பாரதிராஜாவுக்கு என் நடிப்பு பிடிக்காது.. இரங்கல் தெரிவித்ததும் ரஜினிகாந்த் எமோஷனல் பேச்சு
சென்னை: என்னுடைய 50 ஆண்டுகால நண்பர் பாரதிராஜாவின் மறைவு மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது. தமிழ் திரையுலகுக்கும் அவரது மறைவு பேரிழப்பு என பாரதிராஜாவின் திருவுடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் பாரதிராஜாவின் வீட்டுக்குச் சென்று நேரில் அஞ்சலி செலுத்தி விட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 16 வயதினிலே படத்தில் பாரதிராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்ததை தமிழ் சினிமா உள்ளவரை யாருமே மறக்கமாட்டார்கள்.
பாரதிராஜாவுக்கு அஞ்சலி: தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவுடன் காணப்பட்டார். அவரது மகன் மனோஜ் உயிரிழந்தது அவரை மேலும், பாதித்தது. இந்நிலையில், பாரதிராஜாவின் மறைவு செய்தி அறிந்ததுமே நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்து பாரதிராஜா குறித்து எமோஷனலாக பேசிச் சென்றார்.
உன் நடிப்பு பிடிக்காது: பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 50 ஆண்டுகால நண்பர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் எண்ணற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரை உருவாக்கிய இமயம். தமிழ் சினிமாவில் யாருக்கு பிரச்னை என்றாலும் முதல் நபராக குரல் கொடுத்து போராடக்கூடியவர். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவரது படைப்புகளை யாரும் மறக்கமாட்டார்கள்.
தனிப்பட்ட முறையில் அவர் ஒரு குழந்தை மாதிரி, உள்ளே எது இருக்கோ அதை ஓபனா சொல்லிடுவாரு.. புடிச்சா புடிச்சது, புடிக்கலைன்னா இல்லை. என்னை பற்றியும் நிறைய விமர்சனங்கள் வச்சிருந்தாரு.. ரஜினி உன்னை எனக்கு பிடிக்கும்.. உன் நடிப்பு பிடிக்காது அப்டின்னே சொல்வாரு. அவர் கூட இருந்தாலே சந்தோஷமாக இருக்கும். எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, சிவாஜி உள்ளிட்டோருக்கும் அவரை ரொம்பவே பிடிக்கும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என ரஜினிகாந்த் கூறிச் சென்றார்.


Click it and Unblock the Notifications