Exclusive:'ஜெயலலிதாவாக மட்டுமல்ல சசிகலாவாகவும் நடிக்கத் தயார்'... கெத்து காட்டும் மஞ்சிமா மோகன்!
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் சசிகலாவாக நடிக்க தயாராக இருப்பதாக நடிகை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவாக மட்டுமல்ல சசிகலாவாகவும் நடிக்க தான் தயார் என்று நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அடுத்தடுத்து நடித்த படங்கள் அவருக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
இந்நிலையில் கவுதம் கார்த்திக் நடிப்பில், முத்தையா இயக்கியுள்ள தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார் மஞ்சிமா. இந்த படத்தை அவர் பெரிதாக நம்பியுள்ளார்.
இப்படம் குறித்து ஒன்இந்தியா பிலிமிபீட் தமிழ் இணையதளத்துக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி:
திருப்புமுனை
"பொதுவாக முத்தையா படங்களில் ஹீரோயின்களுக்கு அவ்வளவாக வேலை இருக்காது. ஆனால் இந்த படத்தில் எனது கதாபாத்திரம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். இளநிலை வழக்கறிஞராக இந்த படத்தில் நடித்துள்ளேன். ஹீரோ பின்னாடி சுற்றி வந்து டான்ஸ் ஆடுவது மட்டும் எனது வேலையாக இருக்காது.

நல்ல படங்களாக தான் தேர்வு செய்கிறேன்
நான் நல்ல படங்களாக தான் தேர்வு செய்கிறேன். அச்சம் என்பது மடமையடா படம் ரிலீசாவதற்கு முன்பே வந்த வாய்ப்பு தான் சத்ரியன். ஆனால் அந்த படத்தை பார்த்த போது இது சரியாக போகாது என்பதை உணர்ந்துகொண்டேன். அது எனக்கு ஒரு வருத்ததை தந்தது. பிறகு சுதாரித்து கொண்டு கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன்.

ஜெயலலிதா பயோபிக்
ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அந்த படங்களுக்கு ஏற்கனவே நடிகைகளை முடிவு செய்துவிட்டனர். எனவே அதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதா பற்றிய வெப்சீரிஸில் நடிக்க கவுதம் கூப்பிட்டார். ஆனால் வெப்சீரிஸில் நடிக்க விருப்பம் இல்லாததால் நோ சொல்லிவிட்டேன்.

சசிகலாவுக்கும் ஓகே தான்
ஒரு நடிகையாக எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அந்த வகையில் சசிகலா கதாபாத்திரத்திலும் நடிக்க நான் தயார். இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன். இதில் நடிக்க மாட்டேன் என எந்த வரையறையும் எனக்கு கிடையாது.

நீண்ட நாட்கள் இருக்க ஆசை
சினிமாவில் நான் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால் தான் எனது கதாபாத்திரங்களை நிதானமாக தேர்வு செய்து நடித்து வருகிறேன். எனக்கு எல்லா ஹீரோக்களோடும், இயக்குனர்களோடும் பணியாற்ற வேண்டும் என்பது ஆசை. குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது பேராசை".
இவ்வாறு மஞ்சிமா மோகன் கூறினார்.
மஞ்சிமா, கவுதம் கார்த்திக் முழு வீடியோ பேட்டியை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications











