twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படத்தை பார்த்து ரஜினி சொல்லட்டும்... சமூகவிரோதி யார் என்பதை , எஸ்.எஸ்.ராஜ் பேட்டி

    |

    சென்னை: முத்துநகர் படுகொலை படத்திற்கு திருமாவளவன் மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளார் என்றும், ஆளுங்கட்சிக்கு எதிரான படம் இல்லை என்பதை புரிந்து கொண்டு திமுகவினரும் ஆதரவு கொடுப்பார்கள் என்று படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ் தெரிவித்துள்ளார்.

    தமிழ்ஸ் ஓடிடி மற்றும் விமியோ தளங்களில் பல போராட்டங்களுக்கு பிறகு ரீலீஸ் ஆகி உள்ள படம் முத்துநகர் படு கொலை.

    இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு பணம் கொடுத்தாச்சு., கல்விக்கேற்ப வேலை வாய்ப்பும் கொடுத்தாச்சு.. அப்புறம் என்ன பிரச்சனை..? என்று அரசியல் தலைவர்கள் நினைப்பதாக கூறும் எஸ்.எஸ்.ராஜ் நமது பிலிம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

     கேமராவில் கமல் எப்படி அத்தனை கட்டுமஸ்தாகத் தெரிகிறார் - பெர்சனல் டிரெயினர் பகிரும் சீக்ரெட் கேமராவில் கமல் எப்படி அத்தனை கட்டுமஸ்தாகத் தெரிகிறார் - பெர்சனல் டிரெயினர் பகிரும் சீக்ரெட்

    ஜாலியன் வாலாபாக் படுகொலை

    ஜாலியன் வாலாபாக் படுகொலை

    கேள்வி: முத்துநகர் படுகொலை என்ற படத்தை ஏன் உருவாக்கினீர்கள்?

    பதில்: மெரீனாபுரட்சி படத்தை 2019ம் ஆண்டு சென்சாரில் அனுமதி வாங்கி தியேட்டரில் வெளியிட்டோம். 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்தபோது, அந்த சம்பவத்தை திரைப்படமாக ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உருவாகியது. ஏனென்றால் இது இந்தியாவில் நடந்த இரண்டாவது ஜாலியன் வாலாபாக் படுகொலையாகும். மேலும் இதில் அரசும், அரசு நிர்வாக அமைப்பும் அமைதியாக இருக்கிறது. யாருக்கும் எந்த தண்டனையும் கிடைக்கவில்லை. நீதி விசாரணை என்ற பெயரில் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. நீதி வேண்டும் என்பதற்காக தான் இப்படத்தை உருவாக்கினேன் என்றார்.

    சுடுகாட்டில் வைத்து படப்பிடிப்பு

    சுடுகாட்டில் வைத்து படப்பிடிப்பு

    கேள்வி: நீங்கள் படப்பிடிப்பை ரகசியமாக நடத்த என்ன காரணம்?

    பதில்: இந்த படத்தை தொடங்குவதற்கான பூர்வாங்கமான வேலைகள் 2020ம் ஆண்டு தொடங்கினேன். படப்பிடிப்புகள் அனைத்தும் ரகசியமாக செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். ஏனென்றால் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களையும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த முக்கிய உறுப்பினர்களையும் உளவுத்துறை போலீசார் கண்காணித்து வந்தனர். அவர்களை யாராவது பார்க்க சென்றால் கூட, எதற்காக என்ன விபரம் என்று அவர்களிடம் விசாரித்தனர். இந்நிலையில் ஸ்னோலினின் அம்மா அவர்களை படம் பிடிப்பதற்காக பல முயற்சிகள் செய்தும் தோற்று போனோம். ஒரு கட்டத்தில் ஸ்னோலின் அம்மா அவர்களை,. அவர்களது சொந்த ஊரான பெரியதாழைக்கு திருவிழாவிற்காக மூன்று தினங்களுக்கு கிளம்ப சொன்னோம். அவர்களும் அவ்வாறு செய்தனர். அங்கு தான் அவர்கள் தொடர்பான படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். இன்னொரு நண்பர் ஒருவரை மதியத்தில் சுடுகாட்டில் வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். மேலும் உளவுத்துறை போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் இருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு உறுப்பினரை பூங்கா ஒன்றில் வைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.

