5 வருஷம் காதலிச்சேன்.. அப்பாவோட மொத்த சேவிங்ஸும் போட்டுருக்காரு.. கிங்காங் மகள் ஓபன் டாக்!
சென்னை: நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனாவுக்கும் அவரது காதலர் நவீனுக்கும் நேற்று காலை பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் காமெடி நடிகர் முத்துக்காளை உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் மாலை நடைபெற்ற நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
தனது திருமணத்தை ஏம்ப்பா இவ்ளொ கிராண்டா பண்றீங்க எனக்கே பயமா இருக்குன்னு சொன்னேன். ஆனால், இது எதுவும் நானா பிளான் பண்ணலம்மா அதுவே தானா நடந்துடுச்சு என சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கிங்காங் மகள் பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

சினிமா ஷூட்டிங்கிற்கு கூட தங்களை அப்பா கூட்டிச் செல்லமாட்டார் என்றும் இன்று இந்தளவுக்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எல்லாம் திருமணத்துக்கு வரவுள்ளதை நினைத்து ரொம்பவே பதட்டமாக உள்ளதாக கீர்த்தனா பேசியுள்ளார்.
எஸ்கே அண்ணா தான் ஃபேவரைட்: நடிகர் கிங்காங் கடந்த ஒரு மாதமாக பெங்களூருவுக்குச் சென்று சிவராஜ்குமாருக்கு பத்திரிகை வைத்ததில் இருந்து பம்பரம் போல தனது மகளின் திருமணத்துக்காக ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், டி. ராஜேந்தர் என பல திரை பிரபலங்களுக்கும், மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஜெயக்குமார், அன்புமணி என பல அரசியல் தலைவர்களுக்கும் பத்திரிகை வைத்தார். அதில், எஸ்கே அண்ணாவுக்கு அப்பா பத்திரிகை வைத்தது தான் எனக்கு ரொம்பவே சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அவர் தான் என்னோட ஃபேவரைட் என்றார். மேலும், விஜய் சேதுபதி சாரும் ரொம்ப பிடிக்கும் என்றார்.
5.5 வருஷ காதல்: பி.காம், எம்.பி.ஏ என கீர்த்தனா மற்றும் நவீன் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில், சுமார் 5.5 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தோம். இந்த விவாகாரம் என் தங்கை வழியாக பாட்டிக்கு தெரிய வந்தது. ஆரம்பத்தில் திட்டினார். ஆனால், பெற்றோர்களிடம் அதை சொல்லாமல், மறைத்து விட்டார். ஆனால், கடந்த ஆண்டு அவர் உயிரிழப்பதற்கு முன்பாக அப்பாவிடம் சொல்லி கன்வின்ஸ் பண்ணதே அவர் தான். அவர் இறந்து ஒரு வருட திதி வருவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என அப்பா பெருமுயற்சி எடுத்து திருமணத்தை நடத்தியுள்ளார் என்றார்.
பல வருட சேவிங்ஸ்: இந்த திருமணத்துக்காக உங்கள் அப்பா செலவு செய்த பட்ஜெட் குறித்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? என்கிற கேள்விக்கு மொத்தமாக எவ்வளவு செலவு செய்கிறார் என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அவரது வாழ்வில் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த பல வருட சேவிங்ஸ் மொத்தமாக என்னோட திருமணத்துக்காக செலவு செய்கிறார் என்று மட்டுமே தெரியும். என்னோட திருமணத்தை இந்தளவுக்கு பிரம்மாண்டமாக என்னோட அப்பா நடத்துவார் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், தன்னோட மகளுக்காக அவர் இந்தளவுக்கு செய்திருப்பது மிகப்பெரிய விஷயம் என கீர்த்தனா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











