Malavika: அம்மானு கூப்பிட்டதே இல்ல.. நாளைக்கு உயிரோட இருப்பானா? மகனை நினைத்து கலங்கிய மாளவிகா!
சென்னை: பாலசந்தர் இயக்கிய அண்ணி சீரியல் மூலம் பிரபலமானவர் மாளவிகா அவினாஷ். தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் என பல மொழியில் நடித்துள்ள இவர், கே.ஜி.எஃப் படத்தில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் தனது மகன் கால்வியின் உடல் நிலை குறித்து பல விஷயத்தை வேதனையுடன் பேசி உள்ளார்.
அதில், சினிமாவிற்கு எந்தவித சம்மந்தமும் இல்லாத குடும்பத்தில் இருந்து தான், நான் சினிமாவிற்கு வந்தேன். அம்மாவிற்கு நடனத்தின் மீது ஆர்வம் இருந்ததால் பள்ளியில் படிக்கும் போதே, பாட்டு டான்ஸ் கற்றுக்கொண்டேன். அப்போதே குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அப்படித்தான் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி நடித்துக்கொண்டு இருக்கும் போது தான் அவினாஷ் அவர்களை சந்தித்தேன். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அதை காதல் என்று சொல்லிவிட முடியாது, எனக்கும் அவருக்கும் 15 வருட வித்தியாசம் என்றார்.

ஸ்பெஷல் சைல்ட்: தொடர்ந்து மகன் குறித்து பேசிய அவர், என் மகன் பார்ப்பதற்கு அழகாக இருப்பான், முக தோற்றத்திலும் எந்த விதமான வித்தியாசமும் தெரியாது. ஆனால், இவனால் பேச முடியவில்லை என்று பல மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து இருக்கிறேன். ஆனால் அதற்கான தீர்வு கிடைக்கவே இல்லை. ஸ்பெஷல் சைல்ட் என்று தெரிந்ததும் இருவரும் மொத்தமாகவே உடைந்து விட்டோம். இந்த வேதனை மட்டுமல்லாமல், பார்ப்பவர்கள் தெருவில் நடப்பவர்கள், உறவினர்கள் என அனைவரும் அந்த டாக்டர்கிட்ட போங்க, இந்த டாக்டர் கிட்ட போங்க என்ற அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது தான் அதைவிட கொடுமையானதாக இருந்தது.
உடைந்துவிட்டேன்: கருவில் இருக்கும் போதே பரிசோதனை செய்து விட்டால், குழந்தை எந்தவிதமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடலாம். ஆனால் அப்போது அது இல்லாததால், அது எனக்கு தெரியாமல் போய்விட்டது. சிலர் கருவில் இருக்கும் குழந்தையை அழிக்கலாமா? வேண்டாமா? என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால். உண்மையிலேயே நம்மளால் இந்த உலகத்திற்கு வந்த ஒரு உயிர், எந்தவித தவறும் செய்யாமல் படும் கஷ்டத்தை பார்த்து. ஒரு பெற்றோராலும் சகித்துக் கொள்ளவே முடியாது. அதனால்தான் பாதி பெற்றோர்கள் உடைந்து போய்விடுகிறார்கள்.
உயிரோட இருப்பானா: ஒரு குழந்தையை பெற்ற அம்மாவின் அதிகபட்ச ஆசையே குழந்தை தன்னை அம்மா என்று அழைக்க வேண்டும் என்று தான். ஆனால் என் மகன் என்னை அம்மா என்று கூப்பிட்டதே இல்லை, அவனால் கூப்பிட முடியாது. என்ன பிரச்சனை என்று தெரியாததால் நாளைக்கு உயிரோடு இருப்பானா? இருக்க மாட்டானா என்று நினைத்தே 15 ஆண்டுகாலம் நாங்கள் தூக்கத்தை தொலைத்திருக்கிறோம். போகாத கோவில் இல்ல, கும்பிடாத சாமி இல்லை, யார் யார் என்ன என்ன செய்ய சொல்லுகிறார்களே அதை எல்லாத்தையும் செய்து விட்டேன். இதனால் எனக்கும் என் கணவருக்கும் ஆரம்பத்தில் சண்டை வந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுவதை நிறுத்திக்கொண்டோம் என்று அந்த பேட்டியில் மாளவிகா அவினாஷ் கவலையுடன் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











