தொல்லை தரும் முதல் மனைவி.. புலம்பும் ராஜ்கிரண்!

என் ராசாவின் மனசிலே, அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற வெள்ளி விழாப் படங்களின் மூலம் தொண்ணூறுகளில் ரஜினி, கமலை விட அதிக சம்பளம் வாங்கிய இயக்குனராகத் திகழ்ந்தவர் ராஜ்கிரண். மிகச் சிறந்த நடிகர், வெற்றிகரமான இயக்குனர், முதல் நிலைத் தயாரிப்பாளர்- வினியோகஸ்தர் என உச்சத்தில் இருந்தார்.
ஆனால் இவை அனைத்தையும் சிதைத்தது விஜயகுமார் மகள் வனிதாவை ஜோடியாகப் போட்டு அவர் எடுத்த மாணிக்கம் படம். கடன் சுமை அழுத்த, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரும் சரிவைச் சந்தித்தார்.
குடும்ப வாழ்க்கையில் அவருக்கு சிக்கல்கள் இருந்தாலும், நடிப்பை அது பாதிக்கவே இல்லை. தவமாய் தவமிருந்து, முனி, சண்டக்கோழி என இப்போதும் அவர் நடிக்கிற படங்களில், அவரே கதையின் மையமாகவும், ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவராகவும் திகழ்கிறார்.
கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, பத்மஜோதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் 9 வயதில், மகன் இருக்கிறான்.
ஆனால் தனது முதல் மனைவி தன்னை நிம்மதியாக வாழ விடாமல் மிரட்டி வருவதாக ராஜ்கிரண் புகார் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கும், என் முதல் மனைவி செல்லம்மாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், 8 வருடங்களுக்கு முன்பு அவரை நான் விவாகரத்து செய்து விட்டேன்.
இஸ்லாமிய முறைப்படி தலாக் சொல்லி விட்டேன். இதுபற்றி கீழக்கரை பெரிய குத்பா பள்ளிவாசல் ஜமாத் கமிட்டிக்கும், கீழக்கரை டவுன் ஹாஜிக்கும் முத்தலாக் கடிதம் அனுப்பி விட்டேன்.
என் முன்னாள் மனைவி கீழக்கரை என்.எம்.டி. தெருவை சேர்ந்த செல்லம்மா என்பவருடன் எந்த வகையிலும் என்னால் சேர்ந்து வாழ முடியாது என்பதை கடிதத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறேன்.
நான் கடனிலும், கஷ்டத்திலும் இருந்தபோதுதான் இதெல்லாம் நடந்தது. அப்போது என் முன்னாள் மனைவி விவாகரத்தை ஏற்றுக்கொண்டு, அவரும் எனக்கு தலாக் சொல்லிவிட்டார்.
தவமாய் தவமிருந்து படத்துக்குப்பின், சினிமாவில் நான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, கடன்களை எல்லாம் அடைத்து வருகிறேன். என் மனைவி பத்மஜோதியுடனும், மகன் நைனார் முகமதுவுடனும், நிம்மதியாக வாழ்கிறேன்.
அதைப் பொறுக்க முடியாமல், எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே கடந்த 8 வருடங்களாக என் முன்னாள் மனைவி பலவகைகளில் எனக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார். என்னைப்பற்றி வதந்திகளை பரப்பி வருகிறார். ஏறுமுகத்தில் இருக்கும் என் இமேஜைக் கெடுக்க வேண்டும் என்பதே அவருடைய ஒரே நோக்கம்.
சமீபகாலமாக எனக்கு கடிதம் மூலமும், போன் மூலமும் மிரட்டல்கள் வருகின்றன. இதுபற்றி நான் சென்னை நந்தம்பாக்கம் போலீசிலும், கீழக்கரை போலீசிலும் புகார் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் ராஜ்கிரண்.


Click it and Unblock the Notifications











