எதிர்நீச்சல் எங்கள் குடும்ப கதைதான்.. கடைசிவர அவரை பார்க்கல.. ரியல் எதிர்நீச்சல் குடும்பம் பேட்டி
சென்னை: Ethirneechal Family (எதிர்நீச்சல் குடும்பம்) சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களுக்கு மக்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அதிலும் சன் டிவி நெடுந்தொடர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மெட்டி ஒலி, கோலங்கள் என அந்த பட்டியல் நீளும். தற்போது அந்த லிஸ்ட்டில் சேர்ந்திருப்பது எதிர்நீச்சல் சீரியல்.கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம்தான் இந்த சீரியலையும் இயக்கிவருகிறார்.

பக்கா ரெஸ்பாஸ்: இந்த சீரியலுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆணாதிக்க சிந்தனையுள்ள ஒருவரின் கீழ் ஒரு குடும்பம் கட்டுப்பட்டு இருக்கிறது என்ற ஒன்லைனை வைத்துக்கொண்டு எபிசோடுக்கு எபிசோட் கலக்குகிறார் திருச்செல்வன். சீரியஸ்,காமெடி, எமோஷன் என அனைத்தையுமே கலந்துகட்டி சீரியலில் கொடுப்பதால் அதனை மக்கள் ரொம்பவே ரசிக்கிறார்கள்.
ஹைலைட் மாரிமுத்து: சீரியலின் உச்சக்கட்ட ஹைலைட்டே மாரிமுத்து ஏற்றிருந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம்தான். அதில் மாரிமுத்து மிகச்சிறப்பாக நடித்து அப்ளாஸை அள்ளிவந்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்னதாக அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.
உண்மை குடும்பம்: இதற்கிடையே ஆதி குணசேகரன் போன்று உண்மையில் ஒருவர் இருக்கிறார். இப்படி ஒரு குடும்பம் இருக்கிறது. தென் மாவட்டத்தை சேர்ந்த அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்ன விஷயங்களை கேட்டுத்தான் இப்படி ஒன்லைனை பிடித்தேன் என திருச்செல்வம் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த ரியல் எதிர்நீச்சல் குடும்பத்தினர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கின்றனர்.
பேட்டி: தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்ததுதான் அந்த குடும்பம். அண்ணன்,தம்பி என மொத்தம் நான்கு பேர். அம்மா, அப்பத்தா என அப்படியே எதிர்நீச்சல் குடும்பம்தான். அந்த குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இந்தப் பேட்டியை கொடுத்தனர். மூத்தவர் (ரியல் ஆதி குணசேகரன்) பேசுகையில், "சீரியலில் வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தின் மைய கரு நான் தான். பாரதி கண்ணன் என்பவர் திருச்செல்வத்தை என்னிடம் அறிமுகம் செய்துவைத்தார்.
அப்போது அவரிடம் நான் நான் பட்ட கஷ்டங்களையும், பிறகு தொழில் தொடங்கி சக்சஸ் ஆனதையும் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் நடத்துநராக பணியாற்றியிருக்கிறேன். தவிடு விற்றுக்கொண்டேதான் எஸ்.எஸ்.எல்.சி படித்தேன். அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார் என பல விஷயங்களை சொன்னேன். அதனையடுத்து அவர் உங்கள் கதையை சீரியலாக எடுக்கலாமா நீங்கள் தயாரிக்கிறீர்களா என கேட்டார். ஆனால் நானோ தெரியாத தொழில் செய்ய விருப்பமில்லை என்று மறுத்துவிட்டேன்.

நான் கரடு முரடானவன் இல்லை: அதனையடுத்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ செய்துகொள்ளுங்கள் என்றேன். அதை திருச்செல்வன் சிறப்பாக செய்கிறார்.சீரியலுக்கு ஏற்றவாறு மக்கள் ரசிக்கும் வகையில் கதை போக்கும் வசனமும் இருக்கிறது. அந்த ஆதி குணசேகரன் போல் நான் கரடு முரடானவன் இல்லை. நான் மென்மையானவர். அதேசமயம் நான் சொல்வதைத்தான் வீட்டில் எல்லோருமே கேட்பார்கள்.
ரியல் ஞானம், கதிர்: அவரைத் தொடர்ந்து சகோதரர்கள் பேசுகையில்," நான் இளைய சகோதரர். சீரியலில் எப்படி கதிர் குணசேகரனோடு வெளியில் செல்வாரோ அதேபோல்தான் நானும் என் அண்ணனுடன் வெளியில் போவேன். அண்ணன் வீட்டுக்குள் வந்தாலே அமைதிதான். பயப்படுவார்கள்" என்றார். மேலும் இரண்டாவது சகோதரர் பேசுகையில், "மாரிமுத்து இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர் அவரை தொடர்புகொண்டு சீரியல் பற்றியும், எங்களின் வீட்டு நிலவரத்தையும் சொன்னேன். ஒருமுறை அவரை நேரில் சந்திக்கவும் செய்தேன். அவர் இறந்தது வருத்தமாக இருக்கிறது. சீரியலில் எப்படி இப்போது அப்பத்தா சொத்து பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறதோ அதேபோல்தான் எங்கள் வீட்டிலும் இப்போது அப்பத்தா சொத்து பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது" என்றார்


Click it and Unblock the Notifications











