Mohanlal Exclusive: மல்டி ஸ்டார், பான் இந்தியா படங்களால் ஒற்றுமை ஏற்படும்.. மோகன்லால் நம்பிக்கை
சென்னை: மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன் லால் தென்னிந்திய சினிமாவிலும் உச்ச நடிகர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படமான கண்ணப்பா படத்தில் பல மொழி சினிமா துறையினருடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்தில் நடித்தது தொடர்பாக அவர் நமது பிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி பான் இந்தியா அளவில் வெளியான படம் கண்ணப்பா. தெலுங்கு திரை உலகில் இருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான 24 பிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏ.வி.ஏ என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்து தயாரித்த படம் கண்ணப்பா. விஷ்ணு மஞ்சு படத்தின் கதையின் மையக் கதாபாத்திரமாக நடித்தது மட்டும் இல்லாமல் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை இயக்கி இந்தியா முழுவதும் புகழ் பெற்ற முகேஷ் குமார் சிங் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ், மோகன் லால், அக்ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்தும், பல மொழியைச் சேர்ந்த நடிகர்கள் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதால் திரைத்துறையிலும் சமூகத்தில் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அவர் நமது பிலிமிபீட் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கண்ணப்பாவில் நடிக்க காரணம்: அவர் பேசுகையில், " கண்ணப்பா படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே எனக்கு கண்ணப்பர் குறித்து தெரிந்து இருந்தது. இந்த படத்தின் கதை ஒரு உண்மையான இறை நம்பிக்கை கொண்டவர் குறித்து பேசுவதால், படத்தின் கதையைச் சொன்னதும் நான் சரி எனக் கூறி விட்டேன். இது மட்டும் இல்லாமல், என்னால் மறுப்பு தெரிவிக்கவும் முடியவில்லை.
பல நடிகர்களுடன்: நான் வெவ்வேறு மொழிகளில் உச்ச நடிகர்களாக உள்ளவர்களுடன் இணைந்து நடிப்பது என்பது எனக்கு புதிதல்ல. நான் இதற்கு முன்னர், தமிழ், கன்னடம், தெலுங்கில்லாம் கூட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளேன். கண்ணப்பா படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரை உலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். எனக்கு அவர்களுடன் காட்சிகள் இல்லை என்றாலும் இந்த படத்தில் நான் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

சமூக இணக்கம்: இது மட்டும் இல்லாமல், பல மொழிப் படங்களை சேர்ந்த ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் போது அவை சினிமாவில் உள்ள எல்லைகளை தகர்த்து விடுகிறது. இதனால் ரசிகர்களுக்கு இடையில் இணக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ரசிகர்களாக உள்ள மக்கள் மத்தியிலும் வேறுபாடுகள் கலைய அதிக வாய்ப்புகள் உள்ளது" இவ்வாறு அந்த பேட்டியில் மோகன் லால் பேசினார். அவரது இந்த பேச்சு, ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் திரைத்துறையினர் மத்தியிலும் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. கண்ணப்பா படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை சுமார் 35 கோடிகள் வரை வசூல் ஆனதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











