கஜினி படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நான்தான்.. இதை யார் சொன்னா தெரியுமா?.. ரகசியத்தை உடைத்த நடிகர்
சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்தில் நடிகர் சூர்யா சிக்ஸ் பேக் வைத்து மிரட்டியிருப்பார். சூர்யாவின் சினிமா கரியரில் மிக முக்கியமான படமாக இருக்கிறது. இப்படம் தமிழில் மட்டும் அல்ல இந்தியிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தில் பிரபலமான நடிகர்தான் முதலில் நடிக்க இருந்ததாக அவரே தெரிவித்திருக்கிறார். இது குறித்து வாங்க பார்க்கலாம்.
கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான கஜினி திரைப்படம் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படமாகவும் அமைந்தது. இப்படத்தில் சூர்யாவின் கதாப்பாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. சஞ்சய் ராமசாமியாகவும் மறுபக்கம் மொட்டை அடித்து உடம்பு முழுக்க பச்சை குத்திக்கொண்டு தனது காதலியை கொலை செய்தவர்களை தேடி பழிவாங்கும் கதாப்பாத்திரத்தில் சூர்யா மிரட்டியிருப்பார். குறிப்பாக மெமரி லாஸ் போன்ற விசயங்களால் இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. பொங்கல் பண்டிகை தினத்தில் விஜய் நடித்த சிவகாசி படத்தோடு போட்டி போட்டி மிகப்பெரிய வெற்றியும் கண்டது கஜினி.

தீனா, ரமணா படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் கஜினி. இப்படத்தின் வெற்றியால் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் இவர் பக்கம் திரும்பியது. ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள் என்றால் அதில் புதுமையான கதை இருக்கும் என்ற நம்பிக்கையும் வந்தது. அதற்கு எடுத்துக்காட்டு அவர் இயக்கிய கத்தி, துப்பாக்கி படங்களை கூறலாம். விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படங்களாகவும் இருந்தது. கஜினி படத்தின் கதை ஹாலிவுட் படமான மெமன்டோ படத்தின் தழுவல் என்று சிலர் குறிப்பிட்டாலும் ஆனால், அப்படத்திற்கு தமிழ் கஜினிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இப்படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா, மனோபாலா என பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் கலக்கியிருப்பார்.
சூர்யா இதில் இல்லை: கஜினி படத்தின் கதையை கேட்டு அசந்து போன ஒரு நடிகர் இப்படத்தில் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. சூர்யாவிற்கு முன்பு அவர்தான் ஏ.ஆர்.முருகதாஸின் சாய்ஸ் ஆக இருந்திருக்கிறாராம். அவர் வேற யாருமில்லை தமிழ் சினிமாவில் அவரை மேடி என்று எல்லோரும் அழைப்பார்கள். நடிகர் மாதவன் தான் நடிக்க இருந்ததாக அவரே தெரிவித்திருக்கிறார். தற்போது மாதவன் நடித்திருக்கும் டெஸ்ட் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படம் குறித்த விமர்சனங்களும் பாசிட்டிவாகவே வருகிறது. இப்படம் குறித்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதவன் இதை தெரிவித்திருக்கிறார்.

இரண்டாம் பாதி பிடிக்கவில்லை: கஜினி படத்தின் நடிக்க முதல் வாய்ப்பு எனக்குதான் வந்தது. கதையை கேட்டபோது முதல் பாதி மிகவும் பிடித்திருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் கதையின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை அதனால், அப்படத்தில் நடிக்க மறுத்தேன் என மாதவன் கூறியுள்ளார். ஆனால், நடிகர் சூர்யா அற்புதமாக நடித்திருந்தார். சிக்ஸ் பேக் வைப்பதற்காக அவர் சாப்பிடாமல் இருந்ததை கேட்டு அசந்து விட்டேன் என மாதவன் தெரிவித்திருக்கிறார். இதனிடையே கஜினி படத்தில் மாதவன் நடிக்காமல் இருந்தது நல்லது தான். இல்லையென்றால் இந்த அளவிற்கு ரசிகர்கள் அப்படத்தை கொண்டாடிப்பார்களா என்பது சந்தேகம் தான். அவரும் நல்ல நடிகர்தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











