தொட்டதெல்லாம் பொன்னாகாது.. லப்பர் பந்து, குடும்பஸ்தன், தலைவர் தம்பி தலைமையில் பட நடிகர் ஒரே போடு!
சென்னை: சில நடிகர்களையும் நடிகைகளையும் ராசி இல்லாதவர்கள் என சினிமா வட்டாரத்தில் சொல்லி தொடர்ந்து ஒரு சில படங்கள் ஓடவில்லை என்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள். அதே போல ஒரு சில பிரபலங்கள் பணியாற்றும் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றால், அவர்களை மிடாஸ் என்றும் அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகிறது என்றும் கூறும் வழக்கமும் தமிழ் சினிமாவில் உள்ளது.
இந்நிலையில், அப்படியொரு கேள்வியை எதிர்கொண்ட நடிகர் ஜென்சன் திவாகர் அதற்கு சரியான பதிலை கொடுத்த நிலையில், அவரது வீடியோ வைரலாகி வருகிறது.

சினிமாவில் எப்போதுமே எந்தவொரு நடிகரும் வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொண்டிருக்க முடியாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் பல தோல்விகளை கண்டிருக்கிறார். அது போல தோல்விகளை மட்டுமே நடிகர்கள் சந்தித்துக் கொண்டே இருக்க மாட்டார்கள், திடீரென வெற்றிப் படத்தை கொடுத்து கம்பேக் ஆகும் நடிகர்களும் நிறைய பேர் உள்ளனர்.
தொட்டதெல்லாம் ஹிட்: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படத்தில் ஜென்சன் திவாகர் அட்டகத்தி தினேஷின் நண்பராக வந்து அசத்தியிருப்பார். அந்த படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் புதிய காமெடி நடிகராகவே அவர் மாறிவிட்டார். கடந்த ஆண்டு வெளியான குடும்பஸ்தன் மற்றும் ஆண் பாவம் பொல்லாதது உள்ளிட்ட படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இரண்டு படங்களிலும் அவரது நடிப்பு பாராட்டுக்களை அள்ளியது. ரசிகர்கள் தியேட்டரில் குலுங்க குலுங்க சிரிக்க ஜென்சன் திவாகர் காரணமாக இருந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் திடீர் சர்ப்ரைஸ் வெற்றிப் படமாக மாறியுள்ள ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்திலும் ஜென்சன் திவாகர் நடித்துள்ளார்.
உண்மையை பேசிய ஜென்சன் திவாகர்: இப்படி நீங்க நடிக்கிற படமெல்லாம் ஹிட்டாகுதே, தொட்டதெல்லாம் பொன்னாவது எப்படி என்கிற கேள்வியை யூடியூபர் ஒருவர் எழுப்ப, அதற்கு பதிலளித்த ஜென்சன் திவாகர் ஹிட் ஆகும் படங்களில் எல்லாம் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துருக்காங்க, என்னால எந்த படமும் ஹிட் ஆகவில்லை. மேலும், இது தொடரும் என்பதும் உறுதியாக சொல்ல முடியாது. என்னை தேர்வு செய்து நல்ல பாத்திரங்களை கொடுக்கும் இயக்குநர்களால் தான் அனைத்தும் சாத்தியம். படங்கள் வெற்றி பெறுவது ரொம்பவே சந்தோஷம் என உண்மையை உரக்க பேசிய நிலையில், அவரது பேட்டி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