    போலீசார் தடுத்தனர்

    போலீசார் தடுத்தனர்

    கேள்வி: படத்தை வெளியிட ஒடிடி தளத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

    பதில்: முதலில் முத்துநகர் படுகொலை என்ற திரைப்படத்தை யூடியூப் சேனலில் வெளியிட தான் முடிவு செய்தோம். ஆனால் போலீசார் யூடியூப்புக்கு கடிதம் அனுப்பி அதை நீக்கி விடுவார்கள். அதனால் தான் தற்போது TAMILSOTT, VIMEO போன்ற ஒடிடி தளங்கள் மூலம் படத்தை மே 20ம் தேதி வெளியிட்டுள்ளோம்.

    கேள்வி: அரசியல் தலைவர்கள் யாருக்கெல்லாம் படத்தை போட்டு காட்டியுள்ளீர்கள்?

    பதில்: படப்பிடிப்பு சமயத்தில் மட்டுமல்ல, படத்தை தனிப்பட்ட முறையில் பல தலைவர்களுக்கு போட்டு காண்பிக்கும்போது கூட உளவுத்துறை போலீசார் தடுத்தனர். முதலில் எங்களுக்கு படத்தை போட்டு காட்டுங்கள். பின்னர் மற்றவர்களுக்கு காட்டுங்கள் என்று கூறினர். குறிப்பாக சென்னையில் திருமாவளவன், முத்தரசன் ஆகியோருக்கு படத்தை போட்டு காண்பிக்கும்போது போலீசார் தடுத்தனர். தஞ்சாவூரில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனுக்கு படத்தை போட்டு காண்பிக்கும்போது, 5 உளவுத்துறை போலீசார் படத்தை பார்க்க வந்திருந்தனர். அவர்களிடம் மே.20ம் தேதி தணிக்கை செய்யப்பட்டு படம் வெளிவரும், அப்பொழுது நீங்கள் பாருங்கள், இப்போது நீங்கள் கிளம்புங்கள் என்று கூறினேன்.

    13 பேரின் உயிர்

    13 பேரின் உயிர்

    கேள்வி: படத்தை மே 20ம் தேதி வெளியிட என்ன காரணம்?

    பதில்: மே 22ம் தேதி தான் துப்பாக்கி சூடு நடைபெற்றது. ஆகவே அதற்கு முன்பாக படத்தை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மே 20ம் தேதி படத்தை வெளியிட்டோம். இந்த படத்தை வெளியிடுவதன் நோக்கம் என்னவென்றால், 13 பேரின் உயிர் கொடூரமாக பறிக்கப்பட்டது. 106 பேர் ஊனமாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வலிகளை நாம் உணர வேண்டும். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து விரைவில் நீதி பெற வேண்டும் என்பது தான். அந்த கொலைக்கான நீதி வேண்டாமா? 4 வருடங்கள் ஆகிறது. அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் 34 முறை விசாரித்து விட்டது. மூன்றரை வருடங்களாக சிபிஐ விசாரித்து வருகிறது. ஒரு எப்.ஐ.ஆர். மட்டுமே போட்டுள்ளனர். அதில் 72 போராட்டக்காரர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒரு போலீஸ்காரர் மீது கூட வழக்கு பதிவு செய்யவில்லை. சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் பதவி உயர்வு பெற்று சந்தோஷமாக இருக்கிறர்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

    இன்று போய் நாளை வா

    இன்று போய் நாளை வா

    இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு பணம் கொடுத்தாச்சு., கல்விக்கேற்ப வேலை வாய்ப்பும் கொடுத்தாச்சு.. அப்புறம் என்ன பிரச்சனை.. ? என்று அரசியல் தலைவர்கள் நினைக்கின்றனர். ஒரு பிரச்சனை என்றால், அதை தூக்கி கிணற்றில் போடு என்பது போல் தான் அரசியல்வாதிகள் உருவாக்கும் விசாரணை கமிஷன். குறிப்பாக சொல்லப்போனால் ஜல்லிக்கட்டு, முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் போன்றவையாகும். போன ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து எந்தவித விசாரணையும் சரியாக நடைபெறவில்லை. ஆனால் திமுக ஆட்சியில், விசாரணை கமிஷன் அறிக்கையை அளிப்பதற்கு கொடுத்துள்ள கடைசி தேதி மே 22 ஆகும். அவ்வாறு அருணா ஜெகதீசன் அளிக்கும் அறிக்கையில் என்ன இருக்கிறது. அரசு வெளியிடுமா? போலீஸ்காரர்கள், வருவாய்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சிபாரிசு செய்யப்படுமா? என்பதே தூத்துக்குடி மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அரசு இதை வெளியிடவில்லை என்றால் இன்று போய் நாளை வா... என்று மட்டுமே அர்த்தம்.

    சட்டத்தின் அடிப்படை

    சட்டத்தின் அடிப்படை

    கேள்வி: உங்களை யாராவது மிரட்டினார்களா?

