Exclusive - சிவகார்த்திகேயனை செமயாக சிரிக்க வைத்த ஜெகன்.. காயலாங்கடை டூ தாய் கிழவி பாடலாசிரியர்.. செம பயணம்
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தாய் கிழவி திரைப்படம் நேற்று வெளியாகி சூப்பர் வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் எப்படி வரவேற்பை பெற்று கவனத்தை ஈர்த்திருக்கிறதோ அதேபோல் அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டு பாடல்களை எழுதி கவனம் ஈர்த்திருக்கிறார் பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ். அவர் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
'உழைத்தால் எவரும் முன்னேறலாம்.. எடுத்துக்காட்டு இந்த சினிமாதான்' என குசேலன் பட பாடலில் வாலி ஒரு வரி எழுதியிருப்பார். அந்த வரிக்கு லேட்டஸ்ட் உதாரணமாகியிருக்கிறார் பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ். தென்காசி மாவட்டத்தில் பள்ளி படிப்பை தாண்டாமல் தனக்கு ஏற்பட்ட வாழ்க்கை அனுபவத்தையும், கனவையும் வைத்துக்கொண்டு சினிமாவில் வெல்ல சென்னைக்கு வந்தவர் அவர். ஏகப்பட்ட தடுமாற்றங்கள், அவமானங்கள் என அத்தனையையும் சந்தித்து; 'ஜீரக பிரியாணி' பாடலை எழுதி சினிமாவில் அடையாளம் பெற்றார். தொடர்ந்து பாடல்கள் எழுதிய அவருக்கு திரைத்துறையில் துரோகங்களும் நடந்திருக்கின்றன.
தாய் கிழவி பாடலாசிரியர்: அந்தத் துரோகங்களையும் துடைத்து எறிந்துவிட்டு திறமை மீது நம்பிக்கை வைத்து பயணப்பட்டார். அடிப்படையில் அவர் ஒரு பத்திரிகையாளர். பத்திரிகையாளராக மட்டுமின்றி வாழ்க்கையில் அவர் பார்க்காத வேலைகளே இல்லை என சொல்லலாம். ஏகப்பட்ட அனுபவங்களை தனது மூளையில் ஏற்றி அதை கதைகளாக, பாடல்களாக காகிதத்தில் இறக்கி அனைவரையும் ரசிக்க வைப்பவர். தற்போது தாய் கிழவி படத்தில் இரண்டு பாடல்களை எழுதி அப்ளாஸை அள்ளியிருக்கிறார்.

ஜெகன் கவிராஜ் பேட்டி: அந்தப் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. இதற்கிடையே தாய் கிழவி ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் அவர் பேசியதை பார்த்து சிவகார்த்திகேயன் உட்பட அனைவருமே விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்கள். அந்த வீடியோவை பார்த்து யாருப்பா இது என சோஷியல் மீடியாவில் எல்லாம் கேள்விகள் முளைத்தன. இந்நிலையில் அந்த ஜெகன் கவிராஜ் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
ஜெகன் கவிராஜ் பேசியது: தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவருக்கு வாழ்த்துகளை சொல்லி பேச்சை தொடங்கினோம். படபடவென்று பட்டாசாக அதே நேரம் தெளிவாக பேசினார். அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டது பின்வருமாறு: 'பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மை டியர் சிஸ்டர் படத்தில் நான் ஒரு பாடல் எழுதியிருந்தேன். நிவாஸ் கே பிரசன்னாதான் இசையமைப்பாளர். அந்தப் பாடலில் எனது வரிகளை பார்த்துவிட்டு ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து பயணிப்போம் என சொன்னார். அதற்கடுத்து அவர்தான் தாய் கிழவி இயக்குநரை சந்திக்க வைத்தார். அந்த இயக்குநருக்கு மதுரை எனக்கு தென்காசி. கதை தொடர்பாக பேசினோம். அதில் அவருக்கும் எனக்கும் ஒத்துப்போனது. உடனே பாடல் வேலைகளை ஆரம்பித்தோம்.
