ஜாடிக்குள் அடைக்கப்பட்ட ‘பிசாசு 2’.. வெளியானால் பிரளயம் வெடிக்கும்.. ஆண்ட்ரியாவை புகழ்ந்த மிஷ்கின்!
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில் உருவாகியுள்ள 'பிசாசு 2' திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், படம் குறித்து இயக்குநர் மிஷ்கின் புதிய அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பிசாசு 2: மிஷ்கின் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் நாகா, பிரயாகா மார்ட்டின், ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான 'பிசாசு 2' படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் பேய் ஓட்டுபவராக நடித்துள்ளார். டிஜிட்டல் உரிமை மற்றும் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக இப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இருப்பினும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்ததால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், மிஷ்கினையும் ஆண்ட்ரியாவையும் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் பத்திரிகையாளர்கள் 'பிசாசு 2' குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரளயம் வெடிக்கும்: இந்நிலையில், 'பரிமளா அண்ட் கோ' திரைப்படம் வரும் மே 28ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தில் நடித்துள்ள மிஷ்கின் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் 'பிசாசு 2' குறித்து அவர் பேசியுள்ளார். அதில், "ஒரு காலத்தில் பேய்களை ஜாடிக்குள் அடைத்து வைத்திருப்பார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோலத்தான் இப்போது 'பிசாசு 2' திரைப்படமும் ஒரு ஜாடிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது. யாராவது ஒருநாள் அந்த ஜாடியைத் திறப்பார்கள் என்று அந்த படம் காத்திருக்கிறது" என்று கூறினார்.
ஆண்ட்ரியாவின் லைஃப் டைம் படம்: மேலும், "அந்த ஜாடியை திறக்காமல் வைத்திருக்க வைத்திருக்க, அது இன்னும் சக்திவாய்ந்ததாக மாறிக் கொண்டே இருக்கிறது. ஒருநாள் அந்த ஜாடி திறக்கப்படும் போது, இந்த படம் ஒரு பெரிய பிரளயத்தை ஏற்படுத்தும். ஏனெனில், அந்த படம் ஆண்ட்ரியாவின் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த படமாக இருக்கும். அந்த படத்தில் அவர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அது அவருடைய லைஃப் டைம் படமாக இருக்கும்" என்றும் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications