ரிவ்யூ செய்ய 25 ஆயிரம்.. ப்ளூ சட்டை மாறனை நெருங்கவே முடியாது.. ஆதாரம் இருக்கு.. தனஞ்ஜெயன் ஆதங்கம்!
சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் சினிமா விமர்சகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில், திரைப்படங்களுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வழங்கச் சொல்லி நடிகர்கள் மட்டும் தயாரிப்பாளர்கள் சார்பாக பணம் தருவதாக சினிமா விமர்சகர்கள் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது சினிமா வட்டாரத்தில் பேசு பொருளான நிலையில், இது குறித்து Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி அளித்துள்ளார்.
அதில், நீயா நானாவில் சொன்னது உண்மை தான், ரிவ்யூ செய்வதற்கு பணம் கேட்கிறார்கள். இதனால் தான் சிறு பட்ஜெட் படங்களை யாரும் ரிவ்யூ செய்ய முன்வருவதில்லை. அதற்கு காரணம் அந்த படத்தை நேரம் செலவழித்து பார்க்க வேண்டும், பின் அந்த படம் குறித்து பேச வேண்டும். ஆனால், அதை யாரும் பார்க்க மாட்டார்கள், வீவ்ஸ் போகாது என்பதால் யாரும் விமர்சனம் செய்வது இல்லை.

பணம் கேட்கிறார்கள்: இப்போது சினிமாவின் நிலைமை வேறுமாதிரியாக சென்று கொண்டு இருக்கிறது. ஒரு படம் ஓட வேண்டும் என்றால், யூடியூபில் முன்னணியில் இருக்கும் சிலரின் வாயில் இருந்த அந்த படத்தின் பெயர் வந்தால் போதும் படம் ஓடிவிடும் என சில தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். இதற்காக சில யூடியூபர்களுக்கு பணத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒரு படம் குறித்து விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை யூடியூபர்கள் கேட்கிறார்கள். இதில், விதி விளக்காக இருப்பது ப்ளூ சட்டை மாறன் தான். அவர் பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார். நேரடியாக படத்தை பார்த்துவிட்டுத்தான் விமர்சனம் சொல்லுவார். அவரிடம் சென்று பணம் கொடுக்கிறேன் என்று சொன்னாலே அவ்வளவு தான், அவரிடம் யாருமே நெருங்க முடியாது. அவர் மேல் எனக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் இந்த விஷயத்தில் கண்ணியமான நபராக இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். நான் இப்படித்தான், சின்ன படமாக இருந்தால் என்ன, பெரிய படமாக இருந்தால் என்ன.. எல்லா படமும் ஒன்று தான் என தன்னுடைய விமர்சனத்தை நேர்மையாக தருகிறார் இப்படித்தான் ஒரு விமர்சகர் இருக்க வேண்டும்.
சினிமாவிற்கு செய்யும் துரோகம்: இன்றைய காலத்தில் அனைத்தையும் பணமாகத்தான் பார்க்கிறார்கள், சின்ன படத்திற்கு காசு வாங்கிக்கொண்டு புகழ்கிறார்கள். அதே பெரிய படத்திற்கு பணம் தரவில்லை என்றால், படம் சரி இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள். ஒரு விமர்சகர் பணம் வாங்கிக்கொண்டு இப்படி படத்தை விமர்சனம் செய்யலாம். இப்படி செய்பவர்கள் சினிமாவிற்கு துரோகம் செய்கிறார்கள். விமர்சகராக இருப்பவர்கள் தங்களது யூடியூபில் வீவ்ஸ் வரவேண்டும் என்பதற்கான கொரியன் படம், ஆங்கில படத்தை விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், தமிழ் நாட்டில் வரும் சின்ன சின்ன படத்திற்கு ஏன் பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்கிறார்கள். படத்தை விமர்சனம் செய்து தான், பெரிய யூடியூபராக வளர்ந்து இருக்கிறார்கள். அப்படி சினிமா போட்ட சோறுக்கு நேர்மையாக விமர்சனத்தை கொடுக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