படத்தில் இரண்டு பாடல்கள்: கிழக்கு சீம கிழவி, அம்மா தாயே போச்சு உன்னை கண்டோம் தெய்வ காட்சி என இரண்டு பாடல்களை எழுதினேன். முதல் பாடல் பிடித்துப்போனதால் இரண்டாவது பாடலுக்கான வாய்ப்பு கிடைத்தது. ராதிகா நடித்த கிழக்கு சீமையிலே படத்தை யாராலும் மறக்க முடியாது. அதை மனதில் வைத்துதான் பாடல் அந்த வார்த்தையில் தொடங்கும்படி எழுதினேன். அது இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் ரொம்பவே பிடித்துவிட்டது.

சாலையில் எழுதினேன்: எப்போதுமே எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. இயக்குநர் எனக்கு சூழல் ஒன்றை சொல்லிவிட்டால் இசையமைப்பாளர் ட்யூன் அனுப்புவதற்கு முன்பே நான் ரேண்டமாக எழுதி வைத்துக்கொள்வேன். அப்படி ஏற்கனவே கிழக்கு சீம கிழவி என எழுதி வைத்திருந்தேன். ஒருநாள் நான் பைக்கில் புதிய தலைமுறை ஆஃபிஸிடம் வந்துகொண்டிருந்தபோது நிவாஸ் ஃபோன் செய்து ட்யூன் சொன்னார். உடனே நானும் கடகடவென்று வரிகளை சொல்லிவிட்டேன்' என்றவரிடம் புதிய தலைமுறை ஆஃபிஸிடமிருந்து புதிய தலைமுறை பாடலாசிரியர் உருவாகிவிட்டார் என வாழ்த்து சொன்னதற்கு சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு தனது வாழ்க்கை அனுபவங்களை பேச தொடங்கினார்.
யார் சாமி நீங்க?: நான் தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பூலாங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவன். அதே கிராமத்தில் மாயவநாதன் என்ற பாடலாசிரியர் இருந்தார். அவர் பூம்புகார், படித்தால் மட்டும் போதுமா உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். அவர் ஒருவகையில் எங்களுக்கு உறவினரும்கூட. நான் சிறு வயதாக இருந்தபோது அவரைப் பற்றி எங்கள் ஊரில் பெருமையாக பேசிக்கொண்டே இருந்தார்கள். அப்போ நாமும் பாடல் எழுதினால் நம்மையும் இப்படி பெருமையாக பேசுவார்களே என நினைத்துக்கொள்வேன்.
அப்போதே நான் தேர்தல் பரப்புரைக்கு செல்வது, ஊர் நாடகங்களில் நடிப்பது, பாடல்கள் பாடுவது என சிறு வயது கலைஞனாகத்தான் இருந்தேன். அதை பார்த்துவிட்டு குட்டி அண்ணன் என்பவரும், வைத்தி மாமா என்பவரும் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, 'நீ மட்டும் சென்னைக்கு போனாய் என்றால் சினிமாவில் ஈசியா ஓசியா எடுத்துக்கொள்வார்கள்' என சொன்னார்கள். அப்போதிருந்து நாம் ஒரு கலைஞன் படிக்கக்கூடாது என நினைத்துக்கொண்டு ஆறாம் வகுப்பிலிருந்து படிக்கவில்லை. அது ரொம்ப கேவலமான ஒன்று. அதனால்தான் இப்போது நான் பார்க்கும் பிள்ளைகளை எல்லாம் படித்துவிடுங்கள் என சொல்லிவருகிறேன்.
ஒழுங்காக இல்லை: பள்ளிக்கு போகாமல் நான் ஊரில் ரொம்பவே தவறான ஒரு ஆளாக இருந்தேன். இனிமேல் இவன் இங்கே இருந்தால் சரிப்பட்டு வரமாட்டான் என முடிவு செய்து என்னை எனது அப்பாவும், அம்மாவும் காஞ்சிபுரத்துக்கு பேக் செய்துவிட்டார்கள். அங்கே காயலாங் கடை வியாபாரம் தெருத்தெருவாக பார்த்தேன். காஞ்சிபுரம் இலக்கிய ரீதியாக பயங்கரமான ஊர். நா.முத்துக்குமார் உள்ளிட்டோர் எல்லாம் அந்த ஊர்க்காரர்கள்தான்.