    பதில்: இப்படத்தை முதன்முதலில் திருநெல்வேலியில் சில நண்பர்களுக்கு போட்டு காண்பித்தேன். அப்போது ஸ்டெர்லைட் கம்பெனி என் மீது திருநெல்வேலி எஸ்.பி.யிடம் புகார் அளித்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மத்திய காவல்நிலையம் எனக்கு சம்மன் அனுப்பியது. அதில் 2 நாட்களில் ஆதாரங்களுடன் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். சுதந்திர இந்தியாவில் படைப்பாளி ஒருவருக்கு இது போன்ற சம்மன் வருவது என்பது வேடிக்கையாக இருந்தது. அப்போது இந்த படம் டெல்லி பிலிம்ஸ் விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், நான் டில்லி செல்ல வேண்டியிருப்பதாக எனது வழக்கறிஞரிடம் தெரிவித்தேன். பின்பு எனது வழக்கறிஞர்கள், போலீசாருக்கு மனு அனுப்பினர். எந்த சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்க இருக்கிறீர்கள். ஸ்டெர்லைட் கொடுத்த புகார் என்ன? அது போன்ற விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தினால், டெல்லிக்கு சென்று வந்தவுடன் ஆஜராவார் என்று அனுப்பினர். பின்னர் காவல்நிலையத்திலிருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. ஏனென்றால் அவர்கள் என்னை மிரட்டுவதற்காக மட்டுமே அழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இடுப்புக்கு கீழே தான் சுட வேண்டும்.

    இடுப்புக்கு கீழே தான் சுட வேண்டும்.

    கேள்வி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரமா? போராட்டமா?

    பதில்: ஆங்கில ஊடகங்களும், பாஜக.வின் ஆதரவு ஊடகங்களும் இந்த போராட்டத்தை கலவரம் என்று கூறியது. ஆனால் உண்மையில் கலவரமல்ல. போராட்டம் தான். போராட்டம் எப்படி கலவரமானது என்பதை தான் படத்தில் காட்டியுள்ளேன். காஷ்மீர், இஸ்ரேலில் மொசார்ட், ஈரானில் அமெரிக்கா பயன்படுத்திய ஸ்னைப்பர் புல்லட்டை போராட்டத்தின் போது தமிழக போலீசார் பயன்படுத்தினர். போலீசாருக்கு 0.303 ரைபிள் பயன்படுத்த மட்டுமே, போலீஸ் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் 8 முறைகளை பின்பற்றி பிறகு தான் பயன்படுத்த வேண்டும். மேலும் இடுப்புக்கு கீழே தான் சுட வேண்டும். ஆனால் இவற்றில் எதுவுமே நடைபெறவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் போலீஸ்காரர்களின் திட்டமே படுகொலை தான். இன்னும் சொல்லப்போனால் இன்றும் கூட ஸ்டெர்லைட்டில் 50 பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கேட்டால் பராமரிப்பு பணி நடைபெறுவதாக கூறுகின்றனர் என்று இயக்குநர் ராஜ் கூறினார்.

    பாதிக்கப்பட்ட ஒருத்தனாக பேசுவது

    பாதிக்கப்பட்ட ஒருத்தனாக பேசுவது

    கேள்வி: படத்தில் நீங்கள் கொடுத்துள்ள வாய்ஸ் ஓவர் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: டாக்குமெண்ட்ரி என்றால் அலட்சியமாக நாம் எல்லோரும் நினைக்கிறோம்.

    சினிமாவை விட விறுவிறுப்பாக டாக்குமெண்டரியில் கருத்துக்களை சொல்லலாம். முத்துநகர் படுகொலை படமானது, பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னையை சொல்லக்கூடிய ஆவணப்படமாக இருந்தாலும், பல கோடி மக்களை பார்க்க வைத்து, தவறு செய்தவர்களுக்கு எதிராக குரல் எழுப்ப தூண்டுகோலாக இருக்கும். நான் கொடுத்த வாய்ஸ் ஓவர் குறித்து ஒரு சிலர் கூறுகையில், பாதிக்கப்பட்ட ஒருத்தனாக பேசுவது போல் இருந்ததாக தெரிவித்தனர். ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை நான் நேரடியாக பார்த்துள்ளேன். தனது உறவுகளை இழந்து நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது துயரம் தான் வாய்ஸ் ஓவராக எதிரொலித்தது.

    ஆதரவு தருவார்கள்

    ஆதரவு தருவார்கள்

    கேள்வி: அரசியல் தலைவர்களில் யாரெல்லாம் உங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள்?

