மிஷ்கின், கெளதம் மேனன் நான் சொன்னதை கேட்கல.. தொடர் தோல்வியால் துவண்டு போன ஜீவா பேட்டி!
சென்னை: தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியின் இளைய மகனான ஜீவா ஆசை ஆசையாய் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு 2003ம் ஆண்டு அறிமுகமானார். அதற்கு முன்னதாக பெரும் புள்ளி, சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
ஆசை ஆசையாய், தித்திக்குதே படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான ராம் படத்தில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். டிஷ்யூம், பொறி என ஒரு பக்கம் கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அப்படியே ஈ, கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வந்தார்.

சிவா மனசுல சக்தி திரைப்படத்துக்குப் பிறகு மிகப்பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் ஜீவா வலம் வருவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் தேர்வு செய்த சில படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி மற்றும் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவ தனது பேச்சை இயக்குநர்கள் காது கொடுத்து கேட்காதது தான் என தற்போது விரக்தியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் ஜீவா.

நெப்போடிசம் நீடிக்காது: என்ன தான் தயாரிப்பாளர் மகன் ஹீரோவாக அறிமுகமானாலும் அவருக்குள் இருக்கும் திறமையும் அவர் தேர்வு செய்யும் கதைகளும் தான் அவரை பெரிய ஹீரோவாக நிலை நிறுத்தும் என்பதற்கு ஜீவாவும் ஒரு உதாரணமாக மாறிவிட்டார். சினிமாவில் எளிதில் ஹீரோவாக மாறிவிடலாம். ஆனால், ரசிகர்களுக்கு பிடிக்கும் ஹீரோவாக மாறுவது ரொம்பவே கஷ்டம். ஆனால், அதையும் செய்து அசத்திய ஜீவா திடீரென எங்கே சறுக்கினார் என்பது தான் பெரிய கேள்வியாக உள்ளது.

மிஷ்கின் கேட்கவில்லை: 2012ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் தான் ஹீரோயினாக கோலிவுட்டில் பூஜா ஹெக்டே அறிமுகமானார். ஆனால், அந்த படம் ஜீவாவுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் வெற்றிப் படமாக அமையவில்லை. இந்த வாரம் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த பிளாக் திரைப்படம் அக்டோபர் 11ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அந்த படம் தொடர்பான புரமோஷனல் பேட்டியில் பேசிய ஜீவா முகமூடி படத்தின் 2ம் பாதி ரொம்பவே லேக் ஆக இருப்பதாக மிஷ்கினிடம் சொன்னேன். ஆனால், கிரியேட்டிவ் பார்ட்டில் தலையிடாதீங்கன்னு சொல்லி நான் சொல்ல வந்ததை அவர் கேட்கவே இல்லை எனக் கூறியுள்ளார்.

7 நிமிஷம் காட்சியை ட்ரிம் பண்ணியிருக்கலாம்: ஜீவா மற்றும் சமந்தா நடித்த நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் அத்தனை பாடல்களும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தன. சிம்புவுக்கு ஒரு விண்ணைத் தாண்டி வருவாயா படம் போல நமக்கும் இந்த படம் அமையும் என எதிர்பார்த்த ஜீவாவுக்கு அந்த படமும் ஏமாற்றத்தையே அளித்தது. அந்த படத்தில் இடம்பெற்ற 7 நிமிஷம் நீண்ட காட்சியை அப்பவே ட்ரிம் செய்து விடலாம் என கெளதம் மேனனிடம் சொன்னேன். ஆனால், அவர் இது வொர்க்கவுட் ஆகும் என உறுதியாக இருந்தார். கடைசியில் அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை என வெளிப்படையாக பேசியுள்ளார் ஜீவா.


Click it and Unblock the Notifications











