திரிஷா யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை.. ஆதரவாக களமிறங்கிய குஷ்பு.. என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: சோஷியல் மீடியா, ஊடகம் என எந்த பக்கம் சென்றாலும் திரிஷா பற்றிய செய்தியும், பேச்சும் தான் அதிகம் வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட செய்தியை விட, வாக்கு எண்ணிக்கை அன்று திரிஷாவின் பிறந்த நாள் என்ற செய்தி நேற்று வேகவேகமாக பரவியது. திரிஷா பற்றி பரவி வரும் பலவிதமான செய்திகள் குறித்து நடிகை குஷ்பு பதில் அளித்துள்ளார்.
விஜயின் மனைவி சங்கீதா, தனது கணவருக்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி விவாகரத்து மனுவை தாக்கல் செய்து இருந்தார். அதைத் தொடர்ந்து, ஏஜிஎஸ் தயாரிப்பாளரின் இல்ல திருமணத்தில் விஜய், திரிஷா ஜோடியாக சென்றது பேசு பொருளானது. அதோடு மட்டுமில்லாமல், திரிஷா மும்பை செல்வதற்காக விமான நிலையம் சென்ற போது, பத்திரிகையாளர்கள் நேரடியாக திரிஷாவிடம் விஜய் குறித்து கேட்க, அவர் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

குஷ்பு பேட்டி: தொடர்ந்து திரிஷா பற்றி பலவிதமான விமர்சனங்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளார். அதில், இப்போது, நாம் இருக்கும் காலத்தில் யாராவது ஒரு சின்ன விஷயம் செய்தால் கூட அதை வேறு விஷயத்துக்கு குற்றம் சாட்டி பேசுவதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். திரிஷா எனக்கு மிகவும் நெருக்கமானவர், எனக்கு தெரிந்தவரை, நான் சந்தித்தவர்களில் அவர் மிகவும் மரியாதையான பெண், மிகவும் மென்மையான மனம் கொண்டவர்.
பதில் சொல்லதேவையில்லை: சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி நான் எந்தவிதமான கருத்தை சொல்லவும் விரும்பவில்லை. ஒருவரை அதிகமாக விமர்சனம் செய்யும் கலாச்சாரம் மும்பையில் அதிகமாக இருந்தது. தற்போது அந்த கலாச்சாரம் இங்கும் வந்துள்ளது. ஆனால், அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இணையத்தில் உட்கார்ந்து பிறரைப் பற்றி பேசுபவர்கள், தங்கள் வாழ்க்கையை விட பிறருடைய வாழ்க்கையைப் பார்ப்பதில், அவர்களை பற்றி பேசுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பிறரைப் பற்றி பேசுவதில் ஒரு விதமான திருப்தி அல்லது சுகம் அடைகிறார்கள்.
திரிஷாவிற்கு ஆதரவு: அதில் 99.9% பேர் நமக்கு தெரியாதவர்கள்தான். யாராவது ஒருவர் ஏதாவது தவறு செய்தால் அதற்காக மற்றவர்களை குற்றம் சாட்டக்கூடாது. அதுபோன்றவர்களுக்கு பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க தேவையில்லை என்று நான் நினைக்கிறேன் என நடிகை குஷ்பு, திரிஷாவிற்கு ஆதரவாக பேசி உள்ளார். குஷ்புவின் இந்த பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











