Anirudh: அட்லீயாவது டிஸ்கஷன் வச்சிப்பாரு.. நெல்சன், லோகேஷெல்லாம்.. அனிருத் சுவாரஸ்யம்!
சென்னை: தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களாக தங்களை குறுகிய காலத்திலேயே நிரூபித்தவர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார்.
இவர்களில் அட்லீ, நெல்சன் இருவரும் அடுத்தடுத்து ஜவான், ஜெயிலர் படங்களின்மூலம் இந்த ஆண்டில் சிறப்பான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர்.

அடுத்த மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்குத்தான் ரசிகர்கள் வெயிட்டிங்.
லோகேஷ், நெல்சன், அட்லீ குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த அனிருத்: தற்போது தமிழ் சினிமாவின் அடுத்தடுத்தப் படங்கள் வித்தியாசமான முயற்சியில் மாஸ் காட்டி வருகின்றன. இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் சிறப்பாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டில் மிகுந்த வரவேற்பிற்கு உள்ளாகியுள்ள படங்கள் அட்லீயின் ஜவான் மற்றும் நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் ஆகிய படங்கள். கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியான படங்களும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வசூல்மழை பொழிந்து வருகின்றன.

இதில் ஜவான் படம் 1000 கோடி ரூபாய் மற்றும் ஜெயிலர் படம் 700 கோடி ரூபாய் கலெக்ஷன்களை தாண்டியுள்ளன. அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் லியோ படம் அடுத்தமாதம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கு உலகளவில் அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படம் 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் இயக்குநர்களாக ரசிகர்களை கவர்ந்துள்ள அட்லீ, நெல்சன் ஆகியோர் தங்களை நிரூபித்துள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷ் பக்கம் ரசிகர்களின் கவனம் சென்றுள்ளது.
இந்த மூன்று படங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இசையமைப்பாளர் அனிருத். ஜவான், ஜெயிலர், லியோ என அடுத்தடுத்த படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இத்நப் படங்களின் வெற்றிக்கு இவரது இசையமைப்பும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றியையொட்டி அனிருத்திற்கு விலையுயர்ந்த காரை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பரிசாக கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த இயக்குநர்களுடன் தான் பணிபுரிந்த அனுபவம் குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியொன்றில் அனிருத் பேசியுள்ளார். லோகேஷ் தன்னிடம் படத்திற்கான பாடல்கள், பிஜிஎம் இசை குறித்து எதுவும் கேட்க மாட்டார் என்றும், தான் ஒரு ஐடியாவிற்காகவாவது பார்க்க சொன்னாலும் தன்னுடைய கட்டுப்பாட்டில் அதை விட்டுவிடுவார் என்றும் அனிருத் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தான் அவருக்கு அனுப்பும் பாடல்களை அவர் ஒருபோதும் நிராகரித்ததில்லை என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தன்னை கண்மூடித்தனமாக அவர் நம்புவார் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல தான் நெல்சன் திலீப்குமாரும் நடந்துக் கொள்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் அட்லீயை பொறுத்தவரை அவரும், தன்னுடைய இசையில் தலையிட மாட்டார் என்றும் ஆனால் தனக்கு இதுபோன்ற இசை வேண்டும் என்றும் தன்னுடைய உலகம் இது என்றும் அவர் முன்னதாக தெளிவுப்படுத்திவிடுவார் என்றும் இசை குறித்த விவாதங்களில் தாங்கள் இருவரும் பங்கேற்போம் என்றும் அனிருத் கூறியுள்ளார். இந்தப் படங்களில் சர்வதேச அளவில் சிறப்பான ரஜினிகாந்த், ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகியோருடன் அனிருத் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











