படையப்பா உருவான கதை.. ஐஸ்வர்யா ராய்க்கு பிடிக்கல.. அடுத்த பார்ட் வருது.. ரஜினிகாந்த் ஓபன் டாக்!
சென்னை: தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளியான படையப்பா படத்தை எந்தவொரு ஓடிடிக்கும் கொடுக்கவில்லை என்றும் சாட்டிலைட் உரிமத்தையும் விற்கவில்லை என்றும் சன் டிவிக்கு ஒரு 2 முறை மட்டுமே கொடுத்தேன் என்றும் வரும் டிசம்பர் 12ம் தேதி 25 ஆண்டுகள் கழித்து வெளியாகும் படையப்பா படத்தை பார்த்து மகிழுங்கள் என ரசிகர்களிடம் மனம் விட்டு படையப்பா படம் உருவான மொத்த கதையையும் பேசியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஆடியோ வெளியீட்டு விழாக்களில் ரஜினிகாந்த் பேச்சையும் அந்த குட்டிக் கதையையும் கேட்கவே ஒட்டுமொத்த ரசிகர்களும் பிரபலங்களும் காத்திருப்பார்கள். இந்நிலையில், தனது 75வது பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகவுள்ள படையப்பா படத்திற்காக சுமார் 36 நிமிடங்கள் ரஜினிகாந்த் பேசி புரொமோஷன் செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் கதை படித்தவுடனே அதில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை மையமாக வைத்து ரஜினிகாந்த் உருவாக்கிய கதை தான் படையப்பா என்றும் முதலில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கவே முயற்சி செய்தேன் என்றும் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா ராய்க்கு பிடிக்கல: சுமார் 3 மாதங்கள் ஐஸ்வர்யா ராய் கால்ஷீட்டுக்காக காத்திருந்ததாகவும், நீலாம்பரி கதாபாத்திரத்தை அவர் செய்தால் தான் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், அதன் பின்னர், அவருக்கு விருப்பமில்லை என்பதை புரிந்துக் கொண்டு வேறு ஆளை பார்க்க முடிவு செய்தேன். கே.எஸ். ரவிக்குமார் ரம்யா கிருஷ்ணன் சரியா இருப்பாங்க சொல்லும் போது அரை மனசுடனே ஒப்புக் கொண்டேன். ஆனால், செட்டில் அவரது நடிப்பை பார்த்த பின்னர், இந்த கதாபாத்திரத்துக்கு இவர் தான் சரி என முடிவு செய்தேன் என்றார்.

அதிக சம்பளம் கேட்ட சிவாஜி: படையப்பா படத்தை பிரமாண்டமாக உருவாக்க முடிவு செய்தேன். அப்பாவாக சிவாஜி சார் நடித்தால் நல்லா இருக்கும் என்றேன். கே.எஸ். ரவிக்குமார் அவர் அதிக சம்பளம் கேட்கிறார் என்றார். இந்த படத்துக்கு அவர் தான் சரியாக இருப்பார் என சொல்லி அவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தேன். படப்பிடிப்பு தளத்தில் நான் இறந்தால் என் உடல் உடன் வருவியாடான்னு உரிமையுடன் கேட்டார். ஏன்ப்பா.. இப்படியெல்லாம் பேசுறீங்க என்றேன். அதன் பின்னர், அவர் மறைந்த நிலையில், வேறு யார் உடலுடனும் நான் அப்படி போனதில்லை, பிரபு, ராம்குமார் உடன் நானும் கூடவே போனேன் என்றார்.அந்த காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
படையப்பா 2 வரும்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உன்னை பழிவாங்காம விடமாட்டேன் என நீலாம்பரி சொல்லி செத்துருப்பாங்க. அதனால், படையப்பா 2 கதையை ரெடி பண்ணிட்டு வரேன், எல்லாம் சரியாக அமைந்தால் படையப்பா 2 கண்டிப்பா வரும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் பேசும் முழுமையான வீடியோவை பார்த்து ரசியுங்கள். படையப்பா ரீ ரிலீஸ் படத்தை வெளிநாடுகளில் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் வெளியிடுகிறது. கில்லி ரீ ரிலீஸ் வசூலை படையப்பா ரீ ரிலீஸ் கடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











