பாலுமகேந்திரா சாரோட ஒப்பிட்டு பாராட்டு.. எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்.. தேனி ஈஸ்வர் பேட்டி!
சென்னை: தனுஷின் கர்ணன் திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குநர் மாரி செல்வராஜின் கதையை உள்வாங்கிக் கொண்டு காட்சிகளாக வடித்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் பேட்டி வெளியாகி உள்ளது.
கர்ணன் திரைப்படத்தில் ஏகப்பட்ட சில்ஹவுட் ஷாட்களையும் நேச்சுரல் லைட்டுகளையும் பயன்படுத்தி அழகாக படமாக்கி உள்ளார் தேனி ஈஸ்வர்.

ஒன்றாக கலந்து விடுவார்
தனுஷ் பற்றி கூறும்போது, அவர் ஒரு பெரிய நடிகராக உள்ளே நுழைவார், நான் கேமரா, டிராக் எல்லாம் செட் பண்ணிட்டு ஃபிரேமில் பார்க்கும் போது, ஊர் மக்களோடு ஊர் மக்களாக ஒன்றாக கலந்து விடுவார். மிகவும் எளிமையான மனிதர் என பாராட்டி உள்ளார்.

ஹைடெக் லென்ஸ்
இதுவரை தமிழ் சினிமாவில் பயன்படுத்தாத சில புதிய லென்ஸ்களை இந்த படத்திற்காக தான் பயன்படுத்தி உள்ளதாகவும், கிராமங்களை படமாக்குவது தனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்றும் தேனி ஈஸ்வர் கூறியுள்ளார். மேலும், நிறைய பிளாக் லென்ஸ் ஷாட்களை எடுத்துள்ளோம், கதாபாத்திரங்களை வெகு க்ளோஸ் அப்பில் காட்ட அது உதவும் என்றார்.

பாலுமகேந்திரா மாதிரியே
கலைப்புலி எஸ். தாணு தேனி ஈஸ்வரின் அசாத்திய ஒளிப்பதிவை பார்த்து விட்டு, அப்படியே பாலுமகேந்திரா மாதிரியே பண்றீங்க என பாரட்டியது குறித்து பேசிய அவர், யதார்த்தங்களை படமாக்கும் விதத்தை வைத்து அப்படி பாராட்டி உள்ளார். பாலுமகேந்திராவின் படங்கள் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன், அவருடன் ஒப்பிட்டு பாராட்டுவது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும் எனக் கூறினார்.
கர்ணனுக்கு விருது
அழகர் சாமியின் குதிரை படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார். அந்த படம் தேசிய விருதை பெற்றது. அதில் நடித்த அப்புக்குட்டிக்கும் தேசிய விருது கிடைத்தது. தற்போது தனுஷின் கர்ணன் படத்திற்கும் ஏகப்பட்ட விருதுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேனி ஈஸ்வருக்கும் விருது கிடைக்க வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