    பதில்: திருமாவளவன், முத்தரசன் மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளனர். திமுகவின் முன்னணி தலைவர்கள் படத்தை பார்ப்பதற்கு இப்பபோதைக்கு நேரம் இல்லை என்று தான் தெரிகிறது . அதிமுக, பாஜக.,வினரை நான் அணுகவில்லை. எஸ்டிபிஐ கட்சியினர் உதவி செய்தார்கள். இப்படம் ஆளுங்கட்சிக்கு எதிரான படம் அல்ல. இதை புரிந்து கொண்டு திமுகவினர் படத்தை பார்த்து எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். இப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது என்றார் இயக்குநர் ராஜ்.

    அனைத்தும் எங்களுடைய உழைப்பு

    அனைத்தும் எங்களுடைய உழைப்பு

    கேள்வி: முதல்வர் பழனிச்சாமி குறித்து Footageஐ எப்படி பெற்றீர்கள்?

    பதில்: எந்தவொரு நியூஸ் சேனலிடம் நாங்கள் Footage ஐ வாங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இரண்டு முன்னணி நியூஸ் சேனல் எங்களிடம் கூறியது என்னவென்றால், நாங்களும் தூத்துக்குடிக்காரர்கள் தான். ஸ்டெர்லைட் எங்களுக்கு நம்பிக்கையான பார்ட்னர். ஆகவே Footage அனைத்தும் எங்களுடைய உழைப்பு தான். எடப்பாடி பழனிச்சாமி முதலில் கலவரம் குறித்து கூறுகையில், நான் டிவி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றார். பின்பு 2 நாள் கழித்து சட்டசபையில், கண்ணீர் புகை வாகனத்தை வைத்து தடுத்தோம். பின்னர் தான் துப்பாக்கி சூடு நடத்தினோம் என்றார். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கலவரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது.

     ரஜினிகாந்துக்கு போட்டுக் காட்டுங்கள்

    ரஜினிகாந்துக்கு போட்டுக் காட்டுங்கள்

    கேள்வி: நீங்கள் இந்த படத்தை யார் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?

    பதில்: போராட்டத்தை கலவரம் என்று சித்தரித்தது இரண்டு பேர். ஒருவர் பாஜக.,வின் தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா. 99 நாள் அமைதியாக நடந்த போராட்டம் 100 வது நாளில் கலவரமாக மாறியதற்கு காரணம் கிறிஸ்தவ கைக்கூலிகளும், கிறிஸ்தவ மிஷனரிகளும் என்றார். அவர்கள் தான் பணம் கொடுத்தார்கள் என்றும் கூறினார். அது பொய் என்பதை ஆதாரத்துடன் படத்தில் காட்டியுள்ளோம். இன்னொருவர் படத்தின் புரோமோஷனுக்காக வந்த ரஜினிகாந்த் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதிகள் என்றார். இப்படத்தை தூத்துக்குடி மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் போட்டு காண்பித்தபோது, தயவு செய்து இந்த படத்தை ரஜினிகாந்துக்கு போட்டுக்காட்டுங்கள். படத்தை பார்த்து விட்டு அவர் சொல்லட்டும். யார் சமூக விரோதிகள் என்று... இது 13 உயிர்களை பறிகொடுத்தவர்களின் கோரிக்கை என்றார் படத்தின் இயக்குநர் ராஜ்.

    தேர்வு செய்யப்பட்ட ஒரே படம்

    கேள்வி: உங்களது ஆசை என்ன?

    பதில்: என்னை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நீதி விரைவாக கிடைக்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது, அது வெளியே தெரியாமல் இருப்பதற்காக வாட்ஸ்அப், இன்டர்நெட் போன்றவற்றை துண்டித்தனர். ஆனால் இன்று உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளோம் என்பதை பெருமையாக நான் கருதுகிறேன் என்றார்.

    கேள்வி: முத்துநகர் படுகொலை படத்திற்கு எத்தனை விருதுகள் கிடைத்துள்ளது?

    பதில்: சிங்கப்பூரில் நடைபெற்ற World Film Carnival ல் விருது கிடைத்துள்ளது. மேலும் பிரேசிலில் நடைபெற்ற International Film Festival of Environmental and Human Right 30th ECOCINE விழாவில் கலந்து கொண்டு 21713 படங்களில் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே படம் "முத்துநகர் படுகொலை" தான். டெல்லியில் நடைபெற்ற 12th Dada Saheb Phalke Film Festival -22 விழாவிலும் Best Documentary Jury என்ற விருதையும் பெற்றுள்ளது என்றார்.

    இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=Ei_xiFSb2xU இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    Let Rajinikanth Decide who is Anti-Socialist Says SS Raj in Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X