கொட்டுக்காளி போட்ட காசை எடுத்துடுச்சு.. தயாரிப்பாளருக்கு லாபம் தான்.. இயக்குநர் வினோத்ராஜ் பேட்டி!
சென்னை: கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் சூரி, அன்னா பென் உள்ளிட்ட நடிகர்களை வைத்து இயக்கிய கொட்டுக்காளி திரைப்படம் உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்று வந்த நிலையில், கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்துடன் கொட்டுக்காளி படமும் ரிலீஸ் ஆன நிலையில், கொட்டுக்காளி படம் நல்லாவே இல்லை என்றும் அந்த படம் புரியவே இல்லை, கடைசியில் கிளைமேக்ஸ் இல்லாமல் இயக்குநர் முடித்து ஏமாற்றி விட்டார் என ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பின.

சமீபத்தில் நடைபெற்ற கெவி பட விழாவில் பேசிய இயக்குநர் அமீரும் கொட்டுக்காளி படத்தை தியேட்டரில் விட்டிருக்கக் கூடாது என பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், கொட்டுக்காளி படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளதாக பி.எஸ். வினோத்ராஜ் தமிழ் பிலிமிபீட்டுக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்துள்ளார்.
தயாரிப்பாளருக்கு லாபம்: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கொட்டுக்காளி படம் கடந்த வாரம் வெளியான வாழை படம் அளவுக்கு பெரிய வசூல் செய்யவில்லை என்று பெரும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், கொட்டுக்காளி படம் போட்ட காசை எடுத்து விட்டது என்றும் தயாரிப்பாளருக்கு லாபகரமான படம் தான். அதற்காக உழைத்து தான் குறைந்த செலவில் இந்த படத்தை எடுத்தேன் என இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கூறியுள்ளார்.
திட்டும் பாராட்டுக்களும்: இதுவரை பார்த்து பழகாத மக்களிடம் புதிதாக எந்தவொரு விஷயத்தையும் முதலில் வைக்கும் போது விமர்சனங்கள் எழத்தான் செய்யும். அதற்காக மக்கள் முன்பாக படைப்பை வைக்கவே கூடாது என சொல்வதெல்லாம் தவறான விஷயம். கொட்டுக்காளி படத்தில் நான் ஒரு கிளைமேக்ஸை வைத்திருந்தாலும், அது அங்கேயே முடிந்திருக்கும். ஆனால், அதை ஆடியன்ஸிடம் கொடுத்த நிலையில், ஏகப்பட்ட விவாதங்கள் கிளம்பியுள்ளன. ஆண் ரசிகர்கள் மனதில் ஒரு கிளைமேக்ஸ் தோன்றும், பெண் ரசிகைகள் மனதில் ஒரு கிளைமேக்ஸ் தோன்றும் அப்படிப்பட்ட படைப்பை தான் கொடுக்க விரும்பி இந்த படத்தை செய்தேன் என்றார்.
தமிழ்நாட்டில் எதிர்பார்க்க முடியாது: சர்வதேச திரைப்பட விழாக்களில் பலரும் என் படத்தை பாராட்டினார்கள், கமல் சார் ஒவ்வொரு சீனையும் விவரித்து எழுதி பாராட்டியிருக்கிறார் பாருங்க என்பதையெல்லாம் ரசிகர்களிடம் காட்டி ஒரு படத்தை பார்க்க வைக்க முடியாது. அவர்களின் விமர்சனங்களையும் வரவேற்கிறேன். இதுபோன்ற ஒரு படம் தியேட்டரில் வெளியாகவே முடியாது என்கிற அரசியலை இந்த படம் உடைத்திருக்கிறது. அதுவே எனக்கு போதும் என வினோத்ராஜ் கூறியுள்ளார்.
நாப்கின் மாற்றும் காட்சி: ஆட்டோவில் வரும் பெண்ணுக்கு பீரியட்ஸ் அதிகமாகிவிடும். அவர் நாப்கின் மாற்ற வேண்டும், அந்தவொரு காட்சியை இதுவரை இந்தளவுக்கு டீட்டெய்லாக தமிழ் சினிமாவில் யாரும் எடுக்கவில்லை, நாம் தான் முதலில் எடுக்கிறோம் என்றேன். அந்த ரியாக்ஷனை அந்த பெண் தான் கொடுத்து நடித்தார். அதுபற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அந்த காட்சியை குறிப்பிட்டு பலரும் பாராட்டுகின்றனர். அந்த பாராட்டு முழுவதும் அந்த பெண்ணுக்குத்தான் என்றார்.
சூரி அண்ணன் செய்த விஷயம்: சூரி அண்ணன் 27 ஆண்டுகள் சினிமாவில் கற்றுக் கொண்ட அனைத்தையும் மறந்து விட்டு இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றேன். அவர், அதை ஏற்றுக் கொண்டு செய்தார். இதற்கு பிறகு பாண்டி போன்ற ஒரு கதாபாத்திரம் தனக்கு எப்போதுமே கிடைக்காது என்றும் கூறினார் என தனது பேட்டியில் கொட்டுக்காளி படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றியும் அந்த படத்தால் தனக்கு கிடைத்த வரவேற்புகள் குறித்தும் வினோத்ராஜ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











