For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னை மிரட்ட முடியாது.. பயப்பட மாட்டேன்.. டிடிஎச்சில் வெளியிடுவேன்.. ஆனால் இப்போ இல்லை! - கமல்

  By Shankar
  |

  Kamal
  சென்னை: விஸ்வரூபம் படத்தை திட்டமிட்டபடி டிடிஎச்சிலும் வெளியிடுவேன். ஆனால் அது எப்போது என்று சொல்ல முடியாது. ஆனால் என்னை யாரும் மிரட்ட முடியாது.. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், என்றார் கமல் ஹாஸன்.

  விஸ்வரூபம் பட விவகாரம் மிகவும் மோசமான ஒரு கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது. இந்தப் படத்தை நாளை இரவு டிடிஎச்சிலும், அடுத்த நாள் தியேட்டர்களிலும் வெளியிட கமல்ஹாஸன் திட்டமிட்டு அறிவித்தார்.

  ஆனால் இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்கள் தர மறுத்துவிட்டனர். 44 பேர் மட்டும் இவருக்கு ஆதரவு கொடுத்தனர். அதே நேரம், படத்துக்கு டிடிஎச் கட்டணமாக ரூ 1000 அறிவிக்கப்பட்டது. அவ்வளவு தொகை செலுத்தி இந்தப் படத்தைப் பார்க்க கமலின் தீவிர ரசிகர்களே தயாராக இல்லை. எனவே டிடிஎச் புக்கிங்கும் டல்லடித்தது.

  இந்த நிலையில் தியேட்டர்காரர்களுடன் சமரசமாகப் போக வேண்டிய சூழல். எனவே அவர்களுடன் பேச்சுவார்த்தையில் இறங்கினார் கமல். கடந்த மூன்று தினங்களாகப் பேச்சு நடந்து வருகிறது. இன்றும் பேச்சுகள் தொடர்ந்தன.

  பிற்பகலில் தன்னுடன் பேச வந்திருந்த திரையரங்க உரிமையாளர்களை மாடியில் அமர வைத்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார் கமல்.

  அவரிடம் நிறைய கேள்விகள் கேட்க முனைந்தனர். ஆனால் கமல் ஹாஸன் தன் பாணியில் முதலில் பேசத் தொடங்கினார். பெரும்பாலும் அவரது பேட்டி ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது.

  கமல் கூறியதாவது: கடந்த சில தினங்களாக எனக்கு எதிராக விடப்பட்டு வரும் சவால்கள், மிரட்டல்களை நீங்கள் அறிவீர்கள். அமைதியாக நான் செய்துவரும் நியாயமான வியாபாரத்துக்கு எதிராக இவை விடப்பட்டுள்ளன.

  சட்டரீதியாக அனைத்தையும் தெரிந்து கொண்டுதான் நான் இதில் இறங்கி இருக்கிறேன். இது புது வழி. என் சுயநலத்துக்காக நான் எடுத்துக் கொண்ட தனி வழி அல்ல. புது வழி. நாளை இது பொது வழியாகும்.

  புதிய ஊடகங்களைப் பார்த்து மிரளுவது முதல் முறை அல்ல. இந்த டிடிஎச் பிசகானது அல்ல, யாரையும் கீழே தள்ளி விடாது.

  ஊடகம் உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் எல்லா பொருள்களும் மாறிவிட்டன. விஞ்ஞானத்திலும் மாற்றங்கள் வரவே செய்யும்.

  இந்தப் படப் பாடலையே உதாரணமாக சொல்வேன்.

  யாரென்று புரிகிறதா..
  இவன் தீயென்று தெரிகிறது,
  தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா..
  யாருக்கும் அடிமையில்லை. இவன் யாருக்கும் அரசனில்லை...

  விஸ்வரூபம் படம் என் பொருள். எனது அங்காடி. இந்தப் படத்தை எப்படி வெளியிட வேண்டும் என்பது எனது உரிமை. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். என்னை யாரும் மிரட்ட முடியாது.

