தக் லைஃப் பட சர்ச்சைகள்.. அடுத்து என்ன நடக்குமோ.. தலைவலியில் மணிரத்னம்!
சென்னை: நடிகர் கமலஹாசனின் 234வது படமாக 'தக் லைஃப்' திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி உள்ளார். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு, 37 வருடங்களுக்கு பின் இருவரும் இணைந்துள்ளனர். இதில், சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 5 ந் தேதி வெளியாக உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் வேலை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் பெயரை அறிவித்ததில் இருந்தே சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. அவை என்னென்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தக் லைஃப் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இத்திரைப்படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ கமலில் பிறந்த நாள் என்று வெளியானது. அதில், என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. காயல்பட்டினக்காரன் என கூறுவது போன்றும் அவரை எதிரிகள் தாக்க வரும் போது தாக்குவது போல காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்று கமல் ஹாசன் பேசியதற்கும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. இது தான் தக் லைஃப் படம் சந்தித்த முதல் சர்ச்சை.

முத்த சர்ச்சை: இதைத்தொடர்ந்து, படத்தின் டிரைலர் வெளியானது. அதில், கமல்ஹாசன், அபிராமிக்கு முத்தம் கொடுத்து இருந்தார். கமல்ஹாசனை விட 30 வயது இளையவரான அபிராமிக்கு கமல் முத்தம் கொடுக்கலாமா என இணையத்தில் பலர் சர்ச்சையை கிளப்பினார்கள். இதற்கு விளக்கம் கொடுத்த நடிகை அபிராமி, "அது 3 செகண்ட் முத்தக்காட்சி தான். அதுதான் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது, அதை தவறாக சில இணையத்தில் பேசி வருகிறார்கள். அந்த காட்சி படத்திற்கு தேவையானது என்பதால், படத்தில் வைக்கப்பட்டுள்ளது. படம் பார்க்கும் போது உங்களுக்கே புரியும் என தெரிவித்து இருந்தார்.
கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் மொழி வந்தது என்று பேசி இருந்தார். இது பெரும் சர்சையான நிலையில், கர்நாடகாவில், தக் லைஃப் படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. மேலும் அவர் பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் தடை செய்யப்படும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கெடு விதித்தது. இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டத்தை நீதியை நம்புகிறவன். நான் தவறு இருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் இல்லையெனில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால், கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இதனால், படக்குழுவிற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சின்மயி சர்ச்சை: இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, இசைவெளியீட்டு விழாவில், தக் லைஃப் திரைப்படத்தின் முத்த மழை என்ற பாடலை சின்மயி பாடி இருந்தார். தமிழில் இந்த பாடலை தீ பாடி இருந்தார். அவர், இசைவெளியீட்டுக்கு வராததால், தக் லைஃப் திரைப்படத்தில் இந்த பாடலை இந்தி, தெலுங்குவில் பாடிய சின்மயி, தமிழில் மேடையில் பாடி பாராட்டை பெற்றார். இந்த பாடலை கேட்ட பலர், இந்த பாடலை படத்தில் 'தீ' பாடியதை விட சின்மயி சிறப்பாக பாடி இருக்கிறார். இதனால், 'தீ' பாடிய பாடலை நீக்கி விட்டு, சின்மயி பாடலை அதில் வைக்க வேண்டும் என இணையத்தில் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இப்படி இந்த படத்திற்கு வரும் தொடர் பிரச்சனைகள் மணிரத்னத்திற்கு தலைவலியாக அமைந்துள்ளது. இரண்டு நாளில் படம் வெளியாக இருக்கும் நிலையில், அடுத்து என்ன பிரச்சனை வருமோ என்ற பயத்தில் இருக்கிறார் மணிரத்னம்.


Click it and Unblock the Notifications











