டிரக்ஸ் கலாச்சாரம்.. இயக்குநர்கள் ரொம்பவே கெட்டுப் போயிட்டாங்க.. பயமா இருக்கு.. பிரபு சாலமன் வேதனை!
சென்னை: சினிமாவில் அதிகளவிலான டிரக்ஸ், துப்பாக்கிகள் என லத்தின் அமெரிக்க படங்களின் பாதிப்பில் சமீப காலமாக இயக்குநர்கள் படங்களை எடுத்து வருகின்றனர். என்னோட நாட்டில் அதெல்லாம் கிடையவே கிடையாது. இங்கே மண்சார்ந்த படைப்புகளும், எமோஷன் நிறைந்த திரைக்கதைகளையும் எவ்வளவோ சொல்லலாம்.
ஆனால், ஒரு சில இயக்குநர்கள் அதிகப்படியான வன்முறை காட்சிகளை வெளிநாட்டு படங்களின் பாதிப்பில் அப்படியே இங்கே எடுத்து அதுதான் நல்ல சினிமா என்று விற்று வருகின்றனர். அதையெல்லாம் பார்த்தால், ரொம்பவே பயமாக இருக்கிறது.

கொலை செய்வதை பார்த்தால் நடுக்கம் வர வேண்டும். ஆனால், இங்கே அதை தான் பெரிய நடிகர்கள் ரசிகர்களுக்கு படமாக கொடுக்க, அவர்கள் அதை கைதட்டி ரசிக்கின்றனர். உண்மையில் அப்படி படம் எடுக்க இயக்குநர்களும் நடிகர்களும் வெட்கப்பட வேண்டும் என இயக்குநர் பிரபு சாலமன் பேசியுள்ளார்.
அகத்தியனின் உதவி இயக்குநர்: காதல் கோட்டை கிளைமேக்ஸில் தான் அகத்தியன் சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். இதுவரை தமிழ் சினிமாவில் அப்படியொரு படம் வரவே இல்லை. முதல் ரீல், அல்லது ரெண்டாவது ரீலிலேயே ஹீரோவும் ஹீரோயினும் சந்தித்து காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், கடைசி ரீலில் தான் ஹீரோவும் ஹீரோயினும் சந்திப்பது போன்ற யூனிக்கான படமாக அந்த படம் இருந்தது. அவரிடம் கற்றுக் கொண்ட சினிமா மற்றும் பாலுமகேந்திரன் சாரின் உதிரிப்பூக்கள் உள்ளிட்ட படங்களை பார்த்து தான் யதார்த்தமான படங்களை இயக்க கற்றுக் கொண்டேன் என்றார்.

மைனா, கும்கி எல்லாமே ஹிட்டு: மைனா, கும்கி, தொடரி கடைசியாக வெளியான செம்பி என அனைத்து படங்களுமே இசையுடன் சேர்ந்த படமாகவே எடுத்திருக்கிறேன். மைனா மற்றும் கும்கி படங்கள் நல்ல வெற்றிப் படங்களாக அமைந்தன. விரைவில் நான் யார் என்று காட்டும் அளவுக்கான படத்தை கொடுப்பேன் என்கிற நம்பிக்கை உள்ளது. நான் அவுட்டேட்டட் இயக்குநர் இல்லை எனக் கூறியுள்ளார்.
மோசமான கலாச்சாரம்: சில இயக்குநர்கள் லத்தின் அமெரிக்க படங்களை பார்த்துவிட்டு இங்கேயும் அதிகளவிலான டிரக்ஸ், ஆயுதக் கலாச்சாரம் இருப்பதாக சினிமாவில் வரம்பு மீறி காட்டுவது சரியான அணுகுமுறை அல்ல, அது நல்ல சினிமாவும் கிடையாது. நம்முடைய மண்ணில் அது போன்ற கதைகளே கிடையாது. ஆனால், முன்னணி ஹீரோக்களை வைத்து அப்படி படம் எடுத்து அதுபோன்ற படங்கள் தான் சிறப்பான படங்கள், பாக்ஸ் ஆபீஸ் படங்கள் என நினைப்பது எல்லாம் ரொம்பவே தவறான விஷயம். இயக்குநர்களுக்கு சமூகத்தின் மீதும், இயக்குநர்கள் மீதும் கொஞ்சமாவது அக்கறை வேண்டும், அதெல்லாம் இல்லாதவர்கள் தான் வெறும் ஆயுதங்களை மட்டுமே நம்பி படமெடுப்பார்கள் என மறைமுகமாக சில முன்னணி இயக்குநர்களையும் நடிகர்களையும் தாக்கியுள்ளார் பிரபு சாலமன்.

காலி பண்ணும் விமர்சனம் கூடாது: முன்பெல்லாம் தினசரியில் வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களுக்கு சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை தான் விமர்சனம் வரும். அதுவும், படத்தில் உள்ள பாசிட்டிவ் கருத்துக்கள் அதிகமாகவும், மைனஸ்களை குறைவாகவும் குறிப்பிட்டு, கடைசியாக பார்க்கலாம் என்றே முடிப்பார்கள். ஆனால், சமீப காலமாக உள்ள விமர்சகர்கள் பலர், ஆரம்பத்திலேயே, படம் வேஸ்ட்டு, ஃபிளாப், போய் பார்க்கவே பார்க்காதீங்க என்று சொல்வதெல்லாம் சினிமாவை அழித்துவிடும் என தனது கருத்தை முன் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











