விஜய் யாருன்னே நைனிகாவுக்கு தெரியாது.. தெறி படத்தில் நடந்த சம்பவம்.. தளபதி பண்ணதை சொன்ன மீனா!
சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் அவருக்கு மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு அவர், அம்மா மீனாவைப் போல சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறார். வேறு எந்த படத்திலும் மீனாவின் மகள் நடிக்கவில்லை.
சமீபத்தில் நடன இயக்குனர் கலா மாஸ்டருடன் கலந்துரையாடிய நடிகை மீனா தெறி படத்தில் விஜய்யுடன் தனது மகள் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் மீனா இணைந்து நடனமாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மீனாவின் மகளும் விஜயுடன் இணைந்து தெறி படத்தில் நடித்த நிலையில், விஜய்க்கு பைக் ஓட்ட தெரியுமா என அவர் டெஸ்ட் வைத்தது குறித்து செம ஜாலியாக மீனா பேசி உள்ள பேட்டி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
அஜித்துடன் பல படங்கள்: நடிகை மீனா அஜித் குமாருடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன் மற்றும் வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மீனாவுக்கு கிடைக்கவில்லை. ஷாஜகான் படத்தில் "சரக்கு வச்சிருக்கேன்" பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளார்.
விஜய்க்கு மகளாக: ரஜினிக்கு மகளாகவும் ஜோடியாகவும் மீனா நடித்துள்ள நிலையில், விஜய்க்கு மகளாக மீனாவின் மகள் நைனிகா அட்லீ இயக்கிய தெறி படத்தில் நடித்துள்ளார். அம்மா மீனாவை போலவே குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒரு படத்திலேயே அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் நைனிகா. ஆனால், தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டாம் என்கிற முடிவுடன் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் யாருனே தெரியாது: தெறி படத்தின் படப்பிடிப்பின் போது விஜயுடன் நடிப்பது குறித்து நைனிகா எப்படி ரியாக்ட் செய்தார் என்கிற கேள்விக்கு பதில் அளித்த மீனா. அவளுக்கு விஜய் யார் என்றே தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் முதல் ஷாட் விஜய்யுடன் பைக்கில் செல்ல வேண்டும் அப்போது அவள் கேட்ட கேள்வியை பார்த்து நானே ஷாக் ஆகிவிட்டேன் என்றார்.
பைக் ஓட்ட தெரியுமா?: நடிகர் விஜய் பார்த்து உங்களுக்கு பைக் ஓட்ட தெரியுமா என நைனிகா கேட்டார். நான் உடனே ஏய் அவர் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா? அவரை பார்த்து இப்படி கேட்கிறன்னு சொன்னேன். அதற்கு தளபதி விஜய் உடனடியாக ஒரு ரவுண்ட் பைக் ஓட்டிக் காட்டிய பின்னர், இப்போ ஓகேவாம்மா பயப்படாம வந்து வண்டியில ஏறுன்னு சொல்லி நடிச்சாரு என கலா மாஸ்டர் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்காக நடத்திய பேட்டியில் செம கேஷுவலாக பேசியுள்ளார் நடிகை மீனா.
ஜன நாயகன்: நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களில் நடித்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர், லியோ என படங்களை பண்ணி வசூல் ரீதியாக உச்சத்துக்கே சென்றார். கடைசியாக தற்போது அஜித்தை வைத்து வரிசையாக படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். அதன் ஓடிடி உரிமம் சமீபத்தில் பெரிய தொகைக்கு அமேசான் பிரைம் நிறுவனத்தால் வாங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் களத்திலும் விஜய் இறங்கி கேம் ஆடி வருகிறார்.


Click it and Unblock the Notifications