  இந்தப் படத்தை வெளியிடாமல் தடுக்கும் வகையில் பேசிய 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இதை நான் வழக்காக பதிவு செய்தால் அவர்களிடம் அவர்களின் ஆண்டு மொத்த வருவாயில் 10 சதவீதத்தை அபராதமாக வசூலிக்க முடியும்.

  என்னைத் தடுக்க முயன்றால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை பாயும் (சொல்லிவிட்டு அதற்காக சட்டத்தில் உள்ள விதிகளை ரொம்ப நேரம் வாசித்தார்).

  இந்தப் படத்தை நாளை டிடிஎச்சில் வெளியிடும்போது கல்யாண மண்டபங்கள், உணவகங்கள், ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் டிக்கெட் போட்டு காட்ட சிலர் திட்டமிட்டிருந்தனர்.

  அவர்களெல்லாம் நாளை பணம் கட்டியவர்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் அல்லவா.. அவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும்.

  விஸ்வரூபம் படத்தை யாருக்கும் பயந்து தள்ளி வைக்கவில்லை. என் சௌகர்யத்துக்காக தள்ளி வைத்திருக்கிறேன். திரையரங்க உரிமையாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.

  தியேட்டரில் வெளியிடுவது, டிடிஎச்சில் வெளியிடுவது குறித்து நான்தான் சொல்ல முடியும். வேறு யாரும் அதுபற்றி சொல்வது சரியில்லை. பட வெளியீட்டு தேதியை பலரும் வெளியில் சொல்லி வருகிறார்கள். இது என் பொருள். என் புராடக்ட். நான்தான் ரிலீஸ் தேதியை முடிவு செய்வேன்.

  நேற்று சிலர், தியேட்டர் மற்றும் டி.டி.எச்.சில் வெளியிடுவது குறித்து என்னை சந்தித்து பேசினார்கள். நேசப்படி, நியாயப்படி என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை நான் எடுப்பேன். தற்போது, எனது சௌகரியத்திற்காக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறேன்.

  ஒரே நேரத்தில் டிடிஎச் - தியேட்டர்

  டி.டி.எச்.சிலும், தியேட்டரிலும் ஒரே தேதியில் இப்படம் வெளிவரவேண்டும் என்று சிலர் வேண்டுகோள் விடுத்தனர். அதை எவ்வாறு வெளியிடுவது என்பது குறித்து நான் முடிவு செய்வேன்.

  டி.டி.எச். மூலம் ஒளிபரப்புவது நேரடியாக வீட்டிலிருந்து பார்ப்பதற்காக மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கேபிள் டிவிகளிலோ, ஹோட்டல்களிலோ, கிளப் மற்றும் கல்யாண மண்டபங்களிலோ திரையிடுவது சட்டப்படி குற்றம். எனக்கு சட்டப்படி உதவி செய்ய அரசாங்கம் முன்வரும் என்று நம்புகிறேன்.

  படம் நன்றாக வந்திருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படம் பிடிக்கவில்லையென்று ரசிகர்கள் மட்டும்தான் கூறமுடியும். படம் வெளியிடும் தேதி குறித்து பல பேரிடம் பேசிதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது.

  வடமாநிலங்களில் 18-ந் தேதி வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆந்திராவில் வேறு தேதி சொல்கிறார்கள். எந்த தேதியில் வெளியிட வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்து அறிவிப்பேன். இது எந்தவொரு சமூகத்தையும் தாக்கும் படமல்ல. பலபேர் இந்த படம் வெளியாகும் தேதியை அவர்களாகவே தெரிவித்து வருகிறார்கள். அது சரியல்ல. இப்படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் நான் அறிவிப்பேன்" என்றார்.

  English summary
  Today Kamal met the press and officially announced the postponement of Viswaroopam.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X