பராசக்தி வந்தா என்ன? இது ஜனநாயகன் பொங்கல்.. நல்ல செய்திக்காக காத்திருக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன்' படம் 9ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து KVN புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், எமது பிலிமி பீட் சேனல் நேரடியாக மக்களிடம் சென்று, சென்சார் வழங்காதது குறித்து பொதுமக்களின் கருத்தை கேட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஒருவர், படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில், இதுவரை படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்காமல் இருப்பது அரசியல் தான். இது நாள் வரை விஜய் படத்திற்கு இதுபோன்ற சென்சார் கொடுக்கப்படாமல் இருந்தது இல்லை. பழைய படங்களுக்கு நடந்திருக்கு ஆனால், அவை எல்லாம் வேறு காரணத்திற்காக நடந்தவை. விஜய் சினிமாவில் 33 ஆண்டு காலமாக இருந்துவிட்டு தான் அரசியலுக்கு வந்து இருக்கிறார். அவருக்கும் ஒரு வாய்ப்பை தர வேண்டும். அவர் வந்தால் தான், மக்களுக்கு என்ன செய்வார் என்பதை பார்க்க முடியும். பராசக்தி திரைப்படம் அடுத்த நாள் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் இடையே சில சலசலப்பு இருக்கிறது. ஆனால், சிவகார்த்திகேயன் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை கேட்டுத்தான், படத்தை ரிலீஸ் செய்வதாக சொல்லி இருக்கிறார்.அப்படி இருக்கும்போது, ரசிகர்கள் தாக்குதல் நடத்துவேன் என சொல்வது தவறான ஒன்று என்றார்.
கொண்டாடுவார்கள் : இதையடுத்து பேசிய விஜய்யின் ரசிகை, விஜயின் கடைசி படம் இது என்பதால், சென்சாரை விரைவாக கொடுத்தால் நன்றாக இருக்கும். அனைவரும் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவார்கள். இப்படி சென்சாரை இழுத்தடித்து ஏன் கொடுக்கிறார்கள் என்ற காரணத்தை நான் சொல்ல தேவையில்லை. என்ன காரணம் என்று அனைவருக்கும் தெரியும். என்னை பொறுத்தவரை விஜயின் கடைசி படம் என்பதால் இதற்கு சீக்கிரமாக சென்சார் சான்றிதழ் கொடுத்தால் விஜயின் ரசிகர்கள் இந்த பொங்கலை சிறப்பான பொங்கலாக கொண்டாடுவார்கள் என்றார்.
இது ஜனநாயகன் பொங்கல்: மற்றொரு ரசிகர், விஜய் அண்ணாவின் கடைசி படம் இது என்பதால் ரசிகர்களுக்கு இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இதனால், படத்திற்கு விரைவாக சென்சார் சான்றிதழ் கிடைத்தால் நன்றாக இருக்கும். படத்தை தியேட்டரில் கொண்டாட்டத்துடன் பார்ப்போம். அதே போல சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் வெளியாக இருப்பதால், ரசிகர்களுக்குள் ஒரு குழப்பம் இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள், ரசிகர்கள் தான் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதற்கு சிவகார்த்திகேயன் மீது நாம் குறை சொல்ல முடியாது. எந்த திரைப்படம் வந்தாலும் நாங்கள் விஜயின் ஜனநாயகம் படத்திற்காகத்தான் காத்திருக்கிறோம். அந்த படத்தை தான் கொண்டாடுவோம் இது ஜனநாயகன் பொங்கல் என்றார்.


Click it and Unblock the Notifications