காலை வியாபாரம், மதியம் படிப்பு: அந்த வியாபாரம் செய்யும்போது நிறைய பழைய புத்தகங்களை படிப்பேன். அப்போது இலக்கியம் மீது பெரிய ஆர்வம் வந்துவிட்டது. அதுமட்டுமின்றி இப்படியே இருந்தால் இலக்கியத்தில் வெல்ல முடியாது என நினைத்திருந்த நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, '10, 12ஆம் வகுப்பை முடிக்காதவர்களும் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் டிகிரி படிக்கலாம்' என ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். அந்த திட்டத்தின்படி இளங்கலை தமிழ் சேர்ந்தேன். காலையில் காயலாங் கடை வியாபாரம், மதியம் படிப்பு என வாழ்க்கை சென்றது. அதில் முதல் வகுப்பில் தேர்வாகி நம்பிக்கை வந்தது. பிறகு சென்னைக்கு வந்துவிட்டேன்.
அப்பா பட்ட அவமானம்: சென்னை வந்த பிறகு சினிமாவில் பல வேலைகளை பார்த்து இப்போது பாடல்கள் எழுதிவருகிறேன். நான் சென்னையில் சினிமாவுக்கு முயற்சி செய்தபோது என்னுடைய அப்பாவும் எனக்காக அலைந்தார். அப்போது ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்திருக்கிறார். அதை பார்த்து என்னால் பொறுக்க முடியவில்லை. உடனே நான் இனிமேல் எனக்காக நீங்கள் இங்கே வர வேண்டாம். என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறி அனுப்பிவிட்டேன்.
பிறகு எப்படியோ முயற்சி செய்து பாடல்கள் எழுத ஆரம்பித்தேன். கலைஞர் கதை, வசனத்தில் நான் பாடல்கள் எழுத வேண்டும்; அதன் மூலம் கலைஞருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அப்பாவுடைய ஆசை. ஆனால் அது நடக்கவில்லை. மாறாக கலைஞரின் பேரன் அருள்நிதிக்கு நான் பாடல்கள் எழுதினேன். மை டியர் சிஸ்டர் ஷூட்டிங்கில் அருள்நிதியிடம் எனது அப்பாவை பற்றி சொன்னேன். உடனே வர சொல்லுங்க என சொல்லி வரவழைத்து நீண்ட நேரம் பேசியிருந்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதை நினைத்து அப்பாவுக்கு பெரிய மகிழ்ச்சி.

சிவகார்த்திகேயனை சிரிக்க வைத்தது பற்றி: தாய் கிழவி ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் பேசியதை பலரும் ரசித்தார்கள். அது எனது இயல்பான பேச்சு கிடையாது. படபடவென்று பேசியிருப்பேன். பெரிய மேடை. உங்களுக்கு மாதிரியே எனக்கும் மூன்று குழந்தைகள் என எஸ்கேவிடம் சொன்னதை மட்டும் சோஷியல் மீடியாவில் கட் செய்து போட்டுவிட்டார்கள். அது பயங்கரமாக ட்ரெண்டாகிவிட்டது. ஏகப்பட்ட பேர் ஃபோன் செய்து பாராட்டினார்கள்.
அந்த மேடையை பெருந்தன்மையோடு எனக்கு சிவகார்த்திகேயன், இயக்குநர் எல்லாம் கொடுத்தார்கள். எஸ்கே அண்ணன் நினைத்திருந்தால் அந்த மேடையை எனக்கு கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் பாடலாசிரியர்களையும் மதிக்க வேண்டும் என இருக்கை கொடுத்து, மேடை கொடுத்தது எல்லாம் அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை காட்டியது. சேயோன் படத்துக்கு வாய்ப்பு கேட்டிருக்கிறேன். சொல்கிறேன் என கூறியிருக்கிறார்கள்" என முடித்தார். நல்லதே நடக்கும் ஜெகன் கவிராஜ்.. வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications















