Thug life: சின்மயின் குரலில் டிரெண்டான முத்த மழை பாடல்.. தடை ஏன்? கடுப்பான ராதா ரவி!
சென்னை: தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் பலரையும் மெய் மறக்க வைத்தது. சோசியல் மீடியாவில் எந்த பக்கம் சென்றாலும், இந்த பாடலைத்தான் பலர் ரசித்து கேட்டு வருகிற்னர். இப்படி வசீகரமான குரலை கொண்ட சின்மயி தமிழ் சினிமாவில் ஏன் இத்தனை காலம் பாடவில்லை, அவரை பாட கூடாது என தடை விதித்தது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நடிகர் ராதா ரவி இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ந் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பாடகி சின்மயி 'முத்த மழை' என்ற பாடலை பாடி இருந்தார். பாடலை கேட்ட அனைவரும் சின்மயின் குரலை கேட்டு மெய் மறந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அந்த பாடல் இருந்தது. 'தக் லைப்' படத்தில் இதே பாடலை 'தீ' பாடி இருந்தார். தீ பாடியதை விட சின்மயி பாடியது தான் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

பாடகி சின்மயி: இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இப்படிப்பட்ட குரலையா பாடவிடாமல் தடை வித்தீர்கள் என்று ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேள்வியெழுப்பி வருகின்றனர். மணிரத்னம் இயக்கிய கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடலை பாடி சினிமாவில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்த பல ஹிட் பாடல்களை பாடி இருந்தார். இதைத்தொடர்ந்து தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலிருந்து, அதன் தலைவர் ராதா ரவி, சின்மயினை நீக்கி தமிழ் படத்தில் பாட தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பல ஆண்டுகளாக சின்மயி தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் பாடி வருகிறார்.
தடை ஏன்?: முத்த மழை பாடலை மேடையில் சின்மயி பாடியதற்கு பின், அவருக்கு ஏன் தடை விதித்தார்கள் என பலரும் கேட்டு வரும் நிலையில், டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவரான ராதா ரவி Galatta Pink சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், தொகுப்பாளினி, பாடகி சின்மயி 70க்கும் மேற்பட்ட திரைப்படத்திற்கு டப்பிங் பேசி இருக்கிறார். அந்த படத்தில் இருந்தே 10 சதவிகிதம் டப்பிங் யூனியனுக்குத் தான் போகும், அப்படி இருக்கும் போது என்னால் 250 ரூபாயை சந்தாவாக கட்டமுடியாதா என்று சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும் போது சின்மயிக்கு தடை விதித்தது ஏன் என கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த ராதா ரவி, ஆண்டு சந்தா கட்டவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். அங்கே சென்று நான் வாழ் நாள் முழுக்க சந்தாவை கட்டிவிட்டேன் என பொய் சொன்னார். இதனால், தான் அவருக்கு தடை விதிக்கப்பட்டது என்றார்.
அவசியம் இல்லை: அப்போதும் விடாத தொகுப்பாளினி, நீங்கள் ஒரு மூத்த நடிகர், சின்ன பெண் சின்மயி, ஏதோ தவறு செய்துவிட்டார். அவரை அழைத்து, எதற்கு தேவையே இல்லாத பிரச்சனை சந்தா கட்டு என்று சொல்லி இருக்கலாம், அதை விட்டு விட்டு என் பேச்சை கேட்கவில்லை என்றால், வாழவே முடியாது என்று ஒருவரின் திறமையை அடியோடு அழிப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி கேட்டார். இந்த கேள்வியால் கடுப்பான ராதா ரவி, நீங்கள் நன்றாக கேள்வி கேட்கிறீர்கள், நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. ஏன் என்றால் இது ஒரு தேவையில்லாத 'வேஸ்ட் டாப்பிக்' இதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று பேட்டியில் இருந்து வெளியேறிவிட்டார்.


Click it and Unblock the Notifications











