ஒரே நேரத்தில் 2 படம் இயக்குவது பிரச்னையில்லை... அசர்பைஜானில் இருந்து இயக்குனர் ஆர்.கண்ணன் பேட்டி
சென்னை: ரஷ்யா அருகில் உள்ள அசர்பைஜான் நாட்டில் இருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன். கடும் குளிரில் பரபரப்பாக நடைபெறுகிறது இவர் இயக்கும் படத்தின் ஷூட்டிங்.
இவர், வினய், சந்தானம் நடித்த ஜெயம் கொண்டான், பரத், தமன்னா நடித்த கண்டேன் காதலை, ஆர்யா, சந்தானம் நடித்த சேட்டை, விமல், சூரி நடித்த, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, அதர்வாவின் பூமரங்க் உட்பட சில படங்களை இயக்கியவர். இப்போது, அதர்வா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

''இது எளிமையான காதல் கதை. ஆனால், திரைக்கதை புதுமையாக இருக்கும். படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிந்துவிட்டது. இன்னும் 10 நாள் ஷூட்டிங் பாக்கி. அதற்காக அசர்பைஜான் வந்திருக்கிறோம். 28 ஆம் தேதி வரை இங்கு ஷூட்டிங் நடக்க இருக்கிறது'' என்கிறார் கண்ணன்.
ஏன் அசர்பைஜான்?
கதையின் ஒரு பகுதி வெளிநாட்டில் நடக்கிறது. குளிர் பிரதேச நாடு தேவைபட்டதால், இங்கு வந்தோம். இந்த லொகேஷன் புதியதாக இருக்கும். கடும் குளிர் இங்கு. எங்கும் பனியாக இருக்கிறது. இப்படியொரு குளிரில் ஷூட்டிங் நடத்துவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.
அதர்வா, துபாயில் சிக்கிக்கொண்டாராமே?
அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் டீமோடு இணைந்திருக்க வேண்டும். துபாயில் கடும் மழை. ரன்வேயில் தண்ணீர் தேங்கியிருந்ததால் விமானங்கள் செல்ல முடியவில்லை. இதனால் 24 மணி நேரம் அவர் அங்கேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் மறுநாள் வந்தார். வந்ததுமே ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.
படத்துக்கு டைட்டில்?
இன்னும் வைக்கவில்லை. அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கிறார். ஆடுகளம் நரேன், காளிவெங்கட், அமிதாஸ் பிரதான் உட்பட பலர் நடிக்கிறார்கள். நானே எனது மசாலா பிக்ஸ் மூலம் தயாரித்து இயக்குகிறேன்.
சந்தானம் படம்...
சந்தானம் நடித்துள்ள படம் ஒன்றையும் இயக்கியுள்ளேன். அது இப்போதுதான் முடிந்துள்ளது. அதை முடித்ததும் இதைத் தொடங்கிவிட்டேன். இதன் ஷூட்டிங் முடிந்ததும் எதை முதலில் ரிலீஸ் செய்வது என்று முடிவு செய்வோம். ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்குவது பிரச்னையாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி டீம் என்பதால் எளிதாக இருந்தது.


Click it and Unblock the Notifications











