயம். ‘ஆக்ஷன், கட்' சொல்வதற்குள் நம்மை சுற்றி வேறு உலகம் இயங்கும். ஆனால் நாம வேறு உலகத்தை கற்பனை செய்து கொண்டு அதற்குள்ளே இயங்க வேண்டும். சில சமயம் அது உணர்வு பூர்வமானதாக இருக்கும். சில சமயம் ரொம்ப மெக்கானிக்கலாக இருக்கும். ஆனால் இத்திரைப்படத்தை பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்கும் என்றார்.

தவறாக பேசியது கிடையாது
கேள்வி: அசோக், இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் உங்களுக்கு... அது குறித்து...
பதில்: இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள மூன்று கதாநாயகிகளும் மிகவும் அழகானவர்கள் மற்றும் திறமையானவர்களும் கூட. நம்முடன் இணைந்து நடிப்பவர்கள் சிறப்பாக நடிக்கும் போது, நமது கதாபாத்திரமும் சிறப்பாகப் பேசப்படும். அந்த வகையில் இவர்களின் நடிப்புத் திறமையால், எனது திறமையை வெளிக்காட்ட முடிந்தது. நடிகை ரிது வர்மாவை பொறுத்தவரை அவர்களுக்கு தமிழ் தெரியாது, ஆனாலும் அவர்களுடன் நான் இரண்டு படம் நடித்திருக்கிறேன். ஒருமுறை கூட அவர் வசனத்தை தவறாக பேசியது கிடையது என்றார்.

குளிர் சிரமமாக இருந்தது
கேள்வி: இப்படத்தின் படப்பிடிப்பு பனிப்பிரதேசங்களின் நடத்தப்பட்டது எப்படியிருந்தது ?
பதில்:வெகு நாட்களுக்குப் பிறகு பனிப் பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ள திரைப்படம் இது. தியேட்டரில் இப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள், அந்த பனிப்பிரதேசங்களுக்கு சென்று வந்தது போல் உணர்வார்கள். மேலும், படப்பிடிப்பின் போது -10 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்தது. உடல் ரீதியாக மிகுந்த சிரமம் இருந்தாலும் திரைப்படமாக பார்க்கும் போது மிகவும் அழகாக உள்ளது.
ஒவ்வொரு படமும் பிரசவம் மாதிரி
கேள்வி: பான் இந்தியா படங்களில் எப்போது நீங்கள் நடிப்பீர்கள்?
பதில்: பான் இந்தியா படங்களில் நடிப்பது என்பது எல்ல நடிகர்களுக்கும் விருப்பமாக இருக்கும். பிரம்மாண்டம் செட்ல இருக்கலாம், பாடல்களில் இருக்கலாம், கான்செப்ட்ல இருக்கலாம். வருங்காலத்தில் கதைக்காக படம் நிறைய நாட்கள் ஒடலாம். அப்ப டைட்டில் எழுத்து போட்டவுடனே கைதட்டல் வருகின்ற நிலைமை வரனும். ஏன்னா கதை இல்லாமல் ஒரு படம் வெற்றி பெற முடியாது. காந்தாரா படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. முதலில் அந்த படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். மொழிகளை தாண்டி படங்கள் பேசப்படனும். அது தான் படத்திற்கு வெற்றி. அது காந்தாராவிற்கு கிடைத்துள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், இந்த வருடம் வரிசையாக நான்கு படங்கள் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு படமும் என்னைப் பொறுத்தவரை ஒரு பிரசவம் மாதிரி தான். என்னோட நட்சத்திர பிறந்தநாளன்று நித்தம் ஒரு வானம் திரைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்த்தால், அதுவே எனக்கு பிறந்த நாள் பரிசு என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/YMbsVMKEZjo இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications