சாதி இல்லாம படமே எடுக்க முடியாது.. எல்லோரும் இதைத்தான் பண்றாங்க.. மோகன் ஜி பளிச் பேட்டி!
சென்னை: திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் பகாசூரன். அந்த படத்தின் ப்ரோமோஷனை முன்னிட்டு அவர் அளித்த பேட்டி ஒன்று தீயாக பரவி வருகிறது.
சாதி இல்லாமல் இங்கே யாருமே படம் எடுப்பது இல்லை என்றும் அனைவரையும் இதைத்தான் செய்றாங்க, நானும் இதைத்தான் செய்யுறேன் என பளிச்சென பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
பகாசூரன் படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.

வாத்தி உடன் போட்டி
தம்பி தனுஷின் வாத்தி படத்துடன் அண்ணன் செல்வராகவன் நடிப்பில் உருவாகி உள்ள பகாசூரன் படம் போட்டியாக வெளியாகிறது. வரும் பிப்ரவரி 17ம் தேதி இரு படங்களும் ரிலீஸ் ஆகிறது. இதுதொடர்பான கேள்விக்கு வாத்தி பெரிய பட்ஜெட் படம் பெரிய பிசினஸ் செய்யும், எங்க படம் சின்ன பட்ஜெட் படம் அதற்கு தேவையான பிசினஸ் செய்யும். இரண்டு படங்களை போட்டி என்று ஒப்பிடுவதே எங்களுக்கான ப்ரோமோஷன் தான் என மோகன் ஜி படு கூலாக பதிலளித்துள்ளார்.

கல்லூரி பெண்களுக்கு வலை
லாக்டவுன் காலத்தில் சேலம் மாவட்டத்தில் 900க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை குறி வைத்து நடத்தப்பட்ட ஆன்லைன் மோசடி தான் இந்த பகாசூரன் படம் உருவாகவே காரணம் என குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார் மோகன் ஜி. ஆன்லைன் மூலம் நடக்கும் விபச்சாரங்களையும், மசாஜ் சென்டர்கள் பெயரில் கல்லூரி பெண்களை வைத்து நடத்தப்படும் பாலியல் தொழிலையும் அம்பலப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது என தனது பேட்டியில் மோகன் ஜி கூறியுள்ளார்.

இளைஞர்களை சீரழிக்கின்றனர்
இளைஞர்களையும், இளம் பெண்களையும் சில சமூக விரோதிகள் தங்கள் பணத்தாசைக்காக இப்படி ஆபாசமான தொழிலில் ஈடுபடுத்தி சீரழிக்கின்றனர். நம்ம வீட்டுப் பெண்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் சொன்ன ஷாக்கிங் நியூஸ் தான் என்னை இந்த படத்தை இயக்க வைத்தது என்றும் செல்வராகவன் சார் இந்த படத்தை ஓகே சொல்லவும் அதுதான் காரணம் என்றார்.

உண்மை சம்பவம்
சேலம், கடலூர் மற்றும் பெரம்பலூரில் லாக்டவுன் சமயத்தில் நடந்த பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்துத் தான் இந்த படத்தை எடுத்துள்ளேன் என்றும் அந்த அந்த இடங்களிலேயே இந்த படத்தை எடுத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். ஆண்கள் புத்தியை வைத்து சம்பாதிக்கின்றனர். பெண்கள் உடலை வைத்து சம்பாதிக்கின்றனர் என்கிற வசனத்தை சென்சார் தூக்கிட்டாங்க என்றும் கூறியுள்ளார்.
சாதி இல்லாம படமே இல்லை
சாதிய இயக்குநர் என்கிற முத்திரை உங்கள் மீது குத்தப்பட்டு இருக்கே அதை பற்றி என்ன சொல்றீங்க என்கிற கேள்விக்கு, சாதி இல்லாமல் இங்கே யாருமே படம் எடுக்கிறது இல்லை. சிலர், வெளிப்படையா சொல்லிட்டு எடுக்கிறாங்க, சிலர் அதையே மறைமுகமாக வைத்து எடுக்கிறாங்க.. காதல் படம் எடுத்தாலும் சாதி இருக்கு, ஆக்ஷன் படம் எடுத்தால் வில்லன் ஒரு சாதியும் ஹீரோ ஒரு சாதியுமாத்தான் இருக்காங்க.. இந்த களத்தில் என்ன நடக்குதோ அதை வைத்துத்தான் படங்கள் உருவாகின்றன எனக் கூறியுள்ளார். மேலும், பல விஷயங்களை வெளிப்படையாக மோகன் ஜி பேசியுள்ளதை வீடியோவை க்ளிக் செய்து பாருங்கள்!


Click it and Unblock the Notifications











