சூப்பர் குட் பிலிம்சின் 100வது படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறாரா? டாப் சீக்ரெட் சொன்ன நடிகர் ஜீவா!
சென்னை: அவினி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, நடிகைகள் மாளவிகா சர்மா, அமிர்தா, ரைசா, டி.டி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காபி வித் காதல்.
இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நவம்பர் 7ம் தேதி வெளியிடுகிறது. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஜீவா நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

வெள்ளிக்கிழமைக்காக காத்திருக்கிறேன்
கேள்வி: உங்களுக்கு பெரியதொரு படம் அமையவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
பதில்: நான் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். படங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை. படத்தின் தரம் தான் முக்கியம். நான் நடித்த படங்களில் குறைந்தது 10 படங்களையாவது தேர்வு செய்து, அனைத்து நேரங்களிலும் பார்க்கக்கூடிய படமாக அது அமையும். ரசிக்க முடியும் என்றார். மேலும் அவர் கூறுகையில், இன்னும் சொல்லப்போனால் இயக்குனர்களை நான் தான் தேர்வு செய்கிறேன். பெரும்பாலும் புது முக இயக்குனர்கள். இயக்குநர் சுந்தர்.சி. படங்களில் மட்டும் தான் நான் திரும்ப நடிக்கிறேன். மற்ற இயக்குநர்களை பொறுத்தவரை அதிகபட்சமாக 3 படங்களை மட்டும் தான் இயக்கியிருப்பர். அவர்கள் என்ன கதாபாத்திரம் வடிவமைக்கிறோர்களோ, அதை நான் செய்கிறேன். இனிவரும் காலங்களில் பிரபலமான இயக்குநர்களின் படங்களில் நடிப்பேன் என்றார். மேலும் அவர் கூறுகையில், நீங்கள் (பத்திரிகையாளர்கள்) 200 படங்கள் வரை பார்ப்பீர்கள். ஆனால் அவற்றில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு 4 படங்களை மட்டும் தான் உங்களால் கூற முடியும். அந்த நான்கு படங்கள் வந்த வெள்ளிக்கிழமைக்காக நானும் காத்திருக்கிறேன் என்றார்.

மொழியை தாண்டியது
கேள்வி: சமீபத்தில் வெளியான காந்த்தரா, பொன்னியின் செல்வன் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: பொன்னியின் செல்வனில் சிறப்பாக நடித்த எனது நண்பர்கள் கார்த்திக், விக்ரம், த்ரிஷா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். வசூலிலும் படம் சிறப்பானதொரு இடத்தை பெற்றுள்ளது. அதுபோல் மொழியை தாண்டி காந்த்ரா படம் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளது. சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், கூகுளில் இல்லாத ஒரு விஷயத்தை மக்களுக்கு சொன்னால் கண்டிப்பாக அத்திரைப்படம் வெற்றி பெறும் என்றார்.

Live Sound
கேள்வி: டப்பிங் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: என்னை பொறுத்தவரை டப்பிங் என்பது இருக்கக்கூடாது. நாம் படப்பிடிப்பின்போது என்ன பேசுகிறோமோ அது தான் இடம் பெற வேண்டும். 83 படத்தின் படப்பிடிப்பின்போது நான் என்ன பேசினேனோ அது தான் இடம்பெற்றது. டப்பிங் இல்லாமல், நாம் எதார்த்தமாக பேசும்பொழுது Up and Down இருக்கும். இனி வரும் காலங்களில் மக்கள் அதை தான் விரும்புவார்கள். இந்திய சினிமாத்துறையில் Live Sound ஐ எடுக்க முடியாது. ஏனெனில் காகம் கத்துவதும், வெடி சத்தம் கேட்பதும் எதார்த்தம். அதை சாத்தியப்படுவதற்கு ஒழுக்கம் தேவை. அதிக நேரம் தேவை. பட்ஜெட் அதிகமாகும் என்றார். மேலும் அவர் கூறுகையில் தற்போது டெக்னாலஜியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு அறையை உருவாக்கி 200 கேமராக்களை வைத்து, கதாநாயகர்கள் இல்லாமல் அவர்களை போல் உருவத்தை வடிவமைத்து படம் எடுக்கக்கூடிய சூழலும் வந்து விட்டது என்றார்.

குழந்தைகளுக்கு பிடிக்கும்
கேள்வி: உங்களுடைய அடுத்த இலக்கு?
பதில்: எங்களது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ள வரலாறு முக்கியம் படத்தில் நடித்துள்ளேன். இப்படமானது சிவா மனசுல சக்தி படம் மாதிரி எமோஷனல் கலந்த படமாக இருக்கும். அடுத்தபடியாக கலகலப்பு படம்போல் கோல்மால் என்ற படத்திலும் நடித்துள்ளேன். இரண்டும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. புதுமுக இயக்குநர் கே.ஜி.பாலா இயக்கத்தில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ஒரு த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறேன். மேலும் பா. விஜய் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரம்மாண்டமான, அமானுஷ்யம், மாயாஜலம் நிறைந்த படத்தில் நானும், நடிகர் அர்ஜூன், யோகிபாபு, ராஷிகண்ணா ஆகியோர் நடித்துள்ளோம். சிறந்த டெக்னாலஜியை பயன்படுத்தி உருவாகியுள்ள இப்படமானது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். மேலும் இப்படமானது சித்தர்கள், சித்தமருத்துவம், ஹோமியோ , பூமியிலிருந்து கிடைக்கும் இயற்கையான உணவுகள் போன்றவற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது என்றார்.

சூழ்நிலை முக்கியம்
கேள்வி: உங்களுடைய மகனை ஏதோ சாதாரண பள்ளியில் படிக்க வைத்து வருகிறீர்கள் என்று கூறுகிறீர்களா? அது உண்மையா?
பதில்: தவறாக கூறுகிறார்கள். எனது மகனை வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் தான் படிக்க வைத்து வருகிறேன். நான் எந்த சூழ்நிலையில் படித்து வளர்ந்தேனோ அதே சூழ்நிலையில் தான் அவனையும் வளர்க்கிறேன். அதாவது வெளிநாட்டு Syllabus ஆன கொரியன், அமெரிக்கா போன்வற்றில் படிக்க வைக்காமல் Indian Syllabus ல் படிக்க வைக்கிறேன் என்றார்.
கதை ரெடியாகவில்லை
கேள்வி: சூப்பர் குட் பிலிம்சின் 100வது படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறாரா?
பதில்: நாங்கள் தற்போது 96வது படத்தை தான் தயாரித்து வருகிறோம். 95வது படத்தில் நடிகர் சீரஞ்சீவி நடித்து வருகிறார். 100வது படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. கதை இன்னும் ரெடியாகவில்லை. கதை ரெடியாக இன்னும் 2 வருடங்கள் கூட ஆகலாம். அதற்கு பிறகு அறிவிப்பு வரும் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=preA4Zi0y00 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications