பராசக்தி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படுமா?.. தயாரிப்பாளர் தனஞ்செயன் இப்படி புட்டு புட்டு வச்சிட்டாரே!
சென்னை: விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஆகாஷ் பாஸ்கரன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸை தொடங்கி அதர்வா முரளியை வைத்து குறைவான பட்ஜெட்டில் இதயம் முரளி படத்தை ஆரம்பித்தார். அந்த படமே ரிலீஸ் ஆகாத நிலையில், அதற்குள் அடுத்ததாக தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தை தயாரிக்க ஆரம்பித்தார்.
மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பெரிய பட்ஜெட் படமான பராசக்தி படத்தையும் தயாரித்து வருகிறார். அடுத்ததாக பார்க்கிங் பட இயக்குநர் சிம்பு, கயாடு லோஹரை வைத்து இயக்கும் படத்தையும் டான் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது.

இப்படி அடுத்தடுத்து பல பெரிய நடிகர்களின் படங்களை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஆரம்பித்த நிலையில், அதிரடியாக கடந்த வாரம் அவரது வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஐடி ரெய்டு காரணமாக இட்லி கடை, பராசக்தி உள்ளிட்ட படங்கள் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்படுமா என்கிற கேள்விக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் பதில் அளித்துள்ளார்.
தலைமறைவான ஆகாஷ் பாஸ்கரன்: டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல பெரிய நடிகர்கள் படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த வாரம் அதிரடி ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டுக்கு பயந்து தலைமறைவு ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சவுக்கு சங்கர் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகி விட்டார் என பதிவிட்டுள்ளனர். ஆனால், இதுவரை ஆகாஷ் பாஸ்கரன் இதுகுறித்து தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் எந்தவொரு விளக்கத்தையோ அறிவிப்பையோ வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார்.

பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தம்: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பும் ஐடி ரெய்டை தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் போட்டியாக இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பராசக்தி படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? அல்லது பின் வாங்குமா? என்கிற கேள்விக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் பதில் அளித்துள்ளார்.
ஏதோ டிப் கிடைத்திருக்கும்: பெரிய ஆட்களை குறி வைத்து தான் எப்போதும் ஐடி ரெய்டுகள் நடைபெறும். ஒரே நேரத்தில் பல படங்களுக்கு ஒருவர் பணம் செலவு செய்கிறார் என்றால் அந்த ப்ணம் அவருக்கு எப்படி வருகிறது என்பதை ஆராயவே வருமான வரித்துறையினர் சோதனை செய்வார்கள். அமலாக்கத்துறையினருக்கு ஏதாவது டிப் கிடைத்திருந்தால் மட்டுமே இதுபோன்ற சோதனைகளில் ஈடுபடுவார்கள். சம்பந்தப்பட்டவர்களும் அதற்கு சரியான ஆவணங்களை கொடுத்து அந்த பஞ்சாயத்தை முடித்து வைப்பார்கள். இதற்கு முன்னதாக பல பிரபலங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஐடி ரெய்டுகள் நடைபெற்றாலும் அவர்கள் தொடர்ந்து சினிமாவிலும் அரசியலிலும் இயங்கிக் கொண்டு தானே இருக்கின்றனர். பராசக்தி மற்றும் இட்லி கடை படங்களுக்கு ஐடி ரெய்டால் பெரிதாக எந்த சிக்கலும் ஏற்படாது என்று தான் நினைக்கிறேன். இருந்தாலும், உண்மை என்பதை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரே விளக்கும் வரை பொறுமை காக்க வேண்டியது அவசியம் என்றார்.


Click it and Unblock the Notifications











