அழகிய ‘பேயாக’ நடிக்க ஆசை....: ராய் லட்சுமி
சென்னை: பார்ப்பவர்களின் நெஞ்சை படபடக்க வைக்கும் ‘‘பேய் வேடத்தில் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் நடிகை ராய்லட்சுமி.
லட்சுமிராயாக வலம் வந்து கொண்டிருந்தவர் சமீபத்தில் தனது பெயரை ராய்லட்சுமியாக மாற்றிக் கொண்டார். இவர் தற்போது முனி-3, அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
முனி, காஞ்சனா ஆகிய படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸ் தான், தற்போது முனி -3 படமான கங்காவை இயக்கி வருகிறார். இதையடுத்து இவர் ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா' என்ற படத்தை இயக்க உள்ளார்.
இதில், இடைவேளைக்கு முன்பு ஒரு படமும், இடைவேளைக்கு பின்னர் இன்னொரு படமும் இடம்பெறும் என்றும், ஒரு படத்துக்கு ‘கிழவன்' என்றும், இன்னொரு படத்துக்கு ‘கருப்பு துரை' என்றும் பெயர் சூட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ‘கருப்பு துரை' என்ற படத்தில் ராய்லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் தொடர்பாக ராகவா லாரன்சும், ராய்லட்சுமியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ராய்லட்சுமியின் பதிலாவது:-

பரபரப்பில்லையே....
கேள்வி:- சமீபகாலமாக உங்களைப்பற்றிய பரபரப்புகள் அடங்கியிருக்கிறதே... என்ன விஷயம்?
பதில்:- ‘‘நான் பரபரப்புகளில் இருந்து விலகி இருக்கிறேன். மூன்று மொழிப்படங்களில் நடித்து வரும் நான், நானுண்டு என் வேலை உண்டு என்று ஒதுங்கியிருக்கிறேன். அதனால், கிசுகிசுக்களுக்கு இடம்கொடுக்காமல் நடந்துகொள்கிறேன்.

நல்லவராக...
கேள்வி:- உங்களுக்கு வரப்போகிற கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?
பதில்:- நல்ல மனிதராக இருக்க வேண்டும்.

பதிலில்லை...
கேள்வி:- எப்படிப்பட்ட ஆண்களை உங்களுக்கு பிடிக்கும்?
பதில்:- ஆண்களைப்பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை.

அழகிய பேய்...
கேள்வி:- இப்போது வருகிற பெரும்பாலான கதாநாயகிகள் பேய் வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்களே?, அதுபோல் உங்களுக்கும் ஆசை இருக்கிறதா?
பதில்:- தமிழ் படஉலகில் இப்போது பேய் படங்கள் அதிகமாக வருகின்றன. அடுத்து வரஇருக்கும் ‘அரண்மனை'யும் பேய் படம்தான். அந்த படத்திலும் நான் நடித்திருக்கிறேன். ஆனாலும், நெஞ்சை படபடக்க வைக்கும் வகையில் முழுமையான ஒரு பேய் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.

மல்டி ஸ்டார் படங்கள்...
கேள்வி:- பெரும்பாலும் நீங்கள் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகத்தானே நடிக்கிறீர்கள்?
பதில்:- இப்போதெல்லாம் பல கதாநாயகிகள் அல்லது பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள்தான் வருகின்றன. படங்களுக்கான பட்ஜெட் தொகை அதிகரித்துக்கொண்டே போவதால், இதுபோன்ற ‘மல்டி ஸ்டார்' படங்கள் வருகின்றன' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











