மிஷ்கின் என்ன தண்டனை கொடுப்பார் தெரியுமா? இயக்குநர் ராம் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ திரைப்படம் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸி ஆண்டனி, அஞ்சலி, மாஸ்டர் மிதுல் ரியான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பறந்து போ திரைப்படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் படம் குறித்து இயக்குநர் ராம் பல விஷயத்தி பேசி வருகிறார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராமின் அடுத்த படைப்பு தான் பறந்து போ. இத் திரைப்படம் பிப்ரவரி மாதம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை இப்படத்தின் பிரீமியர் காட்சி இந்தியாவில் முதல்முறையாக கோவையில் தனியார் திரையரங்கில் திரையிடப்பட்டது.

பறந்து போ: இதில் பேசிய இயக்குநர் ராம், இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மித்துனுக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்றுத் தரும், இந்த படத்திற்கு பின் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். குழந்தைகளுக்காக சிறுசிறு தியாகங்கள் செய்யும் பெற்றோர்களுக்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து பார்வையாளர்களையும் சிரிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சி தான் இந்த படம் எடுத்தேன் என்றார். மேலும், பறந்து போ ஒரு நல்ல உணர்வை தரக்கூடிய நகைச்சுவை படம். இப்படம் எனது ரசிகர்களுக்கும் அனைத்து பார்வையாளர்களுக்கும் நிச்சயம் சர்ப்ரைசை தரும் என்று பேசி இருந்தார்.
ராம் பேட்டி: படம் 4ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் மிஷ்கின் பற்றி பேசிய இயக்குநர் ராம், எனக்கு மனசு ஏதோ ஒரு மாதிரி, மனதிற்கு ஒரு உற்சாகம் தேவைப்படுகிறது என்றால் நான் உடனே மிஷ்கினை பார்க்க சென்றுவிடுவேன். அவர் என்ன செய்வார் தெரியுமா. ஆப்பிரிக்காவில் பழங்குடி இனத்தில் யாராவது தவறு செய்து விட்டார்கள் என்றால், அவர்களை அழைத்து வந்து, கூட்டத்திற்கு நடுவே நிற்க வைத்து அந்த ஊரைச் சேர்ந்த அனைவரும், அவன் செய்த நல்லதை எல்லாம் தினமும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதுதான் அவனுக்கு அவர்கள் கொடுக்கும் தண்டனையாம். அதாவது, தீங்கு செய்தவனை கூப்பிட்டு, அவன் செய்த நல்லதை எல்லாம் சொல்லிக் காட்டுவது தான் தண்டனை.
மிஷ்கினின் தண்டனை: இயக்குநர் மிஷ்கினும் அதைத்தான் செய்வார். அவரை சந்திக்க சென்றால், உடனே, நீ எவ்வளவு பெரிய இயக்குனர் தெரியுமா.. என்று சொல்லுவார். நாம் நிஜமாகவே நல்ல இயக்குனர் தான் என்று நம்மை நம்ப வைத்து அனுப்புவார். அப்படி ஒரு நம்பிக்கையை கொடுக்கிற ஒருத்தர் தான் மிஷ்கின். அவர் எதையும் திட்டமிட்டு பேசமாட்டான். அவர் மேடையில் பேசுவதைவிட நேரில் பேசுவதை கேட்டால் நன்றாக இருக்கும். மேடையில் பேசும் போது கொஞ்சம் சென்சார் பண்ணித்தான் பேசுவார். நேரில் அவர் பேச்சை கேட்க நன்றாக இருக்கும். மிஷ்கின் என் நண்பர் அதற்காக அப்படி பேசுகிறார் என்று நினைக்க வேண்டாம். முதல் படத்தை இயக்குபவராக இருந்தாலும், அவரிடம் மிஷ்கின் இப்படித்தான் பேசுவார் என்று இயக்குனர் ராம் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











