90 பெண்களின் வாழ்க்கை பாதியிலேயே முடிஞ்சுடுது.. நூறு சாமி 2 வருமா?இயக்குனர் சசி பேட்டி!
திருவண்ணாமலை: தமிழ் திரையுலகில் உணர்வுப்பூர்வமான மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கொண்ட இயக்குனர் சசி. இவரது இயக்கத்தில் வெளியான சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் போன்ற படங்கள் அனைத்தும் காதலையும், மனித நேயத்தையும், அன்பையும் வெளிப்படுத்தும் ஆகச்சிறந்த கதைக்களத்தைக் கொண்ட திரைப்படங்களாகவே அமைந்தன.
அந்த வரிசையில், தற்போது சசி இயக்கத்தில் வெளியாகி தியேட்டர்களில் சக்கப்போடு போட்டு, பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வரும் திரைப்படம் தான் 'நூறு சாமி'. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் சசி தனது படக்குழுவினருடன் திருவண்ணாமலையில் கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடினர்.
பாதியிலேயே முடிந்து விடுகிறது: அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குனர் சசி,எவ்வளவுதான் காலங்கள் மாறி, உலகம் டிஜிட்டலாக முன்னேறி இருந்தாலும், நம் சமூகத்தில் கணவனை இழந்த ஒரு பெண்ணின் மறுமணம் என்பது இன்னும் சற்று யோசிக்கக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை இருந்துவிட்டால், அந்தப் பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி இங்கே யாரும் யோசிப்பதே இல்லை. அவளுக்குத்தான் குழந்தை இருக்கிறதே, இதற்குப் பின் அந்தப் பெண்ணுக்கு என்ன வாழ்க்கை வேண்டி கிடக்கிறது? அந்த குழந்தையை வைத்துக் கொண்டே அப்படியே காலத்தைக் கழித்துவிட வேண்டியதுதானே என்று நினைக்கிறார்கள்.

அழுத்தம் ஏற்படும்: இன்றைய சூழலிலும் நூறு பெண்கள் இருந்தால், அதில் வெறும் 10 பெண்களுக்கு மட்டும்தான் மறுமணம் நடக்கிறது. மீதமுள்ள 90 பெண்களின் வாழ்க்கை பாதியிலேயே முடங்கிப் போய்விடுகிறது என்பதுதான் கசப்பான உண்மை. அது அப்படி நடக்கக் கூடாது, அந்தப் பெண்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகத்தான், என்னால் என்ன செய்ய முடியுமோ அதை ஒரு எழுத்தாளராக இந்த 'நூறு சாமி' படத்தில் நான் செய்திருக்கிறேன். கண்டிப்பாக படம் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் இது ஒரு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றார்.
பிச்சைக்காரன் vs நூறு சாமி: தொடர்ந்து பேசிய சகி, ஒரு மகன் தனது தாயைத் தெய்வமாகப் பார்த்தான், அது 'பிச்சைக்காரன்'. ஆனால், ஒரு மகன் தனது தாயை ஒரு சக மனுசியாகப் பார்க்கப் பழகினான், அதுதான் இந்த 'நூறு சாமி'. பிச்சைக்காரன் படத்தில் என்ன விதமான மதர் சென்டிமென்ட் ஃபீல் இருந்ததோ, அதைவிட 50% ஆழமாகவும் அழுத்தமாகவும் இந்த திரைப்படத்தில் ஒரு ஃபீல் இருக்கும் என்றார்.
பிச்சைக்காரன் 3 வருமா? : செய்தியாளர்கள் அவரிடம், பிச்சைக்காரன் படத்தின் அடுத்த பாகம் வெளிவருமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த சசி, பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி விட்டார். அடுத்ததாக பிச்சைக்காரன் 3 எடுப்பது பற்றி இதுவரை நான் யோசிக்கவில்லை. ஆனால், இப்போது தியேட்டரில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் இந்த 'நூறு சாமி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது பற்றி வேண்டுமானால் கண்டிப்பாக யோசிப்பேன் என்று கூறி சர்ப்ரைஸ் கொடுத்தார். ஜூன் 19ந் தேதி தியேட்டரில் எளியான நூறு சாமி திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் உலக அளவில் ரூ.5.54 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications